Published : 19 Jan 2017 10:46 AM
Last Updated : 19 Jan 2017 10:46 AM

அற்புதக் கதை சொல்லும் அழகான சிற்பங்கள் 13: இரணிய கசிபுவும் காக்கும் கடவுளும்

நாமெல்லாம் நினைப்பதுபோல் நரசிம்ம அவதாரத்துக்கு, பிரஹலாதனோ இரண்ய கசிபுவோ காரணமல்ல! இரண்யாக்ஷன்தான் காரணம். இன்னொரு வகையில் கூறுவதானால், இரண்ய கசிபு பாசவலையில் சிக்குண்டு மாண்டுபோனான். நாராயணன் வதம் பண்ண, அவனை அழிப்பேன் எனக் கசிபு புறப்பட, இந்திரன் கசிபு மனைவியைத் தூக்கிச் செல்ல, அவள் நாரதர் வசம் வந்து அவளுக்கு அவர் அத்தனை நல்லதையும் உபதேசிக்க, அதில் உருவானவன்தானே இந்த பிரஹலாதன். சித்தப்பா மூலம், பிரஹலாதனின் பெருமை காலமுள்ள அளவும் இருக்க வேண்டும் என்பது இறைவன் திருவுள்ளம். இனி கதையைத் தொடர்ந்து பார்க்கலாம்...

நான் கடவுள் என்றவன், தன் பிள்ளை தன்னைத் துதிக்காமல், ஹரி நாமம் கூறுவதைப் பொறுக்காததால் ஏகப்பட்ட தொல்லைகளைக் கொடுக்க ஆரம்பிக்கிறான். மனைவி காயாதுவிடம், மகனுக்குச் சாப்பாடு போடாதே என்று சிறுபிள்ளைத்தனமாகக் கூச்சலிட்டான். என்ன பிள்ளை வளர்க்கிறாய் என்கிறான். அவனைத் தூங்கவிடாதே, நீயும் தூங்காதே; என் பெயரை ஜெபிக்கும்வரை விடாதே என்று கர்ஜிக்கிறான். காலையில் நன்கு தூங்கி எழுந்து உண்டுவிட்டு, உண்டது செரிக்கு முன் வந்து, “என்ன என் பெயரைக் கூறித் துதிக்க ஆரம்பித்தானா? இல்லையா?” என்று கேட்பான்.

அறிவுரை கூறிய மனைவி

இல்லை என்றவுடன், தூக்கக் கலக்கத்தில் இருந்த காயாதுவின் தலைமுடியைக் கொத்தாய்ப் பிடித்துத் தூக்கி இன்னும் இரண்டு நாள் பார், இல்லையாயின் நீ உன் மகனை இழப்பாய் என்றான். நான் என் மகனை இழந்தால் நீங்களும்தானே மகனை இழப்பீர்கள் என்று சன்னமான குரலில் மனைவி கூறியது மமதை கொண்ட அவன் மூளைக்கு ஏறவில்லை.

இரண்டு நாட்கள் கழித்தும் ஒன்றும் நடக்கவில்லை என்றதும், சேவகர்களை அழைக்க, நடுநடுங்கியபடி வருகிறார்கள். இவளைச் சிறையில் அடைத்து வையுங்கள். யாரும், நீரோ - உணவோ கண்ணில் காட்டக் கூடாது என்கிறான். காயாதுவோ அழுது, அழுது கண்ணீர் வற்றிப் போய் மயங்கி விழுந்துவிடுகிறாள். அடைக்கப்பட்ட பிரஹலாதனோ ஹரி நாமம் சொன்னபடி நன்றாகவே இருக்கிறான். பாற்கடலில் பள்ளி கொண்டவன் அவனுக்குள் பால் சுரக்க வைத்துவிடுகிறான் போலும். மூன்று வேளையும், கல்கண்டு சேர்த்த பால் அருந்தியவன் போல் மிகவும் தெம்பாக, ஆனந்தமாக இருக்கிறான். ஐயோ, பிள்ளை என்னவானானோ என்று பார்க்காமல் என்னவாகியிருப்பான் எனப் பார்க்கச் சிறைவாசல் வந்து நின்றான் இரண்ய கசிபு.

வதை செய்த இரண்யகசிபு

இருட்டில் ஒளிவிளக்குப் போல், மின்னியபடி பிரகாசமாய் இருந்தான் பிரஹலாதன். கண்ணைக் கசக்கிப் பார்த்தான். பக்கத்தில் நின்ற சேவகர்களை ஓங்கி அறைந்தான். என்ன? காயாது வந்து உணவூட்டிவிட்டுப் போகிறாளா? இதற்கெல்லாம் நீங்களென்ன உடந்தையா என்று ஓங்கிக் குரலெடுத்துத்தான் கேட்டான் கசிபு. விழுந்த அறையில் அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. மேலும் கீழுமாகத் தலையை ஆட்டி வைத்தார்கள். மீண்டும் அறை விழுந்தது. பின்னால் இதற்கெல்லாம் சேர்த்து, நரசிம்மரிடமிருந்து அறைவாங்கப் போகிறோம் என்பது தெரியாமலேயே அடித்துக்கொண்டிருந்தான் இரண்யகசிபு.

