Last Updated : 15 Jun, 2017 09:53 AM

 

Published : 15 Jun 2017 09:53 AM
Last Updated : 15 Jun 2017 09:53 AM

இறைமை இயற்கை 04: உண்மை உணர்த்திய கருங்கொண்டல்காரன்

உலகு சூழ் ஆழிக்குத் திடீரென ஓர் எண்ணம் தோன்றியது. ‘இந்த உலகத்தின் நீர்நிலைகளிலேயே கடலாகிய நானே பெரியவன்’ என்பதுதான் அது. தனது உடல் எவ்வளவு பெரியது எனக் கடல் கர்வம் கொண்டது. தனது மடியில்தான் எத்தனை எத்தனை உயிர்கள் வாழ்கின்றன என்கிற எண்ணம், கடலுக்குச் செருக்காக மாறியது. இதைக் கடல் வெளிப்படையாக அறிவித்தபோது, நதிகளுக்குக் கோபம் வந்துவிட்டது.

பல நூறு மைல்களுக்கு அப்பால், எங்கோ வழியும் நீரை நாங்கள் உன்னிடம் கொண்டுவந்து கொட்டாவிட்டால், உனக்கு எங்கிருந்து கிடைக்கும் பெருமை? உனக்கு ஏது செல்வம் என்று கடலிடம் நதிகளெல்லாம் சண்டைக்கு வந்துவிட்டன.

இதைத் தூரத்திலிருந்து கவனித்த சிற்றாறுகள், ஓடைகள், கால்வாய்கள் போன்றவை உடனடியாக ஒன்று கூடின. நதிகளின் கடமை, நாட்டுக்கு வளம் சேர்ப்பது. எங்களைப் போன்ற சிற்றாறுகளும் ஓடைகளும் கால்வாய்களும் இல்லாமல் நதிகள் எப்படி நாட்டுக்கு நல்லது செய்துவிட முடியும் என அவை உரிமைக்குரல் எழுப்பின. அந்தக் குரலின் ஒலி கேட்டுக் கூடிய குளங்கள், குட்டைகள், கண்மாய்கள் போன்றவையும் சிற்றாறுகளின் கூட்டணியில் சேர்ந்துகொண்டன.

அப்போது ஒரு சிரிப்பொலி கேட்டது. அது அருவியின் குரல். அருவி சொன்னது, மலைகளில் இருக்கும் வெள்ள நீரை நதிகளிடம் கொண்டுவந்து சேர்ப்பதே நாங்கள்தான். நீருக்கு ஏது வீழ்ச்சி? மேலிருந்து கொட்டும் நீரில் எத்தனை வேகத்தை எடுத்துவருகிறோம்? அது நீருக்கு நேரும் எழுச்சி! எனவே, நாங்களே பெரியவர்கள் என்றது அருவி.

நீர் பஞ்சாயத்து

நீர் சண்டை, நெடுஞ்சண்டை ஆனது. பரம்பொருளின் ஆலமர மண்டபத்தில் நீர் நிறைந்த சொம்புடன் கூடியது பஞ்சாயத்து.

‘நீருக்கு நிலைகளாய் இருக்கும் எங்களில் யார் பெரியவர் என்பதில் சச்சரவு. எனவே, எங்களது சண்டையை நீர்தான் தீர்க்க வேண்டும்’ என்று இறைவனிடம் முறையிட்டது கடல். மற்ற நீராதாரங்களும் அதை ஆமோதித்தன.

இறைவன் கேட்டார், ‘இது தொடர்பாக உங்களில் ஒருவனாகிய வான் மழையின் கருத்தைக் கேட்டீர்களா?’

‘இல்லை’ என்றது கடல். இறைவன் சொன்னார், வான் மழையின் கருத்தை அறியாமல், இந்த வழக்கு நீதி பெறாது. நான் வேறு ஒரு பணிக்காக வான் மழையை வேற்றுலகுக்கு அனுப்பியிருக்கிறேன். அது வருவதற்குச் சில ஆண்டுகள் ஆகும். அதுவரைக்கும் எல்லோரும் இங்கேயே காத்திருங்கள் என்று சொல்லிவிட்டு, அவர் புறப்பட்டார்.

நம்மில் பெரியவன்

கடல் முதலாக, அருவி ஈறாக அனைத்தும் காத்திருந்தன. ஆனால், கருங்கொண்டல்காரன் மட்டும் வரவே இல்லை. ஆண்டுகள் கடந்தன, அருவியின் தண்ணீர் குறையத் தொடங்கியது; நதிகள் வற்றத் தொடங்கின; சிற்றாறுகளும் ஓடைகளும் ஏரிகளும் கால்வாய்களும் குளங்களும் குட்டைகளும் காயத் தொடங்கின. கடலின் உடல் மெலிந்தது.

