Last Updated : 29 Jun, 2017 10:17 AM

 

Published : 29 Jun 2017 10:17 AM
Last Updated : 29 Jun 2017 10:17 AM

இறைமை இயற்கை 06: பெய்யெனப் பெய்யுமா அன்பு மழை?

நீரை இறைவனின் வடிவமாக நினைத்து, நீர்நிலைகளைப் போற்றுவதன் மூலம் இறைவனின் மீதான பேரன்பை வெளிப்படுத்தி, சைவமும் வைணவமும் பேரின்பம் கண்டன.

‘ஆர்வுற்ற என்னை யொழிய என்னின் முன்னம் பாரித்துத் தான் என்னை முற்றப் பருகினான்’ என்கிறார் நம்மாழ்வார் (நாலாயிர திவ் யப் பிரபந்தம் – திருவாய்மொழி).

இறைவனைக் கண்டால் அவனை அப்படியே விழுங்கிவிடவே நினைத்திருந்தேன். ஆனால், அவன் எனக்கு முன்பே, தனது அன்பால் என்னை நீராக மாற்றி, அப்படியே முழுவதுமாக அள்ளிப் பருகிவிட்டான் என்று தனது இறைக் காதலை வெளிப்படுத்துகிறார் அவர்.

மாணிக்கவாசகரோ, இறைவன் திருவருள் மழையைப் பொழியக் கூடியவன் என்பதால், அவனை ‘மேகன்’ என்றே அழைக்கிறார். இந்த உலகியல் வாழ்க்கை என்னும் நீர் வேட்கை நீங்க வேண்டுமானால், தவம் என்கிற பெரிய வாயைக் கொண்டு நீரைப் பருக வேண்டும். அப்படியும் உலகியல் வாழ்க்கை என்கிற தாகம் தணியாவிட்டால், இறைவனை வேண்டுவோம். அவன் வானப் பேராற்றின் வெள்ளத்தைப் பாயச் செய்து, பேரின்பப் பெருநீர்ச் சுழிகளை ஏற்படுத்திப் பற்று என்கிற பெருங்கரையை அசைத்து இடித்திடுவான் என்பது மாணிக்கவாசகரின் இறையனுபவம் (திருவாசகம் – திருவண்டப் பகுதி – பாடல் வரிகள் 80 – 95).

நரம்புகள் நலமா?

ஈசனின் ஐந்து தொழில்களில் படைத்தல் தொழிலும் அழித்தல் தொழிலும் நீரின் மூலமாகவே நடக்கின்றன. இந்த உலகம் ஊழியால் அழியும்போது எழும் கடல் அலைகளில் சிக்கித் தவிப்போரிடம் ஈசன், ‘அலைவாயில் வீழாமல் அஞ்சலென் றானே’ என்கிறார் திருமூலர் (திருமந்திரம் – இரண்டாம் தந்திரம் – பிரளயம் - பாடல் 2).

சித்த மருத்துவக் கோட்பாடுகளின்படி, மனித உடலில் நீருக்கான உறுப்புகள் – (ஆண்களுக்கு) விந்துப்பையும் சிறுநீரகமும்; (பெண்களுக்கு) கருப்பையும் சிறுநீரகமும். இவற்றில் முதலாவது, படைத்தலுக்கானது; இரண்டாவது அழித்தலுக்கானது. இந்த இரண்டிலிருந்தும் தொடங்குகிற ஓர் உடம்பின் பயணம், இறுதிவரைக்கும் நீராலேயே அமைகிறது.

மனித உடலில் ஓடும் ரத்தத்தில் நீரும் காற்றுமே பெருமளவில் அடங்கி இருக்கின்றன. மற்ற பூதங்கள் அதில் ஒடுங்கி இருக்கின்றன. ‘அண்டமே பிண்டம்’ என்கிற திருமூலரின் தத்துவப்படி பார்த்தால், ரத்தம் ஓடும் நரம்புகளைப் பிண்டத்தின் நதிகள் என்று சொல்லலாம். அதேபோல, நீரோடும் நதிகளை அண்டத்தின் நரம்புகள் என்று சொல்லலாம்.

உள்ளத்தால் உணர்வோமா?

