Published : 02 Mar 2017 10:19 AM
Last Updated : 02 Mar 2017 10:19 AM

அற்புதக் கதை சொல்லும் அழகான சிற்பங்கள் 19: தோல்வியென்பது அம்பாளுக்கு ஏது?

சைவர்களுக்குக் கோயில் என்றால் அது சிதம்பரம். அந்தச் சிதம்பரத்தில் நடராஜப் பெருமான் ஆனந்த நடராஜ மூர்த்தியாக நடனமாடுகிறார். இந்த தில்லைச் சிதம்பரம் உலகின் மத்திய ஸ்தானமாக விளங்குகிறது. உலகின் மையப் புள்ளி, நடராஜரின் கட்டை விரலில் வந்து முடிவதாக அன்றே சொல்லிவிட்டார்கள் ரிஷிகள். பெருமை ஆடல் வல்லானுக்கு மட்டுமா? அங்கே அடங்கி ஒடுங்கிச் சிவகாமியாக இருக்கும் அம்பாளுக்கும் தான். இங்கு வரும் அனைவரும் பெருமானுடன் அன்னையையும் தரிசித்துச் சென்றாலே பூரணமடையும் என்று திட்டம் வகுக்கப்பட்டது. அதன்படி காட்சிகள் ஆரம்பமாகின்றன.

சாபத்தால் காளியான அம்பிகை

பரமசிவனும், பார்வதியும் சாதாரண மாகப் பேச ஆரம்பிக்கிறார்கள். அது நீயா, நானா என்றாகி, “நானே பெரியவள். எனக்கு அடங்கியவரே நீர்!” என்று பேசும் எல்லைக்குப் போக, அம்பிகையை அடங்கச் சொல்கிறார் சிவபெருமான்.

கோபத்தை அடக்கவோ, தான் அடங்கவோ மறுத்த அம்பிகை மேலும் உக்கிரமாக வாதாட, பரமசிவன் அம்பிகையை உக்கிர காளியாக மாறும்படி சாபமிடுகிறார். உக்கிர காளியாக மாறிய அன்னை, பரமசிவன் பாதம் பணிந்து மன்னிக்க வேண்டுகிறாள். பெருமானோ, “உமையே! தேவர்களும் ரிஷிகளும், ஏன் மனிதர்களும்கூட அசுரர்களால் கூடிய சீக்கிரத்தில் இன்னல்படப் போகிறார்கள். அந்த அசுரர்களை அழிக்க இதுவே சரியான கோலம். அவர்களையெல்லாம் அழித்துவிட்டுத் தில்லை வனம் வந்து தவமியற்றிப் பின் சிவகாமியாக என்னுடன் சேர்ந்துகொள்வாயாக!” என வாழ்த்தி அனுப்புகிறார்.

மகிஷன் போன்ற அசுரர்களையெல்லாம் அழித்து வெற்றியோடு தில்லை வனம் வந்த அம்பிகை தவமியற்ற ஆரம்பிக்கிறாள். நள்ளிரவு வேளைகளில் நடராஜர் நடம் புரிவதைக் கண்டு, இன்னமும் உக்கிரம் குறையாத காளியாகவே எழுந்து, “இந்தத் தில்லைவனம் என்னுடையது. இங்கு இது போன்று நடனமாட அனுமதிக்க மாட்டேன். என் அனுமதியின்றி இங்கே நடமாடவே முடியாது. நீரோ நடனமாடுகிறீர். இங்கே, இனிமேல் நான் உம்மைப் பார்க்கக் கூடாது. முதலில் இங்கிருந்து நீர் வெளியேறும்!” என்றாள். தனது தவத்தையும், தான் சிவகாமியாக அய்யனுடன் சேர்ந்து கொள்ள வேண்டும் என்பதையும் அப்போது மறந்துவிட்டாள்.

“அதுவும் அப்படியோ? அப்படியானால் நமக்குள் ஒரு நடனப் போட்டி வைத்துப் பார்க்கலாம். யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் வெளியேறிவிட வேண்டும். சரிதானா?” என்றார் நடராஜர்.

