Last Updated : 06 Jul, 2018 07:05 PM

 

Published : 06 Jul 2018 07:05 PM
Last Updated : 06 Jul 2018 07:05 PM

தெரு வாசகம்: கார்களை அலங்கரிக்கும் சாலை

 

ஜெ

னரல் பாட்டர்ஸ் சாலை என்றவுடன் முதலில் நம் நினைவுக்கு வருபவை வாகன உதிரிப் பாகங்கள். ஆடம்பரமான சீட் உறையோ நவீன ஆடியோ சிஸ்டமோ பழைய பாகங்களோ எது வேண்டுமானாலும் அங்கு கிடைக்கும். டாடாவின் நானோ காராக இருந்தாலும் சரி, பென்ஸின் நவீன எஸ்யுவி காராக இருந்தாலும் சரி, எல்லா கார்களும் தங்களுக்குத் தேவையான பாகங்களைப் பெறுவதற்குச் செல்லும் இடமே ஜெனரல் பாட்டர்ஸ் சாலை. இப்போது இதன் பெயர் திரு.வி.க. சாலை என மாற்றப்பட்டுள்ளது.

அண்ணா சாலையிலிருந்து (மவுண்ட் ரோடு) பிரிந்து சென்னை எல்.ஐ.சி.க்குப் பின்புறம் இந்தச் சாலை செல்கிறது. சென்னை மெட்ரோ ரயில் கட்டுமான வேலையால் இந்தச் சாலை முழுவதும் போக்குவரத்து நெரிசலில் பிதுங்கித் திணறுகிறது. இந்தச் சாலையில் செல்லும் வண்டிகளுக்கு முன்னும் பின்னும் ஓரங்குல இடைவெளி இருந்தால்கூட, அது ஆச்சரியமே. இந்தப் போக்குவரத்து நெரிசலால் சில நன்மைகளும் இந்தச் சாலைக்கு ஏற்பட்டுள்ளன.

சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போல, குப்பை மேட்டுக்குள் இன்று இந்தச் சாலை மூழ்கியிருக்கவில்லை. போக்குவரத்து நெரிசலால் குப்பைகள் இன்று உடனுக்குடன் அகற்றப்பட்டுவிடுகின்றன. சாலை முழுவதையும் வாகனங்கள் ஆக்கிரமித்துள்ளதால், மனிதர்கள் நடந்து செல்வது அரிது. இதனால், பான்பராக் உமிழ்வுகளால் ஏற்படும் சிவப்புக் கறைகள் சாலைகளில் இல்லை.

50 ஆண்டுகளுக்கு முன்பு, அண்ணா சாலைதான் தென்னகத்தின் பிரசித்திப் பெற்ற வாகன உற்பத்தியாளர்களின் விருப்ப இடம். தற்செயலாகவோ திட்டமிட்டோ எல்லாப் பெரிய நிறுவனங்களின் விற்பனை நிலையங்களும் அலுவலகங்களும் அண்ணா சாலையிலேயே இருந்தன. சிம்சன், ஆடிஸன், ராயல் என்பீல்ட், சவுத் இந்தியா அட்டோமொடிவ் கம்பெனி, அமால்கமேஷன் குழுமத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஓக்ஸ், ஸ்டாண்டர்ட் மோட்டார் புராடெக்ட்ஸ் ஆப் இந்தியா, டிவிஎஸ் போன்றவையும் அங்குதான் இருந்தன.

வாகன உற்பத்தி மையங்கள் அண்ணா சாலையில் இருந்ததால், இயல்பாகவே வாகனப் பழுது பார்க்கும் நிலையங்கள் அண்ணா சாலைக்கு அருகில் அதை ஒட்டி இருந்த பார்டர் தோட்டத்தில் பல்கிப் பெருகின. அந்தக் காலத்தில் இடங்களின் பெயர்களுக்குப் பின்னால் தோட்டம் என்று சேர்த்துக்கொள்வது வாடிக்கை. ஆங்கிலேயர்களின் காலத்தில் தோட்டம் ‘கார்டன்’ என்று மாறியது. இன்று சென்னையில் இருக்கும் கீழ்ப்பாக்கம் கார்டன், கே.எம். கார்டன் போன்றவை அப்படி உருவானவைதாம்.

