Published : 09 Feb 2017 10:34 AM
Last Updated : 09 Feb 2017 10:34 AM

அற்புதக் கதை சொல்லும் அழகான சிற்பங்கள் 16: யானையைக் காப்பாற்ற வந்த பெருமாள்

வானளாவிய மரங்களும், பூஞ்சோலைகளும், நறுமணம் சுமந்த காற்றும், ஓசை எழுப்பும் பறவைகளும், ரீங்கரிக்கும் வண்டுகளும் வாழும் எழிலார்ந்த இடம்தான் திரிகூட மலையென்று பெயர். அது பாற்கடலால் சூழப்பட்டிருந்தது. தங்கம், வெள்ளி, இரும்பு என மூன்று மலைகள் சேர்ந்ததால் இந்தப் பெயர். சித்தர்களும், முனிவர்களும் பல ஆண்டுகளாகத் தவமியற்றி வருவதால், தாடியும், ஜடையுமாய் இருக்க, சில மிருகங்கள் பயந்து விலகிச் சென்றன. மனிதர்கள் கண்டு பயப்படக்கூடிய கொடிய மிருகங்களோ, இவர்களது தவ வலிமை காரணமாக, நெருங்கிச் செல்லவே பயந்தன. தேவர்களும், கந்தவர்களும்கூட இந்தப் பூஞ்சோலைக்கு வந்து உலவி மகிழ்ந்து செல்வது வழக்கம்.

இப்படியான இந்த ரம்மியமான இடத்தில் ஒரு யானைக்கூட்டம் வாழ்ந்து வந்தது. காடே விருந்தாய் இருக்க, வயிறு நிறைந்தவுடன், கூட்டம் மொத்தமும் ஆனந்த வேகத்தில் வாலைத் தூக்கியபடி ஓடின. பெரிய யானைகளுக்கு மதநீர் வழிய, தேனீக்கள் அவற்றைக் குடித்துப் பாட்டுப் பாடி மகிழ்ந்தன. ஆயிரம் இதழ் கொண்ட பெரிய, பெரிய தாமரைகள் நிறைந்த குளத்திற்கு வந்து கும்மாளம் போட்டன. யானைகள் தாமரைப் பூக்களைப் பறித்துப் பரஸ்பரம் வீசிக்கொண்டன. என்ன இது விளையாட்டு என்பதுபோல், பூக்களைப் பிடித்து, குட்டிகள் கைகளில் கொடுத்தன. அவை அதை மீண்டும் தண்ணீரில் போட்டு ஓங்கி ஓங்கி அடித்தன, குளித்தன. தண்ணீர்த் திவலைகள் உயரே எழுந்து முத்துக்களாய் பறந்து விழுந்தன.

கோபம்கொண்ட முதலை

தாமரை இலைகளின் கருமைசூழ் நிழலின் கீழ் தண்ணீரின் அடியில் மறைந்திருந்த ஒரு பெரிய முதலைக்குக் கோபம் கிளம்பியது. விருட்டெனக் கிளம்பி வந்து, கூட்டத்தின் தலைவனான யானையின் காலைப் பிடித்துக்கொண்டது. தண்ணீரில் முதலைதான் ராஜா. தரையில்தான் யானை பலசாலி. அதன் ஜம்பம் எதுவும் தண்ணீரில் இருந்த முதலையிடம் பலிக்கவில்லை.

பலம் கொண்ட மட்டும் இழுத்துப் பார்த்து ஓய்ந்தது. கூட வந்த கூட்டம் ஓங்கிக் குரலெடுத்துப் பிளிறின. இந்தச் சத்தத்தில் ஓநாயும், நரியும் தமக்கும் ஏதாவது கொழுத்த உணவு கிடைக்குமா என ஒளிந்து ஒளிந்து பார்த்தன. கஜேந்திரன் என்ற அந்த யானை இப்போது யோசிக்க ஆரம்பித்தது. பூர்வ ஜென்ம புண்ணியத்தால் அந்தப் பரம்பொருள் மஹாவிஷ்ணுதான் தன்னைக் காப்பாற்ற வேண்டும் என்று எண்ணம் தோன்ற, தும்பிக்கையை உயர்த்தித் தூக்கிப் பிளிறி அழைத்தது.

நாராயணா என்று முழக்கமிட்ட யானை

முதலைக்கு இன்று மட்டுமென்ன அடக்க முடியாத கோபம் வேறொன்றுமில்லை, அதற்கு விடுதலை நாள். நேரம் நெருங்கிவிட, நடவடிக்கைகள் ஆரம்பித்து விடுகின்றன அவ்வளவுதான். போராடிக் களைத்த யானைக்கு ஞானம் வந்து துதிக்கையை உயரே தூக்கி அழைத்ததும் பகவான் விரைந்து வந்தார்.

யானை, ‘நாராயணா’ என்று கத்தியது. பறந்தோடி வந்தார் பகவான். சுமந்து வந்தார் கருட பகவான். சக்கரத்தை விட்டார். முதலை கந்தர்வனாக மாறியது. பகவானை வணங்கிய கந்தர்வன், அவனது உலகம் போனான்.

யானையோ ராஜகுமாரனாக மாறியது. பரமாத்மா, அவனுக்கு அருள்புரிய, அவன் கண்ணீர் மல்க, வீழ்ந்து வணங்கி, சுவர்க்கலோகம் போனான்.