நான் தயார் என்று காளி துள்ளி நடைபோட்டாள். நாடகத்தில் அடுத்த காட்சிக்காகப் படுதாவின் பின்னால் தயாராக நிற்பவர்கள் போல் வெளிப்பட்டு வந்தார்கள் பிரம்மாவும் விஷ்ணுவும், நந்தியும், சரஸ்வதியுமென வாத்திய சகிதமாய். பிரம்மா தாளம் போட மஹா விஷ்ணு புல்லாங்குழல் வாசிக்க, நந்தி மத்தளம் கொட்ட, சரஸ்வதி வீணை வாசித்தாள். நாரதரும், தும்புருவும்கூட கானமிசைத்தனர். போட்டி நடனம் மிக உக்கிரமாக நடந்தது. முனிவர்கள் கண்களுக்கு விருந்தாகவும் அமைந்தது. இந்த நேரத்தில் நடராஜரின் தோடு கழன்று விழ, அதைத் தனது காலால் எடுத்து மாட்டிக்கொண்டார். காலைத் தூக்க முடியாத அன்னையும் தோற்றுப் போனதாய் அறிவிக்கப்பட்டாலும், “ஊரை விட்டே வெளியேற வேண்டாம். எல்லையில் இருந்து அருள் புரிவாயாக!” என்று பணிக்கிறார் பெருமாள்.

தில்லையின் எல்லை

அப்போதும் கோபம் தணியாத அன்னையின் முன் பணிந்த பிரம்மா, வேத நாயகியான நீயே இப்படிக் கோபம் கொள்ளலாமா? என்று ஆற்றுப் படுத்தி வேதரூபிணியாக, நால் வேதங்களையும் குறிக்கும் நான்முகங்களோடு எல்லையில் பிரம்ம சாமுண்டீஸ்வரியாக வீற்றிருந்து அருள் புரியுமாறு வேண்டுகிறார். சிவபெருமானும் இதே கோலத்தோடு காளியாகவும் இருந்து இந்தத் தில்லையைக் காப்பாய் என்று கூறி எல்லையில் ஓர் இடத்தைக் காட்ட அங்கு போய் அமர்ந்து கொள்கிறாள். பிரம்ம சாமுண்டியாக தவமியற்றி, பின் சிவகாமியாக ஆனந்த நடராஜ மூர்த்தியோடு சேர்ந்துகொள்கிறாள்.

இங்கே முக்கியமாக அம்பிகை தோற்றாள் என்றே குறிப்பிடப்பட்டு வருவதைப் பார்க்கிறோம். தோல்வி என்பது அன்னைக்கு ஏது? வேறு சிலரோ, காலைத் தூக்க நாணித் தோல்வியை ஒப்புக்கொண்டதாய் கூறுவார்கள். இது எதுவும் சரி அல்ல. காலைத் தூக்குவதில் அந்தக் கொடியிடை நாயகிக்கு ஏது சிரமம். அவளுக்கு இடை மட்டும் கொடியில்லை. கை, கால் எல்லாமே கொடிதான். நளினமே வடிவான ஒளி ரஞ்சனிக்கு காலைக் காதருகே தூக்கி தோட்டை மாட்டிக்கொள்வதிலா சிரமம் இருக்க முடியும்?

இங்கேதான் அந்த அகிலாண்ட ஈஸ்வரி அதன் காரணத்தைக் காட்டி அருளுகிறாள். யாரும் கூறாத காரணத்தை அவளருளால் உணர்ந்ததைக் கூறக் கடமைப்பட்டவனாகிறேன். போட்டி நடனமென்றால் அவர் ஆடுவதை இவள் ஆட வேண்டும். ஆடியது ஒரு கரணம் என்றால் அதை அப்படியே செய்து விடுவாள் அன்னை. ஆனால் இங்கேயோ தோடை எடுத்து மாட்ட வேண்டும். மாங்கல்யத்தை எப்படிக் காலால் மாட்டுவாள், தொடுவாள்? என்ன வியப்பாக இருக்கிறதா? காஞ்சி மஹாபெரியவரை ஆழ்ந்து படித்தால் பல புரியாத புதிருக்கெல்லாம் விடை கிடைத்துவிடும். என்ன! அவற்றை உரிய இடத்தில் பொருத்திப் பார்க்க வேண்டும் - அதற்கு அந்த அன்னையின் அருளும் வேண்டும்.

தாடங்கமே தாலி

விஷயத்திற்கு வருவோம். அம்பாள் அகிலாண் டேஸ்வரியின் தாடங்கமே தாலிதானாம். இதைத்தான் ஆதிசங்கரரும், மகாகவி காளிதாசனும் சொல்லி இருக்கிறார்கள். “அமிர்தம் கடையும் போது அத்தனை விஷத்தையும் சாப்பிட்ட பரமனுக்கு ஏதும் ஆகாது அழியாப் பரம்பொருளாக இருக்கிறாரே! உன் தாடங்க மஹிமையால்தானே! உன் தாலி பாக்கியத்தால்தானே!” என்கிறார் சங்கரர்.

