Last Updated : 14 Jul, 2018 09:39 AM

 

Published : 14 Jul 2018 09:39 AM
Last Updated : 14 Jul 2018 09:39 AM

தண்ணீர்த் தொட்டியைப் பராமரிக்கிறீர்களா?

ம் வீட்டுத் தண்ணீர்த் தொட்டி முறையாகப் பராமரிக்கப்பட வேண்டியது அவசியம். சுத்தம் செய்யப்படாத தண்ணீர்த் தொட்டியில் பலவிதக் கிருமிகள் வாசம் செய்யும். இதனால் அது பலவிதத் தொற்றுநோய்களுக்குக் காரணமாகவும் அமைவதுண்டு. எனவே, தண்ணீர்த் தொட்டிகளை அவ்வப்போது நன்கு சுத்தம் செய்வது அவசியம்.

தண்ணீர்த் தொட்டிகளை இருவிதங்களில் சுத்தம் செய்ய முடியும். ஒன்று நாமே அதில் இறங்கி சுத்தம் செய்வது (அல்லது இதற்காக ஒரு பணியாளரை அமர்த்துவது), மற்றொன்று இதற்கான தானியங்கிக் கருவிகளைப் பயன்படுத்துவது.

பல வீடுகளில் தண்ணீர்த் தொட்டி சுத்திகரிக்கப்படும் செயல்முறை இப்படித்தான். தொட்டிக்குத் தண்ணீரைக் கொண்டுவரும் குழாயை ஆஃப் செய்துவிட வேண்டும். இதன் மூலம் தொட்டிக்குள் தண்ணீர் சேர்வது தடுக்கப்படுகிறது.

பிறகு தொட்டி நீர் வெளியேற்றப்படுகிறது. என்ன இருந்தாலும் தண்ணீர் முழுமையாக வெளியேறிவிடாது. தொட்டியின் உட்புறங்களை டிடெர்ஜெண்ட் தூளையும் தண்ணீரையும் கொண்டு நன்கு தேய்க்க வேண்டும்.

சிலநிமிடங்களுக்குப் பிறகு உட்புறச் சுவர்களைத் தண்ணீரால் மட்டுமே நன்கு கழுவி டிடெர்ஜென்ட் தூள், அதன் வாசத்தை முற்றிலுமாக வெளியேற்ற வேண்டும்.

இப்படிச் சுத்தமாக்கிய பிறகு கொஞ்சம் குளோரினைத் தொட்டியின் நாற்புறங்களிலும் (கீழ்ப்புறத்திலும்தான்) தெளிக்க வேண்டும். சுமார் 12 மணி நேரத்துக்கு அதை உலர வைக்க வேண்டும். அப்போது குளோரினுடன் தண்ணீர் கலந்து இருக்கலாம்.

12 மணி நேரத்துக்குப் பிறகு அதை நீரூற்றி வெளியேற்ற வேண்டும். மீண்டும் மீண்டும் தண்ணீர் ஊற்றிக் கழுவுதல் அவசியம். ஏனென்றால், தொட்டியில் குளோரின் அதிக அளவில் காணப்பட வாய்ப்பு உண்டு.

காலியான தொட்டியில் நல்ல நீரை நிரப்ப வேண்டும். அரை மணி நேரத்துக்குப் பிறகு அந்தத் தண்ணீரைச் சோதித்துப் பார்க்க வேண்டும். குளோரின் வாசனை அதிகமாக இருக்கக் கூடாது. கணக்கிட்டுச் சொல்வதானால் ஒரு லிட்டர் நீரில் 0.5 மில்லிகிராம் அல்லது அதற்குக் குறைவான குளோரின்தான் கலந்திருக்க வேண்டும். இதைவிட அதிகம் காணப்பட்டால் அந்தத் தண்ணீரை வெளியேற்றிவிட்டு பிறகு நீரை நிரப்பிப் பயன்படுத்த வேண்டும்.

பல வீடுகளில் சிறிய அளவிலான தொட்டிகள் இருக்கும்போது, மேற்படிச் செயல்முறை சரியானதாக இருக்கும். ஆனால், அடுக்ககக் கட்டிடங்களிலும் பிரம்மாண்ட மாளிகைகளிலும் மிகப் பெரிய அளவு கொண்டதாகத் தண்ணீர்த் தொட்டிகள் இருக்கும். அவற்றுக்கு வேறு வகையான சுத்திகரிப்பு மேம்பட்டதாக இருக்கும். இதன் மூலம் நேரத்தையும் தொகையையும் மிச்சப்படுத்த முடியும். இது தானியங்கித் தண்ணீர்த் தொட்டி சுத்தப்படுத்தும் முறை (Automated Tank Cleaning).

இந்த வகைச் சுத்திகரிப்பு முறை என்பது அதில் படிந்துள்ள அழுக்கு, மண் போன்றவற்றை நீக்குவதிலிருந்து தொடங்குகிறது. இவற்றை நீக்க வெற்றிட பம்ப் பயன்படுத்தப்படுகிறது. பிறகு அதிக அழுத்தம் கொண்ட விசேஷமான ஜெட்களின் மூலம் தொட்டியின் உட்புறம் தண்ணீர் விசையுடன் பீச்சியடிக்கப்படுகிறது.

அடுத்து தொட்டியிலுள்ள நீரில் குளோரின் அல்லது பாக்டீரியாவுக்கு எதிரான வேதியல் பொருட்கள் உட்செலுத்தப்படுகின்றன. பிறகு இந்தத் தண்ணீர் சிறிது நேரம் வைக்கப்பட்டு வெளியேற்றப்படுகிறது. அதற்குப் பிறகு தண்ணீர் அதில் அனுமதிக்கப்பட்டுப் பயன்படுத்தப்படுகிறது.

தண்ணீர்த் தொட்டியின் தரைப்பகுதியைச் சுத்தப்படுத்த வெற்றிட பம்ப் பயன்படுத்தப்படுகிறது. மீதமிருக்கும் தூசுகளை வெறியேற்ற தொழிலகக் குழாய் (Industrial Pump) பயன்படுகிறது.

ஏதோ வருடத்துக்கு ஒரு நாள் என்பதுபோல் எல்லாம் தண்ணீர்த் தொட்டியில் சுத்தம் செய்யக் கூடாது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாவது சுத்தம் செய்ய வேண்டும். நீங்கள் முழு விவரமும் அறிந்த அனுபவமுள்ளவராக இருந்தாலொழிய இதற்கான விவரம் தெரிந்த பணியாளரை அமர்த்திக்கொள்வது நல்லது.

    FOLLOW US

    Sign up to receive our newsletter in your inbox every day!

    WRITE A COMMENT
     
    x