Published : 16 Feb 2017 09:39 AM
Last Updated : 16 Feb 2017 09:39 AM

அற்புதக் கதை சொல்லும் அழகான சிற்பங்கள் 17: பகடி வேடன் பரமசிவன்

நமது புராணங்களிலும், இதிகாசங்களிலும், வேடனுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கும். அர்ஜுனனைத் தடுத்தாட்கொள்ள எம்பெருமான் பரமசிவன் வேடன் வேடம் பூண்டு வந்திருக்கிறார். வள்ளியை மணம்புரிய வந்த முருகப் பெருமானும் வேடனாக வந்து அவளின் மனங்கவர முயன்றார். கண்ணையும் தன்னையும் கொடுத்து நாயன்மார்களில் ஒருவராய் ஆன கண்ணப்பனும் வேடுவர் குலத்தில் பிறந்தவர்தான்.

இதுபோல பற்பல வேடுவர் கதைகளும் வேடுவர் வேடமிட்ட கதைகளும் நிறைந்து கிடக்கின்றன. வேடர்கள் அவர்கள் தொழிலின்படி வேட்டையாடி, அதனை உணவாக்கி உண்டு தம்முள் சேர்த்துக் கொள்கிறார்கள். ஆண்டவனோ! உத்தமர்களை உயர்ந்தவர்களை உரிய நேரத்தில் வேட்டையாடித் தன்னோடு சேர்த்துக்கொள்கிறான். அத்தகைய ஒரு வேடனின் பெருமை பேசும் கதையான்றைப் பார்ப்போம்!

குருபக்திக்குக் கிடைத்த மரியாதை

ஜகத்குரு ஆதி சங்கரரின் சீடர்களில் மிக முக்கியமானவர் ‘பத்மபாதர்’. உயர்ந்த குருபக்தி காரணமாக அவருக்கு இந்தப் பெயர் கிடைத்தது. ஆமாம்! ஒரு தடவை கங்கையின் அந்தப் பக்கம் பத்மபாதர் நிற்கிறார். இந்தப் பக்கம் ஜகத்குரு குளித்து முடித்து ஈரத்துணியோடு நிற்கிறார். சீடனின் பெருமையை உலகக்குக் காட்ட நினைத்து, ‘ஏனப்பா! அந்த உலர்ந்த துணிகளை எடுத்து வா!’ என்கிறார்.

கங்கையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. சிஷ்யனுக்கோ, கங்கையின் நினைப்பே இல்லை. இவரின் குருபக்தியைக் கண்டு மகிழ்ந்த கங்காதேவி இவர் வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் ஒரு தாமரையை மலரச் செய்து தாங்குகிறாள். இவரும் இந்தப் பக்கம் வந்து துணியைக் கொடுக்கிறார். நடந்தவை எதுவும் அவருக்குத் தெரியவே இல்லை. மற்றவர்களெல்லாம் பின்னர் வியந்து சொல்லும்போதும் இவர் அதைப் பெரிதாய் எடுத்துக்கொள்ளவில்லை. எல்லாம் குருவருள் என்ற வார்த்தையோடு முடித்துக்கொண்டார். அன்றிலிருந்து இவர் ‘பத்மபாதர்’ ஆனார். இப்படிப்பட்ட பெருமை நிறைந்த பத்மபாதர் முன் ஜென்மத்தில் சோழ வள நாட்டில் பிறந்திருந்தார் என்று கூறப்படுகிறது. அப்போது அவருக்கு ஸநந்தனர் என்று பெயர். அவருக்கு ஒரு மஹான், நரசிம்மர் மந்திரத்தை வலிந்து உபதேசம் பண்ணினார்

இந்த மந்திரத்தைக் கொண்டு, எப்படியாவது நரசிம்மரைப் பார்த்து விட வேண்டுமென்று மனத்தில் ஆசை உண்டாயிற்று. வீட்டில் இருந்தால் எப்படி இது கைகூடும்? சொல்லிக்கொள்ளாமல் வீட்டை விட்டுப் புறப்பட்டார். அடர்ந்த காட்டுக்குள் போனார். பிறர் கண்படாத இடமாய்ப் பார்த்து அமர்ந்தார். அடுத்த கணமே ஒரு வேடன் வந்தான்.

“ஐயா, அந்தணரே! இங்கே எதற்காக வந்து உட்கார்ந்து இருக்கிறீர்கள்? குடும்பத்தில் ஏதேனும் பிரச்சினையா?’’ என்று ஏளனமாய் சிரித்தபடி கேட்டான்.

“நீ வேட்டைக்காரனா? இல்லை, கூத்துக்காரனா? ஏகத்துக்கும் கற்பனை பண்ணுகிறாயே! சிங்கமுகமும் மனித உடலும் இருக்கும் மிருகமொன்று காட்டில் இருக்கிறதாவென்று பார்க்க வந்தேன்” என்றார்.

