Published : 23 Feb 2017 09:48 AM
Last Updated : 23 Feb 2017 09:48 AM

அற்புதக் கதை சொல்லும் அழகான சிற்பங்கள் 18: தட்சன் யாகம், வீரபத்திரர் வருகை

பெரும்பேறு பெற்றவர்களில் ஒருவன் தட்சன். ஆம்! அந்த ஆதிபராசக்தியே அவனுக்கு மகளாகப் பிறந்து, வளர்ந்து இந்தப் பெருமையைக் கொடுத்திருந்தாள். தனது மகளுக்கு அந்தப் பரம்பொருளான சிவபெருமான்தான் மாப்பிள்ளை என்றதும், ஆணவம் கொண்டான். மாப்பிள்ளை, தன்னை வணங்கிப் பணிய வேண்டுமென்றான். தன்னை வணங்கி வேண்டிய வரங்களைப் பெற்றுப் பிழைத்துக்கொள்ளுங்கள் என்று அதிரடி உத்தரவுகளையும், ஆணைகளையும் பிறப்பித்துக் கொண்டிருந்தான் தட்சன்.

திருமணத்தை நீங்கள் நடத்த வேண்டியதில்லை அதை அவரே பார்த்துக்கொள்வார் என்று அம்பிகை சொன்னபோது, கொஞ்சம் ஆடித்தான் போய்விட்டான் தட்சன். பின்னர் திருமணத்தன்று அம்பிகை கரம் பிடித்த சிவபெருமான் மறைந்து, மீண்டும் ஒருமுறை வந்து தட்சன் அறியாத வண்ணம் கயிலைக்கு அழைத்துப் போனார். இது அதிக வெறுப்பையும், எரிச்சலையும் தட்சனுக்கு ஏற்படுத்தியது. இருந்தும் பாசத்தின் காரணமாக மகளைப் பார்க்க கயிலை போனான். அங்கே இருந்த துவார பாலகர்கள் அவனைத் தடுத்துவிட, மேலும் கொதிப்படைந்தான்.

சிவனை எப்படியாவது அவமானப்படுத்திவிட வேண்டுமென்று துடித்தான். உபாயம் கிட்டியது. சிவனைத் தவிர்த்து மற்ற அனைவரையும் அழைத்து ஒரு மாபெரும் வேள்வி செய்ய முடிவெடுத்தான். மயனிடம் கூறி, அழகிய அழைப்பு ஓலை தயார் செய்து, தேவர் முனிவரையெல்லாம் அழைத்தான். மயனைக் கொண்டு அழகிய யாகசாலை நிர்மாணித்தான். விதிகளின் அளவுகளின்படி - ஆழ அகலத்தோடு மிகப் பிரமாண்டமாய் ஹோம குண்டம் அமைத்தான். பொன்னிறத்தில் காமதேனுவின் நெய், அண்டா அண்டாவாக வந்து இறங்கியது. அவிர் பாகங்களுக்கான நைவேத்தியங்கள் தங்கக் குண்டாகளின் தயாராகி வந்தன. பூர்ணாஹூதிக்கானவை தனியாக அடுக்கி வைக்கப்பட்டு ஒரு சிறுகுன்றுபோல் காணப்பட்டது.

உற்சாக மிகுதியில் இருந்த தேவர்கள்

வியாழ பகவான் வேள்வியை ஆரம்பித்தார். வழக்கமாக இது போன்ற வேள்விகளைச் செய்யும் பிரம்மாவிற்கு தட்சன் முக்கியத்துவம் கொடுத்ததில் தலை கால் புரியாமல் பூரிப்பில் இருந்தார். மஹாவிஷ்ணு மயக்கத்தில் இருந்தார். முப்பத்து முக்கோடி தேவர்களும் உற்சாக மிகுதியில் இருந்தார்கள். முனிவர்களும் ரிஷிகளும்கூட, ஏதோ ஒரு பெருமையோடும் தட்சன் நேரடியாக அழைத்த விதத்திலும் மகிழ்ந்து வந்து குழுமியிருக்க வேள்வித் தீ கொழுந்துவிட்டெரிய ஆரம்பித்திருந்தது.

