Published : 09 Nov 2016 05:11 PM
Last Updated : 09 Nov 2016 05:11 PM

அற்புதக் கதை சொல்லும் அழகான சிற்பங்கள் 03: கண்ணனும் வெண்ணெய்யும்!

மஹாவிஷ்ணு அவதாரமான கண்ணனின் லீலைகள்தான் எத்தனையெத்தனை! அவன் வெண்ணெய்யைத் திருடினான். திருடினான் என்கிறோம். அதன் உண்மைப் பொருளென்ன? அவனது சகோதரி அகிலாண்டேஸ்வரி அம்பாளே ஓரிடத்தில் சொல்கிறாள். பெரிய பானையில் தயிரை நிறைத்துக் கடைந்தாலும் சிறிதளவு வெண்ணெய்யே கிடைப்பதுபோல், பலகோடி மக்களில் வெகுசிலரே பகவானை அடைய முயற்சி செய்கிறார்கள். அப்படிப்பட்ட அந்தச் சிலரே வெண்ணெய் போன்றவர்கள், அவர்களையே நான் மிகவும் விரும்புகிறேன், ஆட்கொள்கிறேன் என்பதை எடுத்துக்காட்டவே நவநீதகிருஷ்ணன் வெண்ணெய்யைத் திருடி வந்து உண்டு மகிழ்கிறான்.

நம் மனங்களை திருட நாம் என்ன பாக்கியம் செய்திருக்க வேண்டும்? அதுதானே உண்மை. ஆனாலும் கோபியருக்குத் திருடன் போலவும், பிடிபட்டு, இழுக்கப்பட்டு அவன் தாயின் முன் வருவது போலவும் , அங்கே அம்மாவின் பின்னே நிற்பது போலவும், கோபிகைகள் திகைப்பதுவும் என எண்ணிலடங்காத திருவிளையாடல்களை நிகழ்த்துபவன் மாயக் கண்ணன். பகிர்ந்து உண்ணவும் பல்லுயிர் ஓம்பவும் அவன் கற்றுக்கொடுக்கிறான்.

பகிர்ந்துண்ட கண்ணன்

பாருங்கள் பூனைக்குக் கொடுக்கிறான், குரங்குகளுக்குக் கொடுக்கிறான் நண்பர்களுக்குத் கொடுக்கிறான். கொடுக்காமல் உண்டதாக ஒரு நிகழ்வு கூட இல்லையே. குழந்தைகளுக்கு இவற்றைத்தான் சொல்லிக் கொடுக்க வேண்டும். இவற்றையெல்லாம்தான் கல்மேல் எழுத்தாக அந்தச்சிற்பிகள் பொறித்துவிட்டு போயிருக்கிறார்கள். இங்கே காணப்படும் சிற்பங்களில் ஒன்று திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் போகும் வழியில் உள்ள ஸ்ரீ வைகுண்டம் என்ற திருத்தலத்தில் உள்ள கைலாசநாதர் ஆலயத்தில் உள்ளது. இன்னுமொன்று திருக்குறுங்குடி என்ற திருத்தலத்தில் உள்ளது. இரண்டுமே வெண்ணெய் திருடும் நவநீத கிருஷ்ணன்தான்.

ஸ்ரீ வைகுண்டம் சிற்பத்தில் movement எனப்படும் அடுத்தடுத்த நிலைகளைக் காட்டியிருக்கும் சிற்பியின் (Animation) கைவண்ணம் வியக்க வைக்கிறது. பானையை எடுத்து வைத்து உண்டுவிட்டு மீண்டும் எழுந்து ஒன்றில் கைவிட, சத்தம் கேட்டு மத்தை ஓங்கியபடி ஒரு கோபிகை வருகிறாள். இதில் கவனிக்கப்பட வேண்டியது. ஒரு பானை கீழே வந்தபின், அடுத்த பெரிய ஒரு பானை உறியில் இருக்கிறது. கண்ணனையும் ஒரே மாதிரியே மிகக் கவனமாக செதுக்கியிருக்கிறார் சிற்பி. நின்று நிதானித்து ரசித்துப் பார்க்கையில்தான் அதன் அழகும் எழிலும் புரியும். நமது மனமும் அந்த வெண்ணெய் போன்று உருகிவிடும்.

திருக்குறுங்குடி சிற்பத்தில் வேறுவிதமான அழகு. அங்கே நண்பர்களுக்கு ஆளுக்கு ஒரு பானை கொடுத்துவிட்டுத் தனக்காக எடுக்கிறான். ஆனாலும் மீண்டும் வேண்டும் என்று அவர்களை கை தூக்கி நிற்கின்ற பாவனையில் ஆசையும் ஏக்கமும் தெரிகிறது. இரு சிற்பங்களிலும் பூனைகள், அள்ளிப்போட்ட உருண்டைகளை தின்றுவிட்டு அவையும் மேலும் வேண்டி ஏக்கப்பார்வை பார்க்கின்றன. இது அன்றாடம் கண்ணனின் விளையாட்டு இதற்கிடையில் மாமன் கம்சன் அமைக்கும் விளையாட்டையும் ஆடி ஜெயிப்பதும், பின் எதுவும் தெரியாததுபோல் நடிப்பதும் தெய்வீகக் காட்சிகளல்லவா!

இன்னும் ஒரு சிற்பம்

மாமன் ஏவிய ஒரு அரக்கன் காளை வடிவில் வர அவனோடு விளையாடிப் போக்குக்காட்டி பின் லாவகமாகத் தாவியேறிக் கொல்கிறான். இங்கே அவன் முகத்திலோ, கையிலோ, காலிலோ, கோபமோ அழுத்தும் பாவனையோ இல்லை. ஆனால் மாடு மூச்சு முட்டித் திணறுவது போலவே இருக்கிறது. இவையெல்லாம் தான் நுணுக்கங்கள். கொட்டிக் கொடுத்துவிட்டுத்தான் போயிருக்கிறார்கள். ரசிக்கத்தானா நமக்கு நேரமும் இல்லை, மனசும் இல்லை.

ஒரு புள்ளியில் இருந்து கோலத்தை ஆரம்பிப்பதுபோல ஒரு காட்சியை அழகுற வடித்துக்கொடுத்து அங்கிருந்து நமது கற்பனையை விரித்துக்கொண்டு சிறகடிக்க வழி அமைத்துக் கொடுக் கிறார்கள் இந்தச் சிற்பிகள். குழந்தைகளை அருகில் வைத்து நுணுக்கங்களை சொல்லி, அதற்கு அடுத்தபடிகளை வரையச் சொல்லலாம். எழுத வருமாயின் எழுதச் சொல்லலாம். நடித்துக் காட்டச் சொல்லலாம். ஒரு சிற்பத்தில் இருந்தே குழந்தைகளின் திறமைகளைக் கண்டு அறிந்து அவர்களை அந்தந்த துறையில் மேதைகளாக்கலாம். இவையெல்லாம் நம் கைகளில்தான் உள்ளது.

(அடுத்த வாரமும் கண்ணனின் திருவிளையாடல்தான்…)


ஓவியர் பத்மவாசன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x