இது ஒருபுறமிருக்க - ஆணவத்தோடு இருந்த கருடனுக்கு வாகனமாகும் பாக்கியத்தைக் கொடுத்தார் பரமாத்மா. அவரைச் சுமந்தபடியும் தியானித்தபடியும் இருக்கும் கருட பகவான் மகாவிஷ்ணுவின் திட்டப்படி, அவர் கைகாட்டும் இடங்களுக்கு இன்றுவரை பறந்துகொண்டுதான் இருக்கிறார். இங்கே இந்தத் திருக்குறுங்குடி சிற்பத்தில் கற்பனை வளமும், கவனிப்பும் சேர்ந்து உருவெடுத்திருப்பது ஒரு சிறப்பு. இதிலே மகாவிஷ்ணுவின் கையில் ஒரு வாள், அது உறையில் இருந்து உருவிய நிலையில் இருப்பதைப் பாருங்கள். அவர் விடப் போவதென்னவோ சக்கரம்தான். ஆனால், “ஒரு காலத்தில் நீ ராஜா, வாளெடுத்துப் போர் புரிந்து நாடு காத்த உன்னைக் காக்க நான் வந்து விட்டேன்” என்று உணர்த்துவது போல் இருக்கிறது.

இதற்குக் கதையின் ஆழம் உள் வாங்கப்பட்டிருக்க வேண்டும். அது இந்தச் சிற்பியிடம் அபாரமாக இருந்திருக்கிறது. பெரிய பறவைகள் பறந்தபடியே ஒரு இடத்தில் நின்று கவனித்து இறங்க, இறக்கையை உள்பக்கமாக திருப்பிச் சுழற்றிச் சுழற்றி அடித்து நிற்கும். அப்போதுதான் அது அந்த இடத்தில் நிற்க முடியும். இந்தச் செயல் பருந்திடம் அதிகம் இருக்கும். அப்படி அந்த உள்பக்கமாய் சுழற்றி அடித்து, இங்கே கருடன் நின்றுகொண்டிருப்பதை இறக்கையின் அமைப்பில் காணலாம். கருடன் குளத்தில் இறங்கவில்லை - பறந்தபடி நிற்க அங்கிருந்துதான் மகா விஷ்ணு சக்கரம் விட வேண்டும். காற்றில் ஒரே இடத்தில் நிற்கின்ற அந்தக் கோலம் மிக அழகாகக் காட்டப்பட்டுள்ளது. இதுதான் கவனிப்பு, உற்று நோக்குதல்.

யானையின் கோலத்தைப் பாருங்கள், விம்மியழும் குழந்தைபோல அதன் முகம் தெரிகிறது. பசியில், அம்மாவை அண்ணாந்து பார்த்து அழும் குழந்தையின் உணர்வை, யானையில் காட்டியிருப்பதற்குப் பெயர்தான் தெய்வீகம். வடித்தவனுக்குப் பெயர் தான் தெய்வீகச் சிற்பி. மேலும் யானையின் தும்பிக்கையில் தூக்கி வைத்திருக்கும் தாமரை மொட்டை, பெரிதாகவும், இதழ்கள்போல் காட்டாமல் மொட்டையாகவும் விட்டதில், யானையில் வேண்டுதல் மிகப் பெரிது என்பதையும், அதற்கு ஜென்ம சாபல்யம் ஒன்றே குறியென்பதையும், சூசகமாகக் காட்டி உணர்த்தப்படுகிறது.

தேர்ந்த சிற்பிகளும் தெய்வீகச் சிற்பிகளும்

யானையின் வால் மிகச் சரியாகக் காட்டப்பட்டுள்ளது. எய்யும் அம்பின் பின்புறம் போன்று இருக்க வேண்டும். இன்றைய சிற்பங்களிலும் ஓவியங்களிலும் சிங்கத்தின் வால் போல, குஞ்சம் போன்று, காட்டப்படுவது வழக்கமாகிவிட்டது. இது தவறு! எது எப்படியிருக்க வேண்டுமோ அப்படி இருக்க வேண்டும், அப்போதுதான் பிழையின்றித் தகவலைக் கொடுக்க முடியும். எனக்கு எனது தந்தையார், எல்லா மிருகங்களது கால், வால் இரண்டையும் தனித்தனியாக வரைந்து காட்டிப் பதிய வைத்தார்.

தேர்ந்த சிற்பிகள் என்பவர்கள் வேறு; தெய்வீகச் சிற்பிகள் என்பவர்கள் வேறு. இவர்கள் தெய்வீகச் சிற்பிகள். நமக்காக பெருங்கொடைகளை அள்ளிக் கொடுத்து விட்டுப் போயிருக்கிறார்கள். காட்டப்ட்டுள்ள மற்றைய சிற்பம் சிதம்பரத்தில், கோபுரமொன்றின் மாடத்தில் உள்ளது. மிக அழகிய சிற்பம், நுணுக்கமான வேலைப்பாடு; ஆனால் இப்போது அபய, வரத ஹஸ்தங்களின்றி பின்னமாக இருக்கிறது

(நான் அவற்றை முழுமையாக்கிக் காண்பித்திருக்கிறேன்). இதுவும் கஜேந்திரனுக்காக வந்த கோலம்தான். சக்கரத்தை கவனித்துப் பார்த்தாலே புரியும். இது பிரயோகச் சக்கரம் என்று சொல்லப்படும். அதாவது பிரயோகிப்பதற்குத் தயாரான கோலம். இல்லையென்றால் வட்டமாக திருக்குறுங்குடி சிற்பத்தில் உள்ளது போல் இருக்கும்.

இதுபோன்ற நுணுக்கங்களையெல்லாம் ரசிப்போம், ருசிப்போம். ரசித்து மகிழும் போது, தியானம் பண்ணிய பலன் நமக்குக் கிடைத்துவிடுகிறது.

(சிற்பங்கள் பேசும்…)

ஓவியர் பத்மவாசன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x