சேதி அறிந்த உமையம்மை (தாட்சாயினி) கணவரை அழைக்காமல் தந்தை இருந்ததற்கு நியாயம் கேட்கப் புறப்பட்டார். பரமசிவன் தடுத்தும் பலனில்லை. வேள்வி நடந்த இடத்திற்கு வந்த உமையம்மையின் கண்களிலும் தீயின் வெம்மை. “எனது கணவரும் பரம் பொருளுமான பரமசிவனுக்கு அழைப்பு விடுக்காமல் வேள்வி நடத்துகிறீரோ? அவரை சகல மரியாதைகளோடும் அழைத்து அவருக்கு உரிய அவிர் பாகத்தையும் அளிக்க வேண்டும்” என்றார்.

எள்ளி நகையாடிய தட்சன், கடுஞ் சொற்களையெல்லாம் அள்ளி வீசினான். “என் கண் முன்னே நின்று என்னை மிருகமாக்காதே. இங்கிருந்து உடனே சென்றுவிடு” என்றான். இதைக் கேட்ட உமையம்மை, “இந்த வேள்வி ஒழியட்டும் தேவர்களும் நீயும் கெட்டு அழிக!” என்று பொங்கி எழுந்தவள் நேரே பரமசிவன் காலடியில் போய் விழுந்தாள்.

கண்கள் சிவக்க, புருவம் தெரிய, மூக்கு விரிய, பற்கள் உரசிய அந்தக் கணத்தில் உதித்தார் சிவ அம்சமான வீரபத்திரர். அவர் கண்கள் இரண்டிலும் தட்சன் வளர்த்த வேள்வித் தீயை மிஞ்சும் வெப்பம். சிவபெருமானை அழைக்கவும் அவிர் பாகம் தரவேண்டியும் விண்ணப்பம் வைத்தான். தட்சனோ ஆணவத்தின் உச்சியில் இருந்தே பதில் சொன்னான். அவிர் பாகம் தர மறுத்தான். ருத்ரதாண்டவம் ஆடினார் வீரபத்திரர். விஷ்ணு தண்டத்தால் அடிபட, தவழ்ந்து சென்ற பிரம்மா தலைகளில் ஓங்கி குட்டுப்பட்டார்.

பக்கத்திலிருந்த சரஸ்வதியின் மூக்கு உடைந்தது. சந்திரனைக் காலில் போட்டுத் தேய்த்தார். கூழைக் கும்பிடு போட்டுப் பல்லிளித்த சூரியனின் பற்கள் பறந்துவிழுந்தன. அக்னி பகவான் நாக்குகள் வெட்டப்பட்டான். ஓடி ஒளிந்தவர்களையெல்லாம் தேடிப் பிடித்துப் பந்தாடினார். தட்சன் மிரண்டு போனான். பயந்து பணிந்து வீரபத்திரர் முன்வந்து நின்று கதையளக்க ஆரம்பித்தவனை அழுத்திப் பிடித்தார் வீரபத்திரர்.

பறந்து போன தட்சனின் தலை

“தேவாதி தேவன் பரமசிவனை அவமதித்து வேள்வியா செய்கிறாய்? உன் வேள்விக்கு வந்தவர்கள் கதி என்னவாயிற்று என்று பார்த்தாயா? இப்போது காட்டு உன் செருக்கையும், ஆணவத்தையும்! முடியுமா?” என்றபடி வாளைச் சுழற்ற தட்சனின் தலை பறந்துபோய் அவன் ஆரம்பித்த அந்த வேள்விக் குண்டத்திலேயே வீழ்ந்தது. நாக்குகள் அற்ற நிலையிலும் பயத்தில் படாதபாடுபட்டு தட்சன் தலையை பஸ் பமாக்கிக்கொண்டான் அக்னி பகவான்.

தீராத கோபத்தோடு, மஹாவிஷ்ணுவைத் திரும்பிப் பார்த்த வீரபத்திரரை கோபம் தணியட்டும் என்ற அசரீரி தடுத்தது. சட்டென்று தணிந்தது வீரபத்திரரின் கோபம். செய்த தவறுக்காக அத்தனை பேரும் வருந்தி மன்னிப்புக் கேட்டார்கள். இடபத்தில் அம்மையும் அப்பனும் காட்சி கொடுத்து உயிரிழந்த அத்தனை பேரையும் எழ வைத்தார்கள். தட்சன் தலை பஸ்பமானதால் அவன் மட்டும் ஆட்டுத் தலையோடு உயிர்பெற வேண்டியதாயிற்று. சிவபெருமான் காலில் விழுந்து வணங்கிக் கண்ணீர் விட்டான்.

