Published : 16 Mar 2017 10:16 AM
Last Updated : 16 Mar 2017 10:16 AM

அற்புதக் கதை சொல்லும் அழகான சிற்பங்கள் 21: பிச்சை எடுப்பதுபோல் வந்து பிச்சை இட்ட பெருமான்

பிட்சாடன மூர்த்தி என்ற பெருமானின் எழில் தோற்றம் வார்த்தைகளால் வர்ணிக்க இயலாத ஒன்று! இவரது கதையை, ஏற்கெனவே கஜசம்ஹார மூர்த்தி கதையோடு சேர்த்துப் பார்த்தோம். ஆபிசார ஹோமம் செய்த ரிஷிகளை நல்வழிப்படுத்த, மஹாவிஷ்ணுவோடு சேர்ந்து எடுத்த கோலம். அவர் மோகினியாக ரிஷிகளை மயக்க, இவரோ, ரிஷிபத்தினிகளைக் கிறங்கடித்தார். இது ஞானத் திருக்கோலம் . நாமெல்லாம் நினைப்பதுபோல் இது பிச்சை எடுக்கும் கோலமல்ல! பிச்சை போடும் கோலம்.

நன்கு யோசித்துப் பாருங்கள், பிச்சை எப்படி எடுக்க முடியும். பிச்சை என்பது கை ஏந்துவது, இரப்பது, - பிச்சை ஏற்பது -என்பதுதானே பொருத்தமாக இருக்க முடியும்? நீங்களாக எடுப்பது என்றால் அதில் உங்களுக்கு உரிமை இருக்க வேண்டும். அப்போதுதானே எடுக்க முடியும். ஆனாலும் பரமசிவனுக்கு இது பொருந்தவே செய்யும். அவரிடமிருந்தே இந்த ‘பிச்சை எடுப்பது’ என்ற வார்த்தை வழக்கத்திற்கு வந்திருக்கும் என்றே தோன்றுகிறது. எல்லாவற்றிற்கும் மேல் பரமசிவன் பிச்சை எடுப்பதுபோல் வந்து பிச்சை இட்ட பெருமான். ஆமாம், பிச்சை எடுத்தார். எப்படி? ரிஷிகளிடமிருந்த ஆணவம், அகந்தை, காமம், அறியாமையை எடுத்தார்.

ரிஷிபத்தினிகளிடமிருந்த ஆசையை, காமத்தை, கவனச்சிதறலை அவர்களிடமிருந்து பிய்த்து எடுத்தார்- பிச்சை எடுத்தார். மாறாக அறிவை, தெளிவை, பக்தியை, அன்பை, பண்பை, கற்பெனும் நிலையை ஞானத்தை இட்டுப்போனார். அதனால்தான் அவர் ஞான வடிவம். நீங்கள் இந்தத் திருக்கோலத்தைக் கூர்ந்து கவனிப்பீர்களாயின் மிக மிக அழகாக வடிக்கப்பட்டிருக்கும். முழு நிர்வாணமாக இருக்கும். அது ஏன் மற்றைய திருவடிவங்களுக்கு இல்லாத அழகை இங்கு காட்ட வேண்டிய அவசியம் என்ன? அழகைக் கண்டு மயங்கிப் பாதை மாறிவிடாதே என்ற பாடம் புகட்டப்படுகிறது.

ஆணுக்கும், பெண்ணுக்குமாய் அழகு ரசிக்கப்படுவதற்கே தவிர மயங்கி மருகுவதற்காக அல்ல. சரி, ஏன் நிர்வாணம்? வேறொன்றுமில்லை. மனசில் உள்ள அத்தனை கபடுகளையும், களைத்தெறிந்தால் நிர்வாணம்தானே? அன்பர்களே!

பிட்சாடன மூர்த்தியின் நிர்வாணம்

அதனால்தான் நிர்வாண நிலை என்ற வார்த்தை நம் வழக்கத்திலேயே உள்ளது. இந்த பிட்சாடன மூர்த்தியின் திருவுருவம் முழு நிர்வாணமாகவே காண்பிக்கப்பட வேண்டும். இந்த சொரூபத்தின் லட்சணமே அதுதான். தற்காலங்களில் வரையும்போதும், சிற்பமாக வடிக்கும்போதும் பாம்பினால் மறைப்பது அல்லது சிறுதுணி போல் போட்டு மறைப்பது எல்லாம் நடக்கிறது. அது தேவையே இல்லை. அப்படி அது மறைக்கப்பட வேண்டியது என்றால், அந்த தெய்வீகச் சிற்பிகளுக்கு அதை மறைத்துக் காட்டத் தெரியாதா? நிர்வாணத்தை நிர்வாணமாகத்தான் காட்ட வேண்டும்.

அனைத்தையும் களைய வேண்டும் என்ற செய்தியைச் சொல்லும், தத்துவத்தை உணர்த்தும் நிலை. இங்கு ஆபாசமென்பது துளியுமில்லை. நீங்கள் நன்கு கவனித்துப் பார்ப்பீர்களாயின், அவரது பிறப்புறுப்பு, ஒரு குழந்தையினது போன்றே காட்டப்பட்டிருக்கும். பரமசிவன் எல்லா உணர்ச்சிகளையும் கடந்தவன், பரம் பொருள். ஆடைகள் நெகிழ்ந்து சரிந்த ரிஷி பத்தினிகளைப் (பத்தினிகள் தான்) பார்த்து பரமனுக்கு ஏதும் ஆகவில்லை என்பது ஒன்று. அந்த ரிஷிபத்தினிகள் இவரது அழகில் மட்டுமே மயங்கினார்கள் என்பது இன்னொன்று. இதுபோன்ற ஒரு தருணத்தில் நமது நிலைமை நாம் எண்ணிப் பார்த்தாலே எவ்வளவு உயர்ந்த ஞானத்தைக் கொடுக்கும் சொரூபம் இது என்று புரிந்துவிடும். ஞானம் பிறந்து விடும், கேலி பேசத் தோன்றாது.

