Published : 06 Apr 2017 09:34 AM
Last Updated : 06 Apr 2017 09:34 AM

அற்புதக் கதை சொல்லும் அழகான சிற்பங்கள் 24: புலியாக வந்த புண்ணியன்

பெரும்பற்றப் புலியூர் நம்பி என்பவர் எழுதிய திருவிளையாடற் புராணத்தில் இருக்கும் லீலை இது. திருவிளையாடல்களை நிகழ்த்திய சொக்கநாதப் பெருமான் உறையும் இடம் மதுரை. அந்த மதுரைக்கு அருகில் உள்ள திருப்பரங்குன்றத்தில் இந்த லீலையை விளக்கும் சிற்பம் மிக அழகாக வடிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே பன்றியாய் வந்த பரமன் பன்றிக்குட்டிகளுக்குப் பால் கொடுத்த சிற்பத்தைப் பார்த்தோம். அதற்கு அருகில் இந்த அற்புதமான சிலை இருக்கிறது.

இதில் சிவபெருமானைப் புலியாகக் காட்டாமல், சிவபெருமான் புலியைத் தூக்கிவைத்து, வலது கையில் மான்குட்டியை ஏந்தி, புலியின் முலையில் பால் அருந்த வைப்பது போன்று இருக்கிறது. இது அந்தச் சிற்பிக்குக் கிடைத்த காட்சியோ, உத்தரவோ என்னவென்று தெரியவில்லை. ஆனாலும் பார்ப்போர் மனதிலும் எனக்குமே கூடச் சிறுசந்தேகம் எழுந்தது. பாலுக்குத் தவித்த மான்குட்டியை எடுத்து, குட்டி ஈன்றிருந்த புலியிடம் சிவபெருமான் பால்குடிக்க வைத்திருப்பாரோ என்பதே அந்த சந்தேகம். ஆனாலும் சிவபெருமானுக்கு இதில் பெரிய பெருமை ஒன்றும் இல்லையே.

காஞ்சிக்கு வாருங்கள்

பெரும்பற்றப் புலியூர் நம்பியின் திருவிளையாடற் புராணமும் எங்கும் கிடைக்காத நிலையில், கதையும் சரியாகத் தெரியாத நிலையில் அந்த சொக்கநாதரை வேண்டிக்கொண்டேன். காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்குப் போனபோது, அதே பதினாறு கால் மண்டபத் தூணில் பன்றிபோல், நான் புலியாகவேதான் வந்தேன் என்பதைக் காட்டி அருளினார். இதுதான் சரி. காரணம் திருவிளையாடல் என்பது களத்திற்குத் தானே வந்திருந்து ஆடுவதுதானே. இருந்த இடத்தில் இருந்து புலியை மானுக்கும், மானை முயலுக்கும் பால் கொடுக்க வைப்பது எப்படி திருவிளையாடலாகும்.

பல இடங்களிலும் மானொன்று குட்டி போட்டதாம். பின் நீரருந்தப் போன இடத்தில் வேடன், அம்பு பட்டு இறக்க குட்டி பாலின்றி அழுததாம். இதைக் கண்ட சிவபெருமான், பக்கத்தில் இருந்த ஒரு பெண் புலியிடம் பால் கொடுக்கும்படி கூற அது மனமிரங்கிப் பால் கொடுத்ததாம். இப்படி எழுதவும், பேசவும் செய்கிறார்கள். இது பெரிய அபத்தமும் இழுக்கும் கூட.

சந்தேகங்களுக்கு விடை

அந்த மான் யார்? அந்தக் குட்டி(கள்) யார்? அவர்கள் செய்த கர்மவினை என்ன? அதைத் தீர்க்க பரமசிவனே புலி உருவில் வருகிறார் என்றால் அதன் காரணமென்ன? மான்குட்டிக்கு மான் வடிவிலேயே வந்து பால்கொடுத்து முக்தியளித்திருக்கலாமே. புலி வடிவில் வரவேண்டிய அவசியமென்ன? இந்த சந்தேகங்களுக்கு விடை இதுவரை கிடைக்கவில்லை. திருப்பரங்குன்றத்து சிற்பம் தரும் சந்தேகத்தை ஏகாரம்பர நாதர் தீர்த்துவிட்டார். அந்தச் சிற்பத்தில் கீழே புலிக்குட்டி பால் குடிப்பதாய்க் காட்டப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றத்துச் சிற்பத்திலும் இரண்டு புலிக்குட்டிகள் தாவுவது தெரிகிறது. விநாயகப் பெருமானும், முருகப் பெருமானும் குட்டியாக வந்து, தந்தைக்குத் துணை புரிகிறார்களோ என்னவோ? இன்னுமொரு விஷயம் இந்த திருப்பரங்குன்றத்துச் சிலையில் இன்னுமொரு மான் குட்டி துள்ளுவதைக் கூடக் காட்டியிருக்கிறார் சிற்பி. அப்படியானால் தாய் மானோடு சேர்த்து மூவருக்கு ஜென்ம சாபல்யம் கிடைத்திருக்கிறது சரிதானே. இதேபோன்று இந்தச் சம்பவத்தை மதுரையின் புதுமண்டபத்தின் கிழக்குப் பக்க முடிவில் வடித்து வைத்திருப்பதாகவும் கூறுவார்கள். நான் இன்னமும் பார்க்கவில்லை. எனது குருநாதர் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் வரைந்தபோது முழுமையாக

இருந்த புலி இப்போது ஒரு காலும் வாலும் உடைந்த நிலையில் இருக்கிறது. மேலும் இந்தச் சிற்பத்தில் பசியால் வாடிய மான்குட்டி, எப்படி வேகமாக பால் அருந்துகிறது என்பதை, அதன் கழுத்தின் பகுதியில் மிக அழகாகக் காட்டிய சிற்பி, பால் கொடுக்கும் சுகத்தைப் பன்றியின் கண்களில் வைத்ததுபோல் இங்கே சிவனாரின் உதடுகளில் காட்டியிருக்கிறார்.

புலியாக வந்தது சிவபெருமானே என்று அறிவதற்கு இது ஒன்றே போதும். பெருமானின் பெருமையைப் புரிந்த தெய்விகச் சிற்பி இப்படித்தான் காட்டுவான். வேறெப்படி இருக்க முடியும்? நாமும் கண்டு களிப்போம். உயிரினங்கள் மேல் கருணையோடு இருப்போம். எனக்கென்னவோ இந்த வாரம்தான் சிற்பங்கள் நிஜமாகப் பேசப்போகிறது என்றுத் தோன்றுகிறது. கதை தெரியாத இந்த வேளையில் அவற்றிடம் கேட்டுத்தான் பாருங்களேன். என்னதான் சொல்கிறார்கள் என்று பார்ப்போமே.!

(சிற்பங்கள் பேசும்…)

ஓவியர் பத்மவாசன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x