Published : 03 Nov 2016 12:05 PM
Last Updated : 03 Nov 2016 12:05 PM

அற்புதக் கதை சொல்லும் அழகான சிற்பங்கள் 02: கணேசனும்... கஜமுகாசுரனும்!

விநாயகரது திருவிளையாடல்கள் பலப் பல இருந்தாலும் கஜமுகனை வென்று தனது வாகனமாக்கிக் கொண்டது மிக முக்கியமானது. அதாவது இதற்குமுன் ‘‘எலி’’ வாகனமாக இல்லையா? இல்லை. அதற்கு முன்னும் எலி தான் வாகனம். இப்போது இந்த கஜமுகனை வதம் பண்ணி அவர் பாதமலரின் கீழ் இருக்கும் பெரும் பாக்கியத்தை அருளுகிறார் அவ்வளவுதான்.

இதில் நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் கஜமுகாசுரன் ஒரு பெரிய புண்ணிய ஆத்மா. ஏதோ ஒரு காரணத்தால் அசுரனாகப் பிறந்து அதன் மூலம் அவன் இறைவன் திருவடிகளை அடைகின்றான். நாமெல்லோரும் அவன் பாதகமலங்களின் நிழலில் இளைப்பாறுவதென்பது போல் அல்லாமல், அவன் அவரோடு சேர்ந்து இயங்கிக்கெண்டே இருக்கிறான். அவருக்கு நடக்கும் பூசைகள் இவனுக்கும் சேர்ந்தே நடக்கிறது. அவருக்கான அலங்காரத்தின்போது இவனுக்கும் நடக்கிறது. இது பெரும் பேறு அல்லவா?

விநாயகரிடம் முறையிட்ட இந்திரன்

கஜமுகாசுரன், மாகத முனிவரின் மகன். மாகத முனிவர், விபூதி என்னும் அசுரப் பெண் மீது கொண்ட மோகத்தால் பிறந்தவனே கஜமுகன். அவன் தனது அட்டகாசங்களை ஆரம்பிக்க முனிவர்களும் தேவர்களும் நடுங்கிப் போனார்கள். இவனைச் சிவனை நோக்கித் தவம் செய்யச் சொல்லி, அவனது அழிவுக்கு வழி வகுத்தவன் சுக்கிரன். அவன் காட்டிய பாதையில் சிவனை நோக்கித் கடுந்தவம் புரிந்து எந்தவொரு ஆயுதத்தாலும் எந்த ஒரு நபராலும் அழிக்க முடியாது என்ற வரம் பெற்றான்.

வரம் பெற்றபின் வதைக்க ஆரம்பித்தான். ஏற்கெனவே பயந்து போயிருந்த இந்திரனிடம் தேவர்கள் முறையிட்டனர். இந்திரன், கயிலை நோக்கிப் போனான். வரம் கொடுத்ததே சிவபெருமான் என்பதால், அவரது மகன் விநாயகரிடம் போனான். சிவந்த மேனியோடும், ஒளியோடும் மகிழ்ச்சியாக இருந்த விநாயகர் முன் சாஷ்டாங்கமாக வீழ்ந்து வணங்கி விஷயத்தைச் சொன்னான். பூதப்படைகள் ஜெய கோஷம் போட அவர்கள் புடை சூழப் புறப்பட்டார் விநாயகர்.

சினம் கொண்ட கஜமுகன்

கஜமுகனது ராஜாங்கம் நடக்கும் மதங்கபுரத்தை வந்து அடைந்தார். போருக்குத் தயாராகவே இருந்த கஜமுகாசுரன் தன்னைப் போலவே முகம் கொண்ட ஒருவரை பார்த்து துணுக்குற்று அவரது முகத்தின் அழகையும் பிரகாசத்தையும் தனது முகத்தின் அழகையும் ஒருகணம் ஒப்பிட்டுப்பார்த்துக் கொண்டான். சினம் இன்னும் அதிகமானது; வில்லெடுத்து அம்பை எய்தான். அவன், பாணங்களை எல்லாம் தனது உலக்கையால் தடுத்துத் தள்ளினார். இவன் அவரது உலக்கையைப் பிடுங்கிக்கொண்டு சண்டை போட்டான்.

கதாயுதத்தை வரவழைத்து அதனை வைத்துச் சண்டை போட்டார் விநாயகர். ஓங்கி அடித்தார்; மயங்கி விழுந்தானேயன்றி இறக்கவில்லை. தந்தையார் கொடுத்த வரம் பற்றிய சிந்தனை தோன்ற, தனது தந்தத்தை ஒடித்து அவனை நோக்கி எறிய அது சீறிப் பாய்ந்து சென்று தாக்கியது. தாக்குப்பிடிக்க முடியாத கஜமுகன் வீழ்ந்தான். பெருச்சாளி என்ற பெரிய எலி உருவம் எடுத்து ஓடிவந்து விநாயகர் காலடியில் ஒடுங்கிக் கொண்டான். வாகனமாய் ஏற்று ஆட்கொண்டு அருள் செய்தார் பிள்ளையார்.

சிற்பத்தைப் பாருங்கள்

இது சுசீந்திரம் தாணுமாலயப் பெருமாள் கோவிலின் செம்பராண் மண்டபத்தூணில் இருக்கிறது. விநாயகர் எலி மீது அமர்ந்தபடி அவன் துதிக்கையை அழுத்திப்பிடிப்பதும் அந்தக் கையில் அவர் எப்போதும் வைத்திருக்கும் பாசக்கயிறு இருப்பதும் தெரிகிறது. உலக்கையை நீ பறித்தால் என்ன.. இப்போது பார் என்ற பாணியில் தும்பிக்கையில் கதையை ஏந்திச் சுழற்றி அடிக்கும் பாவனையும் ஆக்ரோஷமும் அவ்வளவு துல்லியமாகத் தெரிகிறது.

எலியைப் பார்த்தால் ஏதோ சிங்கம் கர்ஜிப்பது போன்ற உணர்வு ‘என் வேலைக்கு உலை வைக்க வந்தவனே’ என்று கோபத்தில் கொதிப்பதுபோல் எனக்குத் தோன்றுகிறது. மொத்தமாக ரசித்துப் பார்க்க வேண்டிய இந்தச் சிற்பம், வெறும் கதையை மட்டும் சொல்லவில்லை. ரசிக்கச் சொல்கிறது. லயிக்கச் சொல்கிறது மகிழச் சொல்கிறது. சரிதானே அன்பர்களே அடுத்த வாரம் இன்னுமொரு சிலிர்ப்பூட்டும் சிற்பத்துடன்...


ஓவியர் பத்மவாசன்

(தரிசிப்போம்...)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x