பார்டர் தோட்டத்தில் மட்டுமே இருந்த பழுது பார்க்கும் நிலையங்கள், இன்று சிந்தாதிரிப்பேட்டை, புதுப்பேட்டை போன்ற இடங்களிலும் படர்ந்து பரவியுள்ளன. புதுப்பேட்டையில் தடுக்கி விழுந்தாலும் ஒரு வாகனப் பழுது பார்க்கும் கடையில்தான் விழுவோம். அந்த அளவுக்கு இன்று அந்தப் பகுதி முழுவதும் பழுதுபார்க்கும் கடைகள் நிறைந்துள்ளன.

பெரிய ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு உதிரிப் பாகங்களை விற்பனை செய்வதில் விருப்பமில்லை. இதனால் வாகனப் பழுது பார்க்கும் நிலையங்களுக்கும் ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கும் இடையே உதிரிப் பாகங்களை விற்பனை செய்வதற்குச் சிறு வியாபாரிகள் முளைத்தனர். அந்தச் சிறு வியாபாரிகளுக்கு ஏற்ற இடமாக இந்த ஜெனரல் பாட்டர்ஸ் சாலை விளங்கியது.

பெரிய நிறுவனங்கள் அருகிலிருந்ததும் குறைவான வாடகையுமே அதற்குக் காரணங்கள். ஜெனரல் பாட்டர்ஸ் சாலையில் மட்டுமல்லாமல், உதிரிப் பாகக் கடைகள் ஸ்டேட் பாங்க் தெருவிலும் ஒயிட்ஸ் ரோட்டிலும் பரவியிருந்தன. இதனால், அந்தக் காலகட்டத்தில் இந்தியாவின் டெட்ராய்ட் என்று இந்தப் பகுதி அழைக்கப்பட்டது.

ஜெனரல் பாட்டர்ஸ் சாலையைச் சுற்றிய ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்குள்தான் ஆட்டோமொபைல் சார்ந்த தொழில்கள் அன்று இருந்தன. கால ஓட்டத்திலும் நாகரிக வளர்ச்சியிலும் 1980-களில் வாகனங்களின் எண்ணிக்கை சென்னையில் அதிகரித்தன. இதனால் வாகனங்களைப் பழுது பார்க்கும் நிலையங்களும் உதிரிப் பாகக் கடைகளும் நகரின் மற்ற பகுதிகளுக்கும் பரவின. இன்று இந்தக் கடைகள் இல்லாத தெருவே சென்னையில் இல்லை எனலாம். இன்று ஜெனரல் பாட்டர்ஸ் சாலையில் மொத்த விற்பனைக் கடைகள் உள்ளன. அவை நகரின் மற்ற பகுதிகளில் இருக்கும் கடைகளுக்குப் உதிரிப் பாகங்களை விற்பனை செய்கின்றன.

ஜெயப்பிரதா தியேட்டர், மெலோடி தியேட்டர் போன்றவையும் இந்த ஜெனரல் பாட்டர்ஸ் சாலையில்தான் இருந்தன. சத்தியமூர்த்தி பவன் இந்தச் சாலையில்தான் உள்ளது. அண்ணா சாலையில் இருந்து ஜெனரல் பாட்டர்ஸ் சாலை தொடங்கும் இடத்தில் இன்று ‘புகாரி ஹோட்டல்’ போன்ற சென்னையின் பாரம்பரியமிக்க உணவகங்கள் உள்ளன. இந்தச் சாலை முடியும் இடத்தில் எக்ஸ்பிரஸ் அவென்யு வணிகக்கூடம் உள்ளது. இந்தச் சாலையில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு இவையும் காரணங்களே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x