Last Updated : 14 Jan, 2017 11:00 AM

 

Published : 14 Jan 2017 11:00 AM
Last Updated : 14 Jan 2017 11:00 AM

சரிகிறது வீடு விற்பனை

மத்திய அரசின் பண மதிப்பு நீக்க அறிவிப்புக்குப் பின்னரான நடவடிக்கைகளால் இந்திய ரியல் எஸ்டேட் துறை கடுமையாகப் பாதிப்படைந்திருக்கிறது என்று அத்துறைனர் தொடர்ந்து கூறிவருகிறார்கள். இதை மெய்ப்பிக்கும் வகையிலான அறிக்கை ஒன்றை நைட் ஃப்ராங் இந்தியா நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. கடந்த ஆண்டின் இறுதிக் காலாண்டில் மட்டும் தேசிய வருமான இழப்பு 22,600 கோடி ரூபாய் என மதிப்பிட்டிருக்கிறது நைட் ஃப்ராங் இந்தியா நிறுவனத்தின் அறிக்கை. இதே காலகட்டத்தில் முத்திரைக் கட்டணம் வாயிலாக மாநில அரசுகளுக்குக் கிடைக்க வேண்டிய வருமானமும் 1,200 கோடி ரூபாய் அளவுக்குக் குறைந்துள்ளது.

குடியிருப்புத் திட்டங்களைப் பொறுத்தவரையில் கடந்த ஜூலையில் 23 சதவீத அளவுக்கு விற்பனை குறைந்திருந்த நிலையில் கடந்த டிசம்பரில் விற்பனையானது 46 சதவீதம் அளவுக்கு குறைந்திருக்கிறது. குடியிருப்புத் திட்டங்கள், ஜூலையில் சுமார் 1 லட்ச அலகுகளும், டிசம்பரில் 68,700 அலகுகளும் விற்பனையாகியுள்ளன. 2015-ம் ஆண்டில், ஜூலையில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் அலகுகளும், டிசம்பரில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் அலகுகளும் விற்பனையாகியிருந்தன.

2016-ம் ஆண்டின் கடைசிக் காலாண்டுக் காலத்தை 2015-ம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, வீடுகளின் விற்பனை 40 சதவீதம் குறைந்துள்ளது; புதிய குடியிருப்புத் திட்டங்களின் அறிமுகம் 61 சதவீதம் குறைந்திருக்கிறது. 2015-ம் ஆண்டில் 73,769 அலகுகள் விற்பனையாகியிருந்தன. ஆனால் கடந்த ஆண்டில் 40,936 அலகுகள் மட்டுமே விற்பனையாகிருந்தன.

கடந்த நவம்பர் 8 அன்று பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட பண மதிப்பு நீக்க அறிவிப்பால் ரூ.500, ரூ.1000 ஆகிய நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுவிட்டதாலேயே இந்த விற்பனைக் குறைவு ஏற்பட்டுள்ளதாகவே அறிக்கை தெரிவிக்கிறது. கடந்த ஆண்டில் இறுதிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்தப் பொருளாதார நடவடிக்கையுடன், வங்கிகளில் பணம் எடுக்க விதித்துள்ள வரம்பும் சேர்ந்து ரியல் எஸ்டேட் துறைக்குப் பெரிய பாதிப்பை உண்டு பண்ணியிருக்கின்றன.

ரியல் எஸ்டேட் துறையில் குடியிருப்புத் திட்டங்கள் பலத்த அடிவாங்கியிருக்கும் சூழலில் பண மதிப்பு நீக்க அறிவிப்பால் வணிக வளாகச் சந்தை பெரிய பாதிப்படையவில்லை என்பது ஆச்சரியம் தருகிறது. 2015-ம் ஆண்டில் ஜூலை முதல் டிசம்பர் வரையான காலகட்டத்தில் 2.32 கோடி சதுர அடி வணிக வளாகப் பகுதி விற்பனையாகியிருந்தது. இது 2016-ம் ஆண்டில் 12 சதவீதம் மட்டுமே குறைந்து 2.04 கோடி சதுர அடி விற்பனையைத் தொட்டிருந்தது.

ரியல் எஸ்டேட் துறைக்கு 2008-ல் பொருளாதார மந்த நிலைக்குப் பின்னரான மிக மோசமான பாதிப்பு இதுதான் என்று அறிக்கையை வெளியிட்டுப் பேசிய காஞ்சனா கிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார். 2015-ம் ஆண்டைவிட 2016-ம் ஆண்டு சற்று மேம்பட்டிருக்கும் என்று ஏற்கெனவே கணித்திருந்த நிலையில் இந்தப் பண மதிப்பு நீக்க அறிவிப்பு அந்தக் கணிப்பைப் பொய்யாக்கிவிட்டது என்றும் அவர் மேலும் கூறியிருக்கிறார். ஆனாலும் இந்தப் பாதிப்பானது குறுகிய காலத்துக்கே நீடிக்கும் என்று நம்புவதால் 2017-ல் ரியல் எஸ்டேட் துறை மேம்பாடு காணும் என்றும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

சென்னையைப் பொறுத்தவரை, குடியிருப்புத் திட்டங்களின் விற்பனை 9 சதவீதம் குறைந்திருக்கிறது; புதிய குடியிருப்புத் திட்டங்களில் அறிவிப்பு 29 சதவீதம் குறைந்துள்ளது. 2015-ம் ஆண்டில் இறுதியில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பு, அரசியல் சூழல் போன்ற பல்வேறு பட்ட காரணங்களுடன் பண மதிப்பு நீக்க அறிவிப்பும் இணைந்து இந்தச் சரிவை ஏற்படுத்தியுள்ளதாக அறிக்கை குறிப்பிடுகிறது. சென்னையில் வணிக வளாகத் திட்டங்களின் விற்பனை அதிகரித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x