கேலி பேசியதற்காக வெட்கப்படத் தோன்றும். அந்த தெய்வீக அழகிய பரமன் தெளிந்த ஞானத்தை நமக்குத் தந்தருளட்டும். இங்கே காட்டப்பட்டுள்ள பிட்சாடன மூர்த்திகளில் ஒருவர் கோவை பேரூரில் உள்ளவர். இவரது திருத்தமாக வடிக்கப்பட்ட புருவ அழகும், விழிகளின் ஒளியும், குழந்தையின் சொப்பு வாய் போன்ற உதடுகளின் எழிலும், மெல்லிய முறுவலும் மோனாலிசாவையெல்லாம் தூக்கிச் சாப்பிடும். அடடா! என்ன ஒரு புன்னகை! கல்லு என்ன களிமண் போல் இருந்து, வேண்டிய உணர்வுகளையெல்லாம் காட்ட வைத்து இறுகியிருக்குமா, இல்லை இந்த தெய்வீகச் சிற்பிகள்தான் அத்தனை லாவகமாக வடித்தெடுத்தார்களா என்று பார்ப்போரின் மனத்தில் நிச்சயம் கேள்விகள் எழத்தான் செய்யும்.

கல்லும் நெகிழ்ந்ததோ யார் அறிவார்?

இறையருள் பெற்ற இந்தச் சிற்பிகளின் கைகளுக்கு, கல்லும் தன் பங்குக்கு நெகிழ்ந்துதான் கொடுத்ததோ? யார் அறிவார். இந்த மூர்த்தியை நன்கு நெருங்கி, கூர்ந்து அந்தப் புன்னகையை கவனித்துப் பாருங்கள், கவனித்து விட்டோமாயின் வேறெதைப் பற்றியும் பேசிக்கொண்டிருக்க மாட்டோம். நடராஜரைத் தரிசனம் பண்ணும்போது, வலது பக்கத்தில் உள்ளவர் இவர். இந்த அற்புதச் சிலைகள் கோவைக்குப் பெருமை சேர்ப்பது ஒரு புறமிருக்கட்டும். இவை தமிழகத்திற்கு மட்டுமல்ல, நம் பாரதத் திருநாட்டிற்கே பெருமை சேர்ப்பவை. பெருமை புரிந்து, உணர்ந்து, உரிய மரியாதை கொடுத்து இவற்றை நாம் தரிசிக்க வேண்டும். பாதுகாக்க வேண்டும் அது ரொம்பவும் முக்கியம்.

மற்றைய மூர்த்தி, தில்லைச் சிதம்பரத்துக் கிழக்குக் கோபுரத்தில் இருப்பவர், இவரது அழகும் அதி அற்புதமானது, வழுவூர் கஜசம்ஹார மூர்த்தியின் தலையலங்காரத்துக்கு இணையானது என நான் முன்னரே குறிப்பிட்டிருந்தேன். இப்போது அதை நீங்கள் அனுபவித்து ரசித்துப் பார்க்கலாம். இவரது முகம், பாதத்தின் எழிலும் பாதக் குறடுகளின் அமைப்பும், தாங்கிய சூலத்தில் தொங்கும் மயில் பீலிச் சாமரமும், பார்த்துப் பார்த்து அனுபவிக்க வேண்டியவை. வியப்பில் அண்ணாந்து பார்ப்பதுபோல், இவரை அண்ணாந்துதான் பார்க்க வேண்டும். கோபுரத்தின் முதல் மாடத்தில் வலது பக்கம் இருக்கிறார்.

இரண்டிலுமே பூத கணங்கள் தாங்கும் திருவோட்டில் இருப்பது இடப்பட்ட பிச்சை அல்ல, எடுக்கப்பட்ட பிச்சை, அவனாக, கருணையின் பேரில் எடுக்கப்பட்ட பிச்சை. பொதுவாக, கருணை உள்ளவர்கள் பிச்சை போட, இரப்பவன் பெறுவான், இங்கே இரக்கமுள்ள இரப்பவன் கருணை கொண்டு, பிச்சையை அவனாகவே எடுத்துக்கொள்கிறான். அடடா! என்னவென்று சொல்வது. பரமன் கையில் இருக்கும் புல்லைப் பாய்ந்து உண்ணும் மான்- மானல்ல அது நாம்! நமக்குப் பிச்சை போடுகிறார். ஓரிடத்தில் நிற்காது துள்ளித் திரியும் மான் போன்ற மனது கொண்ட நமக்கு ஞானத்தை ஊட்டுகிறார்.

பெற்றுத்தான் கொள்வோமே! தவிரவும், மான் போல இல்லாமல் சில மணித்துளிகளாவது, ஓரிடத்தில் நின்று தியானம் போல் இந்தச் சிற்பங்களைப் பார்க்கச் செய்த அந்த சிற்பிகளாகிய மாகானுபாவர்களையும் நன்றியோடு நினைத்துத்தான் பார்ப்போமே!

(சிற்பங்கள் பேசும்…)

ஓவியர் பத்மவாசன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x