Last Updated : 01 Jun, 2017 10:04 AM

 

Published : 01 Jun 2017 10:04 AM
Last Updated : 01 Jun 2017 10:04 AM

இறைமை இயற்கை 02: கல்லாகிக் களராகிக் கானுமாகி

இறைவனைப் போலவே அந்தமும் ஆதியும் இல்லாத அண்டத்தின் கூறுகளை வெளி, காற்று, வெப்பம், நீர், நிலம் என்று வரிசைப்படுத்துகிறது தொல்காப்பியத்தின் அண்டவியல் கோட்பாடு. தொல்காப்பியருக்குப் பிறகு பல நூற்றாண்டுகள் கழித்து, ‘திருத்தாண்டகம்’ வாசிக்க வந்த திருநாவுக்கரசர், ஐம்பூதங்களை இறை வழியில் நின்று எடுத்தியம்புகிறார்.

எப்போதும் இருக்கக்கூடிய நிலமாகவும், தணிக்கும் நீராகவும், எரியும் தீயாகவும், வீசும் காற்றாகவும், விரியும் வானாகவும் இறைவனே இருக்கிறான் என்கிறது நாவுக்கரசர் தேவாரம். அத்துடன், ஒவ்வொரு பூதத்திலும் இறைவனின் தன்மை எப்படி நிறைந்திருக்கிறது என்பதையும் அவர் விவரிக்கிறார்.

‘கல்லாகிக் களராகிக் கானு மாகி’ என்று தொடங்கி, ‘நிமிர்ந்தடிகள் நின்றவாறே’ என்று முடியும் நெடிய பாடலில், நிலத்தில் என்னென்ன வகையிலெல்லாம் இறைவன் குடிகொண்டிருக்கிறான் எனப் பட்டியலிடுகிறார்.

மலையாகவும், களர் நிலமாகவும், காடாகவும், புல்லாகவும், புதராகவும், பூடு (சிறிய வகைச் செடி) ஆகவும், மக்கள் வசிக்கின்ற நகரமாகவும், அந்த நகரத்தின் பல்வேறு செயல்பாடுகளாகவும், அந்த நகரத்தின் அழிவாகவும் இறைவனே இருக்கிறான் என்பது நாவுக்கரசரின் திருவாக்கு.

மலைகளைப் பார்க்கும் போதெல்லாம், அவை என் கண்களுக்குக் கற்களாகத் தெரிவதில்லை. மலைகளை எழுந்து நிற்கும் இறை என்றே நினைத்துக் கொள்கிறேன்.

மலைகளின் உயரமே மனிதர்களுக்கு ஒரு செய்திதான். மலைகளில் ஏற வேண்டுமானால் குனிந்து நடக்க வேண்டும். மலைகளில் இருந்து கீழே இறங்க நினைத்தால், நிமிர்ந்து நடக்க வேண்டும். இறையை அடைய வேண்டுமானால், உள்ளத்தில் பணிவு முக்கியம் என்பதையும், ஆணவம் மிகுந்தால் தாழ்வு நிச்சயம் என்பதையும் மலைகளின் உயரங்கள் பறைசாற்றுகின்றன.

புவிக்கு ஈர்ப்பு விசை உண்டு என்பது எல்லோருக்கும் தெரியும். மலைகளுக்கு அவை கூடுதலாகவே உண்டு. மலைகள் பிரபஞ்ச ஆற்றலை ஈர்த்துத் தன்னகத்தே வைத்துக் கொண்டு, அவற்றை வெளிப்படுத்திக் கொண்டே இருக்க வல்லவை. மலைகள் பேராற்றலின் சேமிப்புக் கிடங்குகள். மலைகள், அன்னையின் மடிகள்; இறையாற்றலைத் தேடும் உயிர்களையெல்லாம் அவை அரவணைக்கின்றன.

தமிழ்நாட்டின் சதுரகிரி, வெள்ளியங்கிரி, பருவதமலை, பழநிமலை, மருதமலையில் தொடங்கி, உத்தராகண்டின் இமயமலையில் உறைந்துள்ள கேதார்நாத், பத்ரிநாத் வரைக்கும் மலைக் கோயில்கள் மகத்துவம் மிக்கவையாக இருப்பதன் பின்னால், மலைகளின் ஈர்ப்பு விசையும் வெளிப்படுத்தும் விசையும் இருக்கின்றன.

இறையோடு உரையாட மலைகள்

தமிழ்நாட்டுச் சித்தர்களில் பலரும் இறையோடு உரையாட மலைகளையே தேர்ந்தெடுத்தனர். அகத்தியர் பொதிகை மலையிலும், பாம்பாட்டிச் சித்தர் மருதமலையிலும், போகர் பழநிமலையிலும், மச்சமுனி திருப்பரங்குன்றத்திலும், ராமதேவர் அழகர்மலையிலும், குதம்பைச் சித்தர் திருக்கழுக்குன்றத்திலும், இடைக்காடர் திருவண்ணாமலையிலும் தவமியற்றியவர்கள் ஆவர். மலைகள், நிலமகளின் மார்புகள்; இறைத்தாகம் கொண்ட உயிர்களுக்கெல்லாம் அவை ஆற்றல் நிறைந்த அமுதத்தை ஊட்டும் என்பதை சித்தர்கள் நன்கறிந்தவர்கள்.