அப்போதுதான் அனைத்தும் உணர்ந்தன, நம்மிலும் பெரியவன் வான் மழைதான் என்பதை.

இறைவனின் படைப்பில் எது சிறந்தது என்ற கேள்வியே இழிவானது. மண்ணில் நீர் வளத்தைப் பெருக்கும் அனைத்து நீராதாரங்களுமே சிறந்தவைதான். ஆனால், வான் மழை சிறப்பிலும் சிறப்பானது. ஏனென்றால், இறைவனின் படைத்தல் தொழிலும் அழித்தல் தொழிலும் மழையின் மூலமாகவே நடக்கிறது.

மிஞ்சியிருக்கும் தூய்மை

நீருக்கு நிலைகளாக விளங்கும் அனைத்தையும் மனிதர்களால் மாசுபடுத்த முடியும். குளங்களில் வீடு கட்ட, ஏரிகளை வீட்டு மனைகளாக்க, நதிகளின் மடிகளில் சேர்ந்திருக்கும் மணலைத் திருட, அருவிகளின் பாதைகளில் விடுதிகள் கட்ட, உச்சகட்டமாகக் கடலின் கருவறைக்குள் அணுக்கழிவுகளைக் கொட்ட மனிதர்களால் முடியும். ஆனால், மழை என்பது பொழியும்வரை, அதைத் தொடும் அதிகாரம் மனிதர்களுக்கு வழங்கப்படவில்லை. அதனால்தான் மழை இன்னும் மிச்சமிருக்கிறது, இறைவனின் உள்ளத்தைப் போலவே தூய்மையானதாக.

இந்த உலகத்தில் மேலானது என எதை வேண்டுமானாலும் நாம் நினைத்துக்கொள்ளலாம். வான் மழை மட்டும் பொய்த்துப் போனால், எந்த மேலானதும் கீழானது ஆகிவிடும். ஏனென்றால், இயற்கையின் வான் மழை என்பது இறைவனின் அருள் மழை.

தானச் சிறப்பு

கடவுள் வாழ்த்துக்கு அடுத்த இடத்தில் வான் சிறப்பை வைத்து, மழையின் மாண்பைச் சொல்லியிருக்கிறார் திருவள்ளுவர். அந்த அதிகாரத்தின் பத்துக் குறள்களும் வான் மழையின் அதிகாரத்தைப் பறைசாற்றுபவை. திருமூலரோ, தானச் சிறப்புக்கு முந்தைய இடத்தில் வானச் சிறப்பை வைக்கிறார்.

வரையிடை நின்றிழி வான்நீர் அருவி

உரையில்லை உள்ளத் தகத்துநின் றூறும்

நுரையில்லை மாசில்லை நுண்ணிய தெண்ணீர்

கரையில்லை எந்தை கழுமணி யாறே

(திருமந்திரம் – வானச் சிறப்பு – பாடல் 2)

வான் மழையைப்போல் பொழிகிறது, நம் தந்தையாகிய இறைவனின் அருள் மழை. அருவியைப் போல ஓங்கி விழும் அந்த அருட் புனலுக்குக் கரையுமில்லை, அதில் நுரையுமில்லை, மாசுமில்லை என்கிறார் திருமூலர்.

மனதில் எழுதுவோம்

இனி பெய்யும் ஒவ்வொரு மழைத் துளியும் மனிதர்களுக்கு உயிர்த் துளிகள். ‘நீரின்றி அமையாது உலகு’ என்ற வாசகத்தைப் பேருந்துகளில் எழுதுவதை நிறுத்திவிட்டு, மனிதர்கள் தங்களுடைய மனங்களில் எழுத வேண்டிய காலம் வந்துவிட்டது. இறைவனிடம் காட்டும் அன்பை நீரிடமும் நீர்நிலைகளிடமும் காட்ட வேண்டியது அவசியம்.

நீரைத் துதிப்பதும், நீர்நிலைகளைக் காப்பதும் பிறவிக்குப் பெருமை சேர்க்கும் திருப்பணி அல்ல; எதிர்கால மனித சமூகம் பிழைத்திருப்பதற்கான முதல் கடமை!

நீரைக் கல்லாக மாற்றிய சைவமும் நீரை விளக்காக ஏற்றிய வைணவமும் பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.

கட்டுரையாளர் தொடர்புக்கு
b.kalanidhi@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x