திருப்பறியலூர் ஆன தட்சபுரம்

இந்த மிகப் பெரிய புராண வரலாறு தமிழகத்தில் நடந்ததாகக் கூறப்படுகிறது. தட்சபுரம் என்ற இந்த இடம் இப்போது திருப்பறியலூர் என்று அழைக்கப்படுகிறது. நம் பாவங்களைப் பறிப்பதனால் பறியலூர் என்றும் மேலும் சில காரணங்களும் கூறப்பட்டாலும், தட்சன் தலையைப் பறித்ததனாலேயே பறியலூர் என்று அழைக்கப்படுகிறது.

இந்த ஓவியத்தில் பார்க்கும் அற்புதமான வீரபத்திரர் சிலை கிருஷ்ணாபுரத்தில் உள்ளது. அடடா! என்ன ஒரு கோபம், என்ன ஒரு பார்வை. மீசை அழகும், எந்தப் பிடிப்பும் இல்லாமல் தூக்கப்பட்ட காலும், கைகளில் அசையும் குஞ்சங்களும் மார்பில் புரளும் அணிமணியும் என்னவென்று சொல்வது! ஆண்டவா! இந்தச் சிற்பிகளையெல்லாம் என் கனவில் வந்து காட்சிதர வைக்க மாட்டாயா? அவர்களைத் தரிசித்தாலே உன்னைத் தரிசித்தது ஆகிவிடாதா?

வேறொன்றும் வேண்டாம், அவர்கள் பாதங்களை மட்டும் காட்டினால் போதும்! தொட்டு வணங்கிக் கொள்கிறேன் என்று கூவத் தோன்றுகிறது. இந்தச் சிற்பத்தை நான் வரைந்து முடிப்பதற்குள் உயிர்போய், உயிர் வருகிறது. அந்தச் சிற்பி, இதன் ஒரு விரலை வடிக்க எவ்வளவு சிரத்தையையும் நேரத்தையும் அர்ப்பணித்திருப்பான். இவற்றை ஒரு கணம் எண்ணிப் பார்த்து விட்டாலே போதும். நாமெல்லோருமே அந்தச் சிற்பிகளை நன்றியோடு நினைக்கத்தான் செய்வோம்; மனம் குளிரத்தான் செய்வோம். அப்போது ஒரு சிறு துளி கண்ணீர் விடத்தான் செய்வோம். இதனால் அவர்களுடயை ஆசிகளும் இறைவனுடைய ஆசிகளும் நம்மை நன்கு வாழவைக்கும்.

காட்டப்பட்ட இன்னொரு வீரபத்திரர் கிருஷ்ணாபுரத்துக்கு அருகில் உள்ள வைகுண்டத்தில் உள்ளவர். இங்கே காலடியில், தட்சன் இருக்கிறான். ஆனால், கிருஷ்ணாபுரத்து சிற்பத்தில் காலின் கீழே தட்சன் இல்லை. கோபத்தின் உச்சியில் இருக்கும் வீரபத்திரரின் கோபத் தீயின் வெம்மை தாங்காமல், கழுத்தறுபட்ட வாத்து கொஞ்ச தூரம் ஓடுவது போல் ஓடி, வெளியில் விழுந்து விட்டான் போலிருக்கிறது.

வேறென்ன சொல்ல? ஆனாலும் ஒன்று சொல்ல வேண்டித்தான் இருக்கிறது. இந்த வீரபத்திரரின் அற்புதக் கோலங்கள் இரண்டும் வைஷ்ணவ ஆலயங்களில் உள்ளன. கிருஷ்ணாபுரம் கோயிலாகட்டும் நம்மாழ்வாரால் பாடப்பட்டு மங்களா சாசனம் செய்யப்பட்ட இந்த வைகுண்டம் கள்ளபிரான் கோயிலாகட்டும் இவரையும் சேர்த்தே வைத்துக்கொண்டு இருக்கின்றன. நாராயணனும் வேண்டாம் என்று சொல்லவில்லை. நம்மாழ்வாரும் வேண்டாம் என்று சொல்லவில்லை.

சிவன் கோவில்களில் பரவலாக - நரசிம்மர் - கிருஷ்ண லீலை சிலைகள் நிறைந்தே காணப்படுகின்றன. இதுதான் பாரதப் பண்பாடு.

(சிற்பங்கள் பேசும்…)

ஓவியர் பத்மவாசன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x