Published : 30 Mar 2017 10:25 AM
Last Updated : 30 Mar 2017 10:25 AM

அற்புதக் கதை சொல்லும் அழகான சிற்பங்கள் 23: முப்புரம் எரித்த முக்கண்ணன்!

தாரகாஷன், கமலாக்ஷன், வித்துன்மாலி என்றும் மூன்று அசுரர்கள் தேவலோகத்தைத் தம் கட்டுப்பாட்டில் கொண்டுவரத் தலைப்பட்டு, அதன் காரணமாக யுத்தம் செய்து, மூக்குடைபட்டுத் தோற்று ஓடினர். அதனால் ஏற்பட்ட அவமானத்தால், எப்படியாவது தேவர்களை அடிமையாக்கி, ஆண்டே தீருவது என்ற வைராக்கியம் பூண்டு அதற்கான வழிகளைத் தேடி அலைந்து கொண்டிருந்தனர். அவர்கள் குலகுருவான சுக்கிர பகவானைப் பணிந்து வழிகேட்க, அவரும் சிவ பெருமானை பணிதல் ஒன்றே வழி. நீங்கள் மூவரும் பூலோகம் சென்று கெடிலநதி பாயும் வடகரையில் ‘திருவதிகை’ என்ற தலம் உள்ளது. அங்கு சென்று, மனமொத்து, சித்தசுத்தியோடு, சிவனார் மனம் மகிழ, தவமும் பூஜையும் செய்து நினைத்ததை அடைவீர்களாக என்றார்.

பறந்து வந்த மூவரும் கெடில நதியில் நீராடி எழுந்து, சிவசின்னங்களைத் தரித்து பஞ்ச இந்திரியங்களையும் அடக்கி, பஞ்ச அக்னி மத்தியில் தவம் இருந்தார்கள். பூஜையென்றால் இதுதான் பூஜை; தவம் என்றால் இதுதான் தவம் என்று சொல்லுமளவுக்கு மிகச் சிறப்பான சிவ வழிபாட்டை செய்தனர். அவர்களின் தவ வலிமையால் இந்திரலோகமே அசைந்தது கண்டு திடுக்கிட்டான் இந்திரன். ரம்பை, ஊர்வசி, மேனகையை அழைத்து அவர்களின் தவத்தைக் கலைத்து வரும்படி அனுப்பினான்.

ஆனால் அவர்கள், முடிந்தவரை முயற்சித்துக் களைத்து போய் வந்தனர். இந்திரனுக்கு அவர்கள் மீது கோபம் வரவில்லை. மாறாக பயம் பற்றிக் கொண்டது. தோற்றவர்கள், ஜெயித்தால் அதிகப் பாதிப்பு ஏற்படும் என்பது அவனுக்குத் தெரியும். தேவர்களையெல்லாம் திரட்டிக் கொண்டு பிரம்மதேவரிடம் சென்று மண்டியிட்டான். தவம் செய்யும் மூவரைப் பற்றி கூறி, “அவர்கள் முன் சிவனார் தோன்றி வரமளிக்கும்முன், நீங்கள் போய் அவர்களுக்கு வரம் கொடுத்து வரவேண்டும். சிவபெருமான் போனால் அள்ளி வழங்கிவிடுவார். என்னென்ன வரமெல்லாம் கொடுப்பாரோ...?! ஏதாவது உபாயம் செய்யுங்கள் சுவாமி!” என்று மன்றாடினார்கள்.

சாகாவரம் கேட்ட அசுரர்கள்

பிரம்மதேவரும் இதனால் தமக்கும் பாதிப்பு வரும் என்பதை உணர்ந்து திருவதிகை நோக்கி வந்தார். என்ன வரம் வேண்டுமென்றார்! சாகாவரம் கேட்டார்கள். “அது என்னால் ஆகாதப்பா! வேறு வரம் கேளுங்கள்! இது சிவனால் மட்டுமே அருள முடியும்” என்றார். கோபம் கொண்ட அசுரர்களோ, “பின் எதற்கு நீர் வந்தீர். நாங்கள் சிவபெருமானை நோக்கித்தானே தவம் பண்ணினோம்” என்றார்கள். “பறக்கும் மூன்று கோட்டைகள் வேண்டும், தேவர்களெல்லாம் எமது அடிமைகளாக வேண்டும்” என்றார்கள்.