அப்படிப்பட்ட மிருகம் ஏதும் காட்டிலேயே இல்லை என்றான் வேடன். ஸநந்தனர் பதைத்துப் போனார். தான் பொய் சொல்லவில்லை என்றும் அப்படியான ஒரு உருவம் காட்டில் இருப்பதாக இன்னும் நம்புவதாகவும் வேடனிடம் சத்தியம் செய்தார்.

வேடன் அப்படிப்பட்ட மிருகத்தைப் பிடித்து வருவதாக உறுதிமொழியளித்தான். அடுத்த நாளும் வேடனின் தேடுதல் வேட்டை தொடர்ந்தது.

வேடனுக்குக் காட்சி

கடுந்தவம் போல் நரசிம்மர் மேலேயே வேடனது சிந்தனை இருந்ததால் பரந்தாமன் நரசிம்மமாய் காட்சி கொடுக்க முடிவு செய்தார். ஹிரண்யனை வதம் பண்ணிய அதே சந்தியாவேளை வந்தது. தன்னால் ஸநந்தனருக்குக் கொடுத்த வாக்கு கொடுக்க இயலவில்லையே என்று வேடன் வருந்தி, உயிரைவிடத் துணிந்தான்.

காட்டுக் கொடிகளை வெட்டியெடுத்தான். கழுத்தைச் சுற்றிக் கட்டிக்கொண்டு மரத்தின் உச்சிக்கு ஏறி அங்கே கட்டிவிட்டுக் குதித்து உயிர்விடத் துணிந்தான். கழுத்தைச் சுற்றிக் கட்டிக்கொள்ளப் போனபோது லேசான கர்ஜனை கேட்க, ஓசைவந்த இடம் நோக்கினான். அவன் ஏறவிருந்த மரத்தின் பின்பக்கம் இருந்து ஓசை வந்தது. சற்று அருகில் போக, மஞ்சள் நிறத்தில் சடைமுடி காற்றில் அசைந்தது. மாலை நேரத்து ஒளியில் பளபளத்தது.

சிங்கம் என்று முதலில் நினைத்தான் வேடன். ஆனால் அதன் கருநீலக்கையோ மரத்தை வளைத்துப் பிடித்தது. பளபளக்கும் முடி முழுவதுமாய்த் தெரிந்து இப்போது சிங்கமுகம் மெல்ல எட்டிப்பார்த்தது. “ மனித உடல், சிங்கமுகம்! ஆஹா! ஆஹா!” என்று மனம் துள்ளிக் குதிக்க ஈட்டியை நீட்டியபடி “அப்படியே நில்! இல்லேன்னா தொலைச்சிடுவேன்!” என்றபடி நெருங்கி தான் சாவதற்காக வெட்டியெடுத்த கொடியைச் சடாரென சுற்றிப் பிடித்துக் கட்டினான். பெருமாள் கொடியினால் கட்டப்பட்டார். நிஜத்தில் அவன் மன உறுதிக்குக் கட்டுப்பட்டார். வா! வா! என்று இழுத்துக்கொண்டு போனான். ஸநந்தனரிடம் பரிசாக அளித்தான். அண்ட சராசரம் கட்டிக் காக்கும் கடவுள் ஒரு வேடன் கட்டுக்குள் அகப்பட்டுப் போன நரசிம்மம் இப்போது பலமாய் சிரித்தது.

“ஓ! உனக்குச் சிரிக்கக் கூடத் தெரியுமா? இங்க பாரு சாமி! சிங்கம் சிரிக்குது!” என்றான். சிங்கத்தின் முன் மாட்டிக்கொண்டவனைப் போல் திகைத்து விழித்துக்கொண்டிருந்தார் ஸநந்தனர். அவர் கண்கள் கலங்கின. கண்ணீர் மெதுவாகக் கிளம்பிப் பெருகி வழிந்தது. அந்தரத்தில் கொடி இருந்ததில் அங்கே ஓர் உருவம் இருக்கிறதென்பது அவருக்குத் தெளிவாகத் தெரிந்தது!

“ஆண்டவா! இது என்ன சோதனை. ஒரு வேடன் கண்ணுக்குத் தெரியும் நீ. என் கண்ணுக்குப் புலப்பட மாட்டேன் என்கிறாயே என்று உருகினார். சிரிப்பும் கர்ஜனையும் கேட்க சிலிர்த்துப் போனார். உணர்ச்சிப் பெருக்கில் இருந்த ஸநந்தனர் காதில் இப்போது நரசிம்மர் பேசுவது தெளிவாகக் கேட்டது. “ஆயிரமாயிரம் வருஷத்து தவத்தில் வாய்க்கும் தவப்பலன் வேடனுக்கோ ஒரே நாளில் வாய்த்து விட்டது. அதனால் அவனுக்கு தரிசனம் தந்தேன். அவனால் நீ என் குரலை, என் வாக்கைக் கேட்கிறாய். இதன் காரணமாக உனக்கு என் மந்திர சக்தி வாய்த்து விட்டது. உனக்கு எப்போது தேவையோ, அப்போது எனது பூரண அருள் கிட்டும்” என்று கூறி வைகுந்தம் போகத் தயாரானார்.

