Published : 08 Dec 2016 10:30 AM
Last Updated : 08 Dec 2016 10:30 AM

அற்புதக் கதை சொல்லும் அழகான சிற்பங்கள் 07: ராமன் மிரண்டால் சமுத்திரம் கொள்ளாது...

சீதா தேவியைத் தேடிப் போன அனுமன், நல்ல சேதியுடன் வந்த பின் இலங்கைப் பயணம் ஆரம்பமாகிறது. கடலில் பாலம் அமைத்துப் போவதென்று முடிவெடுத்தபின் சமுத்திரக் கரையில் ஸ்ரீராமன் அமர்ந்து, சமுத்திர ராஜனை பலமுறை அழைத்தான். அவன் வராத காரணத்தால் சற்றே கோபம் கொண்டு அம்பை எடுக்கிறான். அதன் பின்னரே பயந்துபோன சமுத்திர ராஜன் வந்து பணிகிறான். “எனது ஆழ, அகல ஆக்ரோஷ இயல்பை விட்டு எப்படி இருப்பதோ, என்னால் முடியுமோ? என்று எண்ணிக்கொண்டு இருந்தேன்.

என்னை நம்பியிருக்கும் உயிர்களுக்கு எதுவும் ஆகக்கூடாதே என்று நினைத்த வண்ணம் இருந்தேன்” என்று ஏதேதோ பசப்பினான். அதற்கு ராமன் பதிலடி கொடுத்தான். “ஓஹோ அவையெல்லாம் உன்னை நம்பி இருக்கின்றனவோ? பாலம் கட்டப் போவது தெரிந்திருந்ததால்தானே யோசித்தாய். அதை முதல் அழைப்பிலேயே அல்லவா வந்து நீ சொல்லி இருக்க வேண்டும். இதைச் சொல்ல உனக்கு என்ன மூன்று நாட்கள் வேண்டியிருக்கிறதோ?”

பாதம் கழுவிய சமுத்திர ராஜன்

மெல்ல ஸ்ரீராமன் பாதம் கழுவினான். தாங்கவும் பணியவும் வழி சொல்லிக் கொடுக்க அதன்படி நடந்தான் சமுத்திரராஜன். பாலம் கட்டும் வேலை ஆரம்பமானது.

இங்கே காட்டப்பட்டுள்ள இந்த மிக அழகிய சிற்பமும் திருக்குறுங்குடி அழகிய நம்பி கோயிலில் உள்ளது. குழந்தைகளை அடிக்காமல், பாவனை காட்டி மிரட்டுவதுபோல் இங்கே அம்பைக் கையில் எடுத்து கூர்முனை சரியாக இருக்கிறதா என்று பார்த்த ராமனின் பாவனையிலேயே சமுத்திரராஜன் பணிந்துவிட்டான் என்பது புரிந்துவிடுகிறது.

மேற்பார்வையாளராக இருக்கும் வானரம்

ஆஞ்சநேயன் ஸ்ரீராமன் தோளில் மெல்லக் கை வைத்து சமாதானம் பண்ண, சுக்ரீவன் காலை வருடி நீங்கள் கோபப்பட்டால் தாங்குமா, ஐயா என்று கெஞ்சும் தோரணையும், விபீஷணனோ மிகப் பணிவோடு அவருக்குத் தெரியாததா என்று கூப்பிய கரங்களோடு நிற்க ஆதிசேடன் அவதாரமான இலக்குவனோ, கோபம் கொப்புளிக்க அம்புடன் வில்லையும் சேர்த்துத் தூக்கிவிட்டதைக் காண்கிறோம்.

இது எல்லாமே அழகென்றால் இதற்குமேல் ஒரு அழகிருக்கிறது. இங்கே பாருங்கள்! உயரமான இடத்தில் ஏறி நின்று வேலை ஒழுங்காக நடக்கிறதா என்று ஒரு வானரம் மேற்பார்வை பார்க்கிறது. மனிதர்கள் கக்கத்தில் துண்டை வைத்து அவ்வப்போது அசைத்துச் சுற்றிச் சுற்றி வேலை வாங்குவதுபோல் உருட்டி மிரட்டி அதட்டுவதற்கென்று, இந்த வானரம் கக்கத்தில் ஒரு கிளையை ஒடித்து வைத்திருக்கிறது.

பாலம் கட்டுவதற்கு வேண்டிய மரங்களை அழகாய்ச் சுமந்தபடி வானரங்கள் அதனதன் வேலையைப் பார்ககின்றன! அங்கே வேடிக்கை இல்லை, கூடிக்கூடிப் பேசும் பேச்சும் இல்லை; அனுதாப நாடகம் இல்லை. கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது அன்பர்களே! நமது கவனக்குவிப்பு மட்டுமே தேவைப்படுகிறது. சிற்பங்கள் வெறுமே கதைகளையும் கலாச்சாரம், பண்பாடு மற்றும் காலத்தை மட்டுமே காட்டுவது இல்லை. இதுபோன்ற பாடங்களையும் கற்றுக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றன. 18-லிருந்து 20 அங்குல உயரத்துக்குள் இதுபோன்ற அற்புதத்தை நடத்திய அந்த சிற்பிக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்களைக் காணிக்கை ஆக்குகிறேன். நீங்களும், வணங்கலாம் படைப்பிற்கும் பாடத்துக்குமாய்....!

அடுத்த வாரம் சந்திப்போம்


ஓவியர் பத்மவாசன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x