தந்தோம் என்று அவசரமாய் கூறி வேகமாக மறைந்துகொண்டார். விஸ்வகர்மா வடித்துக் கொடுத்த கோட்டைகள் பறந்து வந்தன. கிங்கரர்கள் வாத்தியம் முழங்க ரம்பை, ஊர்வசி, மேனகையின் ஆட்டம் தொடங்கியது. சகல வசதிகளும் கொண்ட கோட்டையைக் கண்டு பூரித்துப் போனார்கள். காமதேனுவைக் கொண்டுவந்து கட்டி வைத்தார்கள். கற்பக மரத்தைப் எடுத்துவந்து நட்டு வைத்தார்கள். சங்கநிதி, பதுமநிதியை வாசலில் இட்டு வைத்தார்கள். பறந்தபடி மற்றைய லோகங்களையும் அடிமைப்படுத்திக்கொண்டார்கள். கூடவே சிவ பூஜையையும் விடாது பண்ணினார்கள்.

அசுரர்களின் அட்டகாசம் தொடங்கியது

தொடர்ந்த நாட்களில் அவர்களது அட்டகாசம் அதிகமானது. இப்போது முனிவர்கள், ரிஷிகளை எல்லாம் கைவைக்க ஆரம்பித்தார்கள். அதி பயங்கர சிவ பக்தர்களாயிருந்த காரணத்தினால் முனிவர்கள் கூட மவுனம் காத்தனர். ஏவல் புரிந்தனர். இந்திரன் மீண்டும் தேவர்களையெல்லாம் அணி சேர்த்து வைகுந்தம் போனான். மஹாவிஷ்ணுவிடம் முறையிட்டான்; அவரும் எல்லாவற்றையும் காது கொடுத்துக் கேட்டு, “இந்திரா! இவர்களை அடக்குவதோ அழிப்பதோ அந்த பரமேஸ்வரனால்தான் முடியும். அனாலும் இவர்களோ தீவிர சிவ பக்தர்களாகவும், மனமொன்றிப் பூஜை பண்ணுபவர்களாகவும் இருக்கிறார்கள்.

பரமேஸ்வரன் வந்தாலும் இவர்களை அழிப்பாரோ இல்லை மேலதிக வரங்களை அளிப்பாரோ! யாரறிவார். தற்போதைக்கு! நான் சென்று அவர்களிடமிருந்து சில இன்னல்களை நீக்கி, பூஜைகளையும் நிறுத்தி அதன்பின் சிவனாரை வைத்தே அழிக்க வைக்கிறேன்!” என்றார். செயலில் இறங்கினார். மாயம் புரிந்தார். ஏதோ ஒரு மத குருபோல் வந்து, நாரதரையும் மாணவனாக்கித் துணைக்கு வைத்துக் கொண்டார். சில பல அற்புதங்களைப் புரிந்து மயக்கினார். எல்லோரையும் சிவ பூஜையை மறக்கும்படி செய்தார். ஆனாலும் அந்த மூன்று பேரும் இதற்கு மயங்கினாரில்லை.

தன் வேடம் கலைத்து அனைவரையும் அழைத்துக் கொண்டு கைலாசநாதரிடம் போனார் மஹாவிஷ்ணு. நடப்பவற்றை எடுத்துக்கூறி அவர்களால் கடைசியில் நமக்கே ஆபத்து வரும் என்று எச்சரித்தார். புன்னகை பூத்தார் பெருமான். விஸ்வகர்மாவை அழைத்தார். அழகிய தேர் ஒன்று பண்ணு என்றார்.

பணியைத் தொடங்கிய விஸ்வகர்மா, தேவாதி தேவன் பயணப்படுவது எப்படியிருக்க வேண்டுமோ, அப்படிச் செய்ய ஆரம்பித்தார். சூரிய, சந்திரர் சக்கரங்களாயினர். பிரம்மன் சாரதியானார். நான்கு வேதங்களும் குதிரைகளாயின. ப்ரணவம், குதிரை செலுத்தும் கோல் ஆயிற்று. மலை வில்லாக, வாசுகி நாணாயிற்று. மஹாவிஷ்ணுவோ அக்கி பகவானைக் கூராகவும் வாயு தேவனை முடிவாகவும் கொண்டு அம்பானார்.

அனைத்தும் தாயார் என்று பிரம்மா அழைக்கப் பரமசிவன் புறப்பட்டார். ஹர, ஹர கோஷம் வானைப் பிளக்க கம்பீரமாக வந்து ஏறிக் கொண்டார். ரதம் திருவதிகை வந்து அடைந்தது. கோட்டைகள் சுற்றிச் சுற்றி வந்து முன்னாலே நின்று கொண்டன. தன் பரம பக்தர்களான அசுரர்களைக் கண்டு சிறிது தயங்கினார். தயங்கிய சிவனாரைப் பார்த்து தேவர்கள் ஏளனப் புன்னகை சிந்தினார்கள். நாங்களெல்லாம் துணைக்கு வந்ததுமே தயங்கும் இவர் நாங்கள் இல்லை என்றால் என்னத்தைச் செய்வாரோ என்று சன்னமான குரலில் பேசிக் கொண்டார்கள்.