தமிழ்ச் சித்தர்கள் மட்டுமல்லர், இஸ்ரேலின் இயேசுநாதரும் தன் பயணத்தை மலையில் இருந்தே தொடங்கி, இறுதியில் உலகம் முழுமைக்குமாய் ஆனவர். யோர்தான் நதியில் இறங்கி திருமுழுக்கைப் பெற்றுக்கொண்ட பின், இன்றைய வடக்கு இஸ்ரேலின் மலைப்பாங்கான பகுதிக்குச் சென்று அங்கிருந்து மலைப் பிரசங்கத்தை மேற்கொண்டார். அவரது போதனைகளிலேயே மிகப் பெரியதாகவும், மிகச் சிறந்ததாகவும் போற்றப்படுவது மலைப் பிரசங்கம். மனித இனம் மகிழ்ச்சியான வாழ்வை வாழ்வதற்கான பாதையை, போதிப்பதற்கான பயணத்தை அவர் மலையில் இருந்து தொடங்கினார். அந்த வகையில் பார்த்தால், மலையில் இருந்து தொடங்கும் பாதை வாழ்க்கையில் ஒருபோதும் கீழிறங்குவதில்லை; மேல் நோக்கியே செல்கிறது.

மலைகளின் ஈர்க்கும் ஆற்றலையும், வெளிப்படுத்தும் ஆற்றலையும் கருத்தில் கொண்டுதான், கோயில்களின் மூலவர் திருமேனிகளைக் கருங்கற்களில் செதுக்கச் சொன்னார்கள் ஐந்திறம் படித்த ஆசான்கள் (ஐந்திறம் என்பது மயமாமுனியால் எழுதப்பட்ட கட்டடக் கலை நூல்).

கற்சிலைகள் ஏன்?

அருவ சிவ வடிவமாக இருந்தாலும், பாற்கடல் பரந்தாமனாக இருந்தாலும், அபிராமி அம்மையாக இருந்தாலும், பூமாதேவித் தாயாராக இருந்தாலும் அவர்களைக் கற்களில் செதுக்கிக் கோயில் வைத்தார்கள். இந்தக் கற்றளிகள், மனிதர்களின் எண்ண ஆற்றலை ஈர்த்துக்கொண்டு, தன்னகத்தே ‘சேமித்து’ வைத்திருக்கும் இறையாற்றலை வெளிப்படுத்தி, அவர்களுக்கு அருளிச் செய்யும் என்பதே இதன் பின்னாலிருக்கும் கருதுகோள்.

ராஜகோபுரத்தில் தொடங்கி, விமானம், திருச்சுற்று மாளிகை வரைக்கும் செங்கற்களால் கட்டப்பட்ட கோயில்கள்கூட உண்டு. ஆனால், கருங்கல்லில் செதுக்கப்பட்டால்தான் அது மூலவர் சிலை. வழிபாட்டில் கற்சிலைகளுக்கு இறைவனுக்கு நிகரான இடமுண்டு. எனவே, கோயில்களில் உள்ள ஒவ்வொரு சிலையும் மலைகளின் குழந்தைகள்; இறை ஆற்றலின் துண்டுகள்.

அரங்கனின் மீது அழியாக் காதல் கொண்டிருந்த ஆண்டாள்,

‘நடையொன்றில்லா உலகத்து நந்தகோபன் மகனென்னும்

கொடிய கடிய திருமாலால் குளப்புக்கூறு கொளப்பட்டு…’

என்று திருமாலின் இதயத்தைக் கல் நெஞ்சம் என்கிறார் ஆண்டாள். (நாச்சியார் திருமொழி).

இறைவன் தன்னைக் காணாமல் இருக்கிறான் என்பதற்காக மட்டும் இறைவனின் நெஞ்சத்தைக் ‘கல்’ என்று சொல்லவில்லை; ஆற்றலை ஈர்க்கும் கல்லாக இருந்து, தனது நெஞ்சத்தை ஈர்த்துக்கொண்டவனும், ஆற்றலை வெளிப்படுத்தும் மலையாக இருந்து தனக்கு அருள் மழை பொழிபவனும் அவனே என்கிறார் ஆண்டாள்.

இன்றைக்கும் உலகம் முழுக்கப் பல்வேறு காரணங்களால் மலைகள் சிதைக்கப்படுகின்றன. மனிதப் பயன்பாட்டுக்காக இறையின் வடிவமான மலைகளைச் சிதைக்கலாம் என்பது ஊழிச் சிந்தனை.

திருமூலர் சொல்வது போல,

‘கருவரை மூடிக் கலந்தெழும் வெள்ளத்

திருவருங் கோவென் றிகல இறைவன்…’ (திருமந்திரம் – பிரளயம்)

ஊழியின்போது, பல்வேறு கரிய மலைகளையும் மூழ்கடிக்கும் வெள்ளம் மேலெழும் என்றால், மனிதர்களின் ஊழிச் சிந்தனையை மூழ்கடிக்கும் இறையருள் வெள்ளம் எழத்தான் வேண்டும்.

***

நிலத்தைப் போலவே தழுவக் குழைந்த நாதராய் விளங்கும் காஞ்சிபுரம், திருக்கச்சியேகம்பர நாதரையும், அந்தியில் நிலம் தனது உடற்சூட்டைத் தணித்துக் கொள்வதுபோல, திருவந்திக்காலப் பூசையின்போது சிறப்பு செய்யும் திருவாரூர் தியாகேசரையும் அடுத்த வாரம் தரிசிப்போம்.

(அடுத்த வாரம் தொடரும்)
தொடர்புக்கு: b.kalanidhi@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x