இப்போது வேடுவன் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடிக்கொண்டிருந்தது. விரைவில் வேடனையும் அவனது குடும்பத்தவர்களையும் வைகுந்தம் அழைத்துப் போக புஷ்பக விமானம் வரும் என்று கூறிய பெருமாள் புன்னகைத்தபடி மறைந்து போனார்.

ஸநந்தனருக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற ஒரு தடவை ஆதி சங்கரின் தலையை ஒரு காபாலிகன் வெட்ட வந்தபோது பத்மபாதருக்குள் நரசிம்மர் புகுந்துகொண்டு அவன் கதையை முடித்த கதையும் நாம் அறிந்ததே. இதன்மூலம் பத்மபாதர் பெருமை மேலும் சிறந்து பரந்தது, விரிந்தது.

இங்கே காணும் லக்ஷ்மி நரசிம்மர் சிற்பம், வேலூர் ஜலகண்டேஸ்வர் கோயிலின் கல்யாண மண்டபத் தூண் ஒன்றில் இருக்கிறது. கோபம் தணிந்த நிலையில் லக்ஷ்மி தேவியை அணைத்தபடி இருக்கும் கோலம் இது. பத்மபாதரை சாக்காக வைத்து இவரையும் தரிசித்து மகிழ்வோம்.

வேடுவனின் அற்புதமான சிற்பம்

திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் போகும் வழியில் ஸ்ரீ வைகுண்டத்திற்கு முன் கிருஷ்ணாபுரம் என்ற பிரிசித்தி பெற்ற கோவிலில் இந்த அழகிய வேடுவன் சிற்பம் உள்ளது. என்ன ஒரு நுணுக்கம், என்ன ஒரு அழகு. இதை பகடி வீரன் என்பார்கள். எனக்கென்னவோ இவர் வேடன் வடிவு கொண்ட பரமசிவன் போலவே தெரிகிறார். கையில் கத்தி மற்றது கொம்பு எனும் வாத்தியம். வேடர்கள் கையில் இது அவசியம் இருக்கும். இதை வைத்து ஓசை எழுப்பி விலங்குகளை ஓடவைத்து வேட்டையாடுவது வழக்கம் (இதேபோன்ற சிற்பங்கள், ஸ்ரீ வைகுண்டம் ஆலயத்திலும் ஆவுடையார் கோயில் போன்ற இடங்களிலும் இருந்தாலும் இது தனிரகம்).

இங்கு அர்ஜுனன், பீமன், தருமன் சிலைகளும் இருக்கின்றன. அதுதொடர்பாக, அர்ஜுனனைத் தடுத்தாட்கொண்ட பரமசிவன் தான் அந்த வேடுவன் என்றே நான் எடுத்துக் கொள்கிறேன். அந்தக் கொண்டையைப் பாருங்கள் விரித்த அந்தப் பனித்த சடையை அள்ளி எடுத்து முடிந்து கொண்ட ஒய்யாரக் கொண்டை போலவே தோன்றுகிறது. பொட்டு, நெற்றிக் கண்ணைக் குறிப்பது போல் தெரியும். இல்லையென்றாலும் பகடி வீரனுக்கெல்லாம், பகடி வீரன்தானே சிவபெருமான். அவர் அர்ஜுனனை பகடி பண்ணித்தானே தடுத்தாட்கொண்டார். இதற்கெல்லாம் மேலே இப்படி ஒரு சிரத்தையும், பொறுமையும், ஊனுறக்கம் மறந்த உழைப்பையும் கொட்டிச் செய்த அந்த தெய்வீக சிற்பிக்காகவேனும், ‘ஆமாம்! இது நான்தான்!’ என்று பரமசிவன் அந்தக் கணத்தில் வந்து உறைந்து விட மாட்டாரா என்ன!

இது எனது நம்பிக்கை. நான் இந்தச் சிற்பத்தில் பரமசிவனைக் காண்கிறேன். உற்றுப் பாருங்கள். உங்கள் கண்ணுக்கும் அந்த சிவபரம்பொருள் தெரிவார். இப்படித்தான் சிற்பங்கள் பேசும்!

(அடுத்த வாரமும் சிற்பங்கள் பேசும்…)

ஓவியர் பத்மவாசன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x