Last Updated : 11 May, 2017 10:50 AM

 

Published : 11 May 2017 10:50 AM
Last Updated : 11 May 2017 10:50 AM

ஆலயம் ஆயிரம்: பாதாளம்வரை லிங்கம்

பூமியில் அனைத்து ஜீவராசிகளையும் காக்கும் கடவுளான நாராயணனுக்கு திடீரென்று சிவனின் பாதத்தைத் தரிசிக்க வேண்டும் என்று ஓர் ஆசை உதித்தது. சிவபெருமானும் அதற்கு இசைவு தெரிவிக்க, பூமிக்கடியில் இருக்கும் அவரது பாதத்தைக் காண வராக அவதாரம் எடுத்தார். தனது முகத்தால் பூமியில் துவாரம் ஏற்படுத்தி, அவ்வழியே உள்ளே சென்றார். ஆனால் பாதத்தைத் தான் காண முடியவில்லை. சற்றே விரக்தி தோன்றியதால், பூமியின் மேலே வந்தார். அங்கே நாராயணன் சிவனை வேண்டித் தவம் புரிந்தார். நாராயணன் அன்று ஏற்படுத்திய துவாரம் தென்தமிழகத்தில் உள்ள அரித்துவாரமங்கலத்தில் உள்ளதாகத் தல புராணம் கூறுகிறது.

அரித்துவாரமங்கலம் மூலஸ்தானத்தில் சிவபெருமானின் அருகில் இந்தத் துவாரம் உள்ளது. ஹரியாகிய நாராயணன் வராக அவதாரம் எடுத்து பூமியைத் துவாரம் போட்டதால் இவ்வூர் அரி+துவார+மங்கலம் என்ற பெயர் பெற்றது. மூலவர் பாதேளேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

பாதாளம் வரை லிங்கம் நீண்டிருப்பதால் பாதாளேஸ்வரர் என்று பெயர் வந்தது. இத்தலத்தில் நவக்கிரகங்கள் கிடையாது. அனைத்தும் ஈசனே. இங்கு வந்து வழிபட்டால் நவக்கிரக தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. இங்கு இறைவன் திருமணக் கோலத்தில் அருள்பாலிக்கிறார். அம்பாள் ஸ்ரீ அலங்கார வள்ளி என்ற திருநாமத்தோடு கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

இத்திருத்தலத்தில் உள்ள தீர்த்தத்தில் நீராடிவிட்டு ஈசனையும் அம்பாளையும் தரிசித்தால் வடக்கே உள்ள ‘ஹரித்துவார்’ சென்று வந்த புண்ணிய பலன் கிடைக்கும், பாவங்கள் அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகம். இத்தலம் பஞ்சாரண்ய ஷேத்திரங்களில் ஒன்று.

பஞ்சாரண்ய ஷேத்திரங்கள்

முல்லை வனம் (திருக்கருகாவூர்), பாதரிவனம் (அவளிவநல்லூர்), வன்னிவனம் (அரித்துவாரமங்கலம்), பூளைவனம் (ஆலங்குடி), வில்வவனம் (திருக்கொள்ளம்புதூர்) ஆகிய ஐந்தும் பஞ்சாரண்ய ஷேத்திரங்கள். இந்த ஐந்து வனத் தலங்களையும் ஒரே நாளில் வழிபட்டால் சிவபெருமானின் பேரருளைப் பெறலாம் என்பர்.

இதற்கு, உஷத் காலமான காலை 5.30-6.30 மணிக்குள் முல்லை வனமான திருக்கருகாவூர் ஈசனையும், காலசந்தியான காலை 8.30-9.00-க்குள் பாதரிவனமான அவளிவநல்லூர் ஈசனையும், உச்சி காலமான மதியம் 11.30-12.00-க்குள் வன்னி வனமான அரித்துவாரமங்கலம் ஈசனையும், சாயரட்சை எனும் மாலை 5.30 - 6.30-க்குள் பூளைவனமான ஆலங்குடி ஈசனையும், அர்த்தயாமம் எனும் 7.30 - 8.00-க்குள் வில்வவனம் எனும் திருக்கொள்ளம்புதூர் ஈசனையும் வழிபடுவது பஞ்சாரண்ய தல வழிபாட்டு நெறியாகும்.

மூலவர் பாதாளேஸ்வரர் அம்பாள் அலங்காரவள்ளி. ஸ்தல விருட்சம் வன்னி மரம். தீர்த்தம் - பிரம்ம தீர்த்தம்.

எங்குள்ளது?

தஞ்சாவூர் - திருவாரூர் சாலையில் அம்மாப்பேட்டை எனும் ஊரில் இருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது அரித்துவாரமங்கலம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x