அனைத்தும் அறிந்த பரமசிவன் வில்லை எடுக்கவில்லை, நாணையேற்றவில்லை. சிறுமுறுவல் செய்தார் - சாம்பலானது முப்புரம்! தங்கம், வெள்ளி, இரும்பு உருகியோடி, பூமியோடு கலந்துகொண்டன. லேசாகக் கட்டை விரலை அழுத்தத் தேரின் அச்சு முறிந்தது. தேர் சாய்வதைக் கண்ட மஹாவிஷ்ணு அவர்களைத் தாங்கிக்கொண்டதாய் புராணம் கூறுகிறது.

தேரையும் முறித்துவிட்டு, பிள்ளைகளுக்குப் பூஜையும் பண்ணிக் களித்தார் பெருமான். தனது பரம பக்தர்களான மூவரையும் அழிக்காது இருவரைத் தனது வாயில் காப்போர்களாகவும் ஒருவனைத் தன்னடியில் வாத்தியம் வாசிப்பவனாகவும் வைத்துக் கொண்டார்.

இந்தச் சம்பவத்ததை திருமூலர் கூறும் போது, ஆணவத்தை இரும்பு என்றும், மாயையை வெள்ளி என்றும் கன்மத்தை பொன்னென்றும் கூறி, அன்பு-அறிவு-ஆற்றல் இவை மூன்றும் அசுரர்கள் என்றும் கூறுகிறார். இவை மூன்றும் அதிகமானால் அசுர சக்தி, அசுரத்தன்மையாக மாறிவிடும். மற்றைய தீய சக்திகள் எல்லாம் அழிக்கப்பட இவை மூன்றும் இறை சிந்தனையோடு இருந்ததால் தப்பித்துக்கொண்டு இறைவனோடு சேர்த்துக் கொண்டன. ஆணவம், கன்மம், மாயை இவற்றைத் தன் திருவருளால் சுட்டு எரித்து மற்றவற்றைத் தன்னோடு சேர்த்துக்கொண்டதுவே இது என்கிறார். அப்பு அணி செஞ்சடை ஆதிபுராதணன் என்று திருமந்திரம் கூறுகிறது.

எது எப்படியோ! திருவதிகை வீரட்டானம், இந்த முப்புரம் எரித்த இடமாகவே இன்றளவும் போற்றப்படுகிறது. தேவாரங்களிலும் பாடப்பட்டுள்ளது.

மேலும் பல காலமாக எனக்குள் குடைந்து கொண்டிருந்த ஒரு கேள்விக்கு இந்திருத்தலத்துள் உறையும் பெருமாள் பதில்கூறியுள்ளார். அர்த்தநாரீஸ்வரருக்கு கதை உண்டு. சங்கர நாராயணருக்கு? வரும் வாரத்தில் அதை சொல்கிறேன் எல்லாம் அவன் செயல்.

இங்கே காட்டப்பட்டுள்ள திரிபுராந்தக மூர்த்தி கோனேரிராஜபுரம் என்ற அற்புதமான தலத்தில் இருக்கிறார். இந்த வார்ப்பு சிற்பமும், பெருமை கொள்ள வைக்கும் என்ன ஒரு அற்புதமான அழகு. போர் செய்யப் போனாலும் நான் அழகாகவே போவேன் என்பது போல், தலையலங்காரத்தைப் பாருங்கள் அழகு கண்ணைப் பறிக்கிறது. அந்த முக அழகும் துல்லியமாகத் தெரியும் நெற்றிக் கண்ணும் அழகிய செவிகளும் என்ன சொல்ல..?! ஆனாலும் பலமூர்த்திகளோடு, மூர்த்திகளாக, கூண்டில் அடைக்கப்பட்டவர்கள் போல் அங்கே இருப்பதுதான் பெரும் வேதனை. கோயில் பூனை, தேவனை மதிக்காது என்பார்கள். நமது மூதாதையர் பெருமை நமக்குப் புரிந்தால்தானே!

காட்டப்பட்ட மற்றொரு அற்புதமான சிற்பம், தஞ்சையில் பெரிய கோவிலின் மாடங்களில் காட்டப்பட்டுள்ள சிவ ரூபங்களில் ஒன்று, மேலே மூலிகை வண்ணம் தீட்டப்பட்டுள்ளது. அழிந்தும் அழியாமலும் இருக்கும் வண்ணத்தோடு இருந்தாலும் அழகு பொங்குகிறது. இவற்றையெல்லாம் நேரில் சென்று தரிசித்து அனுபவியுங்கள் அன்பர்களே! அந்த சுகத்தை உங்கள் சந்ததியருக்கும் கொடுத்து மகிழுங்கள்... பெருமையோடு..!

(சிற்பங்கள் பேசும்…)

ஓவியர் பத்மவாசன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x