அப்படியானால் தாடங்கம், தாலி ஆகிறது! அதனால்தான் இன்றுவரை, கணவனின் ஆயுளுக்காக வைரத்தோடு போடும் பழக்கம் இருந்துகொண்டே இருக்கிறது. இப்போது அந்த சௌமாங்கல்யத்தை எப்படி அன்னை காலால் தொடுவாள். எல்லாம் வல்ல அன்னையும், பிதாவும் உலகுக்கு, உதாரணமாய் இருப்பார்களா, உனக்கு, எனக்கு என்று இருப்பார்களா? ஆழ்ந்த அன்பின் அடிப்படையில் விளைவதே இவை. கணவன் மனைவி, ஒருவருக்கொருவர் எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்காத நிலையில் பக்தியும் அன்பும் எப்படி விட்டுக் கொடுத்து வாழ்வது என்பதைப் புரியவைத்துவிடும்.

தில்லைக்காளி, எல்லைக் காளியாக இருக்க வேண்டும். தில்லைச் சிதம்பரத்தின் பெருமை மேலும் மேலும் உயர வேண்டும் என்பதாகவே இவையெல்லாம் இருந்தாலும் உட்கருத்து இல்லாமல் எதுவும் இல்லை என்பது புரிகிறதல்லவா! உண்மையில் அம்பாளின் ஆட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியாத நடராஜப் பெருமாள் தப்பித்துக்கொள்ளக் கையாண்ட உத்தியாகவே இது தெரிகிறது. வெறுமே காலைத் தூக்கி இருக்கலாம், தோட்டில் ‘கை’ வைத்ததில் (கால் வைத்ததில்) தான் சந்தேகம் வருகிறது. எதுவாயினும் ‘அம்பாள் தோற்றாள்’ என்று கூறுவதைத் தவிர்ப்பதே நம் எல்லோருக்கும் நல்லது. அந்த அகிலாண்ட நாயகியாம் காளி தேவி என்றும் அருளட்டும்.

இறைவனுக்கே வெளிச்சம்

காலைத் தூக்குவதெல்லாம் ஒரு விஷயமா என்று கூறுவதுபோல் சிதம்பரத்தின் கோபுரங்களில், காட்டப்பட்ட கரணச் சிற்பங்களில் சிவகாமி அன்னையும் காலைத் தூக்கி ஆடுவது போன்ற பல சிற்பங்கள் இருக்கின்றன. கிரீடத்தோடு இருந்தால், அது அந்த அம்பிகையே ஆடுவதாக அர்த்தம். வெறும் கொண்டை போட்டிருந்தால் அது நடன மணிகளைக் குறிக்கும். காலை உயரே தூக்கிய அம்பிகையின் சிற்பங்கள் கிழக்கு கோபுரத்தில் உள்ளவை. மிக அழகிய சிற்பங்களானாலும், இவை சரியாக முடிக்கப்படாமல் இருக்கின்றன. அது ஏன் என்பது அந்த நாடகமாடும் இறைவனுக்கே வெளிச்சம்.

வண்ணத்தில் காட்டப்பட்டுள்ள, ஊர்த்துவ தாண்டவம் - ஒரே கல்லினால் ஆன அற்புத அழகு, நேரம் போவதே தெரியாமல் பார்க்க வைக்கும் அழகு. செய்துவிட்டு நிமிர்த்தியிருப்பார்களா? இல்லை கல்லை நிற்க வைத்துப் பின் செய்திருப்பார்களா? அப்படி இல்லையென்றால் இதை எப்படி நிறுத்தி இருப்பார்கள் போன்ற கேள்விகள் மனத்திற்குள் புகுந்து குடைந்தெடுக்கின்றன. அந்த விழிகளின் எழிலும், விரல்களின் அழகும் அடடா! எண்தோள் வீசி நின்றாடும் பிரான்தன்னைக் கண்காள் காண்மின்கேளா! புண்ணியம் செய்த கண்கள் காணும் - கூடவே கண்ணீரும் அரும்பும்.

துடைத்து விட்டுத்தான் பார்க்க வேண்டும். இங்கே ஐந்து தலைகளோடு பிரம்மா தாளம் போடுகிறார். நந்திக்கு பதில் மஹாவிஷ்ணுவே மத்தளம் கொட்டுகிறார். பரம பக்தையான காரைக்கால் அம்மையாரும் நெக்குருகி நிற்கிறார். அவர் நேரில் கண்டு உருகியதை இந்த தெய்வீகச் சிற்பி படைத்துக்கொடுத்துள்ள பேசும் சிற்பத்தைப் பார்த்து நாமும்தான் உருகுவோமே.

(சிற்பங்கள் பேசும்…)

ஓவியர் பத்மவாசன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x