இழுத்துக்கொண்டு வெளியே வந்து வெளிச்சத்தில் பிள்ளையைப் பார்த்தான். அவனுக்குக் கண்கள் கூசின. பிள்ளை வாயிலிருந்து பால்வாடை வீசியது. அவனை மீண்டும் உள்ளே தள்ளி விஷப் பாம்பை விடும்படி கூறினான். காயாதுவைப் பார்த்தான். மயங்கியிருந்தவளைத் தண்ணீர் தெளித்து எழுப்பி, ஒரே ஒரு அறை விட்டு மீண்டும் மயக்கத்தில் தள்ளினான். என்ன செய்வது என்று புரியாமல் எதற்கென்றும் தெரியாமல் மந்திரி சபையைக் கூட்டி, அடித்துத் திட்டி நேரத்தைக் கடத்தினான்.

உள்ளே விட்ட பாம்பு, பிரஹலாதனுக்குள், பிரகாசித்த மஹாவிஷ்ணுவைக் கண்டு, படத்தைச் சுருக்கித் தரையோடு தரையாகப் படுத்து, ஊர்ந்து வெளியேற வழியில்லாத சிறையில் பல்லிபோல ஒட்டிக்கொண்டு பயந்தபடி படுத்திருந்தது. இதை எதையுமே கண்டுகொள்ளாத பிரஹலாதன் நாராயணா நாராயணா என்றபடி தியானத்தில் அமர்ந்தான். நாராயணன் அவனோடு பேசிக்கொண்டிருந்தார்.

இங்கே காட்டப்பட்டுள்ள இந்த அற்புதமான சிற்பங்கள் திருக்குறுங்குடி அழகிய நம்பி திருக்கோயிலில் உள்ளவை. என்ன அழகு, என்ன நேர்த்தி, எத்தனை உணர்வுமயம்! கதையை அப்படியே காட்டும் வகையில் அடுத்தடுத்த காட்சிகளாய்க் காட்டப்பட்டுள்ள அழகே அழகு. தூணில் இருந்து பெறப்படும் நரசிம்மரில்தான் எத்தனை உணர்வுகள்! இவற்றையெல்லாம் நன்கு உற்றுநோக்கினாலே பரதநாட்டியக் கலைஞர்கள் அற்புதமாக நாட்டிய நாடகங்களை வழங்கி ரசிகர்களைக் கட்டிப்போடலாம். தூணிலிருந்து வெளிப்பட்டுவந்து, இரண்ய கசிபுவை மடக்கிப் பிடித்து ஒரு கை தலையிலும் மறு கை கழுத்திலும் இன்னுமொரு கை கக்கத்திலும் என இருக்க, மேலே தூக்கியிருக்கும் ஒரு கையைப் பாருங்கள். ஓங்கி ஒரு குத்து விழப்போகிறது. இதில் நிலைகுலையப் போகிறான் கசிபு. மகிழ்ச்சியில் ரிஷிகள் வணங்க, பிரஹலாதன் தந்தையின் நிலையை எண்ணியும் தனக்காக வந்த இறைவனையும் ஒருசேர மனத்தில் எண்ணி வணங்கும் அந்த மயக்க நிலை. இது கல்லும் கனியான அற்புத நிலை.

தூணிலிருந்து வெளிப்பட்டுவந்து, இரண்ய கசிபுவை மடக்கிப் பிடித்து ஒரு கை தலையிலும் மறு கை கழுத்திலும் இன்னுமொரு கை கக்கத்திலும் என இருக்க, மேலே தூக்கியிருக்கும் ஒரு கையைப் பாருங்கள். ஓங்கி ஒரு குத்து விழப்போகிறது. இதில் நிலைகுலையப் போகிறான் கசிபு. மகிழ்ச்சியில் ரிஷிகள் வணங்க, பிரஹலாதன் தந்தையின் நிலையை எண்ணியும் தனக்காக வந்த இறைவனையும் ஒருசேர மனத்தில் எண்ணி வணங்கும் அந்த மயக்க நிலை. இது கல்லும் கனியான அற்புத நிலை.

இந்தச் சிற்பம் அளவில் சிறியது. ஆனாலும், வசகீகரத்திலும் வடித்த விதத்திலும் கொடுக்கும் சிலிர்ப்பிலும் மிகப் பெரியது.

நாமும் கண்ட உணர்வு

அடுத்த சிற்பம் அளவில் பெரியது. தூண் சிற்பம். இங்கே மடக்கிப் பிடித்துத் தூக்கியாயிற்று. இனி சம்ஹாரம்தான். அசைய முடியாதவாறு இரு கால்களையும் அமுக்கிப் பிடித்துக் கழுத்திலும் கை வைத்தாயிற்று. முதலில் ஒரு குத்துவிட்டு மயங்க வைத்துப் பிடித்தவர் இப்போது சற்றுத்தெரிய, அடுத்த அறை கொடுக்கக் கையை உயர்த்தி இருப்பதைப் பாருங்கள். என்ன வேகமோ, என்னவாகி இருப்பானோ! இடிபோல் விழுந்திருக்குமோ! பார்க்கும்போதே என்னவோ பண்ணுகிறது. பிரஹலாதன் நேரில் கண்டதை நாமும் கண்டது போன்ற ஒரு உணர்வு.

கடவுளின் இந்த அதிசய நாடகத்தைக் கண்முன் காட்டி, எம்மையும் புனிதராக்கிய அந்த சிற்பிக்கு... வேறென்ன! நமஸ்காரம்தான் நன்றியுடன்.

(அடுத்த வாரம் சந்திப்போம்)


ஓவியர் பத்மவாசன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x