இப்படிப் பூமியின் நரம்புகளாக ஓடும் ஆறுகளை மனிதர்கள் பராமரிக்கும் விதம் வருந்தத்தக்கது. மணலை அள்ளி அள்ளியே ஆறுகளின் மடியில், பூமிக்குச் சவக்குழி தோண்டுவது, கழிவைக் கொட்டுவது, அதன் பாதைகளை ஆக்கிரமிப்பது, நீர்ப்பாதைகள் தூர்ந்துபோனால் நமக்கென்ன எனக் கண்டுகொள்ளாமல் இருப்பது… இப்படி ஆறுகளுக்கு மனிதர்கள் செய்யும் தீங்குகள் மன்னிக்க முடியாதவை.

உடலின் நரம்புகள் அடைபட்டால், உடம்பை விட்டு உயிர் நீங்கும். பூமியின் நரம்புகள் அடைபட்டால், பூமியை விட்டு மனிதர்கள் நீங்குவார்கள். மனிதர்கள் நலமான வாழ்க்கையை வாழ வேண்டுமானால், உடலால் மட்டுமல்லாமல், உள்ளத்தாலும் நீரைச் சார்ந்து இருக்க வேண்டும்.

உருகும் உள்ளம்

இளகுதல் என்றால் நீர் மிகுதல் என்று பொருள். எந்த ஒரு பொருளும் இளகிவிட்டது என்று சொன்னால், அதில் நீர் மிகுந்து அதன் கெட்டித்தன்மை மாறிவிட்டது என்று அர்த்தம். மனிதர்கள் இளகிய மனம் கொண்டவர்களாக இருக்க வேண்டுமானால், அவர்களின் உள்ளத்தில் அன்பு என்கிற நீர் பெருக்கெடுக்க வேண்டும். கருணை கொண்டு வாழ வேண்டுமானால், நெஞ்சில் ‘ஈரம்’ கசிய வேண்டும். மனிதர்கள் இன்பமான வாழ்க்கையை வாழ வேண்டுமானால், உடலிலும் உள்ளத்திலும் நீர் வற்றாமல் இருக்க வேண்டும்.

‘நீரா யலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே’

என்று திருக்குடந்தை ஆராவமுதனை நோக்கி நம்மாழ்வார் பாடுகிறார். என்னை நீராக மாற்றி, நான் கரைந்து போகும்படி என்னை உருக்குகின்ற இறைவனே என்று உள்ளம் உருகிக் கண் கசிகிறார்.

சக உயிர்களுக்காக உள்ளம் உருகுவது இறைவன் கொடுத்த பெருங்குணம்; சக உயிர்களுக்காக உள்ளம் உருகுவது இறைவனுக்குச் செய்யும் பெருந்தொண்டு.

எதை வைக்கப் போகிறோம்?

‘கங்கையைச் சடையுள் வைத்தார் கதிர்பொறி அரவும் வைத்தார்’

என்று ஐந்து ஆறுகள் வந்து கலக்கும் (தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு) ஐயாறப்பருக்குத் திருநாவுக்கரசர் தேவாரப் பதிகம் பாடியுள்ளார். காவிரி, வடவாறு, வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டியாறு என ஐந்து ஆறுகளுக்குத் தலைவனாக இருக்கும் ஐயாறப்பனை ‘கங்கைச் சடையன்’ என்கிறார் நாவுக்கரசர்.

ஆணவம், பெருமை, கோபம், வெறுப்பு, பொறாமை என வேறு எந்தக் குணத்தையும் மனிதர்கள் தலையில் தூக்கி வைத்துக்கொள்ளாமல், அன்பைத் தூக்கித் தலையில் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற கருத்தையே கங்கை என்கிற குறியீட்டுக்குள் அடைக்கிறார் நாவுக்கரசர்.

உள்ளம் உருகும் அளவுக்கு, மகிழ்ச்சி வெள்ளம் பெருக்கெடுக்கும் அளவுக்கு, அன்பைத் தூக்கித் தலையில் வைத்துக்கொள்ளும் ஒவ்வொருவருமே ‘கங்கைச் சடையர்தான்’.

(அடுத்த வாரம்: இறையன்பின் வெப்பம் உணர்வோம்)
தொடர்புக்கு: b.kalanidhi@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x