Last Updated : 21 Apr, 2018 10:24 AM

 

Published : 21 Apr 2018 10:24 AM
Last Updated : 21 Apr 2018 10:24 AM

தெருவாசகம்: ஏழு கிணறுகள்

செ

ன்னையில் கோடைக் காலம் எப்போதும் தனியாக வருவதில்லை. அது வருடா வருடம் தண்ணீர் பஞ்சத்தையும் அழைத்துவந்துவிடுகிறது. இந்தத் தண்ணீர் பஞ்சம் இன்று நேற்று நடக்கும் நிகழ்வு அல்ல, காலங்காலமாக இருந்துவருகிறது. சென்னைப் பட்டணமாக மாறத் தொடங்கியதுமே தண்ணீர்ப் பஞ்சமும் வந்திருக்கலாம்.

அதற்கு முன்புவரை மதராஸப்பட்டணமாக இருந்த சென்னையின் தண்ணீர்த் தேவையை இங்கு ஓடிய ஆறுகளும் நீர் சுரந்த ஊற்றுகளும் ஊரணிகளும்தாம் தீர்த்துவைத்தன. ஆனாலும் 18-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அது போதாமல் போனது. சென்னையின் தண்ணீர் தேவையைத் தீர்ப்பதற்காகக் கூடுதலாக ஏழு கிணறுகள் தண்ணீர் சேவை நிலையம் நிர்மாணிக்கப்பட்டது. அது இன்றைய தங்க சாலையும் பழைய ஜெயில் சாலையும் சந்திக்கும் இடத்தில் அமைக்கப்பட்டது.

1891-ல் சென்னையில் சுமார் ஐந்து லட்சம் பேர் வசித்தனர். அவர்களின் தண்ணீர் தேவையை இந்த ஏழு கிணறுகளும் மதராஸ் முனிசிபாலிட்டியின் கட்டுப்பாட்டில் இயங்கிய மதராஸ் வாட்டர் வொர்க்ஸும் தீர்த்துவைத்தன. அவற்றில் ஏழு கிணறுகள்தாம் மிகவும் பழமைவாய்ந்தவை. இந்தக் கிணறுகளை வெட்டியது ஃப்ரான்சிஸ் வைட் எல்லீசன் என்று தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு வருகிறது. அதற்குக் காரணம் பெரியபாளையத்தம்மன் கோயிலில் இருந்த எல்லீசனின் கல்வெட்டு.

அந்தக் கல்வெட்டில் 1818-ல் சென்னையில் நிலவிய பஞ்சத்தைத் தீர்ப்பதற்காக அவர் 27 கிணறுகளை வெட்டியதாகப் பொறிக்கப்படிருந்தது. ஆனால், அந்த 27 கிணறுகளில் இந்த ஏழு கிணறுகள் அடங்கவில்லை என்பதை ஜி. டபிள்யூ. மெக்ஜார்ஜ் என்பவர் எழுதியுள்ள ‘வேஸ் அண்ட் வொர்க்ஸ் இன் இந்தியா’ எனும் புத்தகத்திலிருந்து அறிய முடிகிறது. அந்தப் புத்தகத்தின்படி, இந்தக் கிணறுகள் 1772-ம் ஆண்டே பேகர் எனும் ஆங்கிலேயத் தளபதியால் நிர்மாணிக்கப்பட்டுவிட்டன.

அவர் அரசாங்கத்துடன் ஒப்பந்தமிட்டு அதன்படி சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுமார் 6,000 பேரின் தண்ணீர் தேவையை ஏழு வருடங்களுக்குத் தீர்த்துவைத்தார். 1782-ம் ஆண்டு இந்த ஏழு கிணறு தண்ணீர் சேவையை அரசாங்கம் 10,500 ரூபாய் விலைக்கு வாங்கிக்கொண்டது. ஆரம்பத்தில் கிழக்கிந்திய அரசு ஏழு கிணற்றிலிருந்து பெற்ற தண்ணீரைக் கோட்டைக்கு மட்டும்தான் பயன்படுத்தியது. பின்பு அதை அருகில் இருந்த ராணுவ மையங்களுக்கும் பிரசிடென்ஸி குடியிருப்புக் கட்டிடங்களுக்கும் பயன்படுத்த ஆரம்பித்தது.

இந்த ஏழு கிணறுகள் தண்ணீர் சேவை நிலையம் கடலிருந்து ஒன்றரை கி.மீ. தொலைவில் இருக்கிறது. அந்த நிலையத்திலிருந்து கோட்டை சுமார் 3 கி.மீ. தொலைவில் இருக்கிறது. ஏழு கிணறு நிலையத்திலிருந்து தண்ணீர் பெறும்பகுதிகளிலேயே தொலைவான பகுதி இந்தக் கோட்டைதான். இந்த நிலையத்தில், பதினாறு அடி விட்டத்தில் 23-லிருந்து 29 அடி ஆழத்தில் பத்துக் கிணறுகள் வெட்டப்பட்டன. ஆனால், அந்தப் பத்துக் கிணறுகளில் மூன்றில் தண்ணீர் ஊற்று குறைவாக இருந்ததால் அவை கைவிடப்பட்டன. அதனால் அதன் பெயரும் ஏழு கிணற்றுத் தண்ணீர் சேவை என்றானது.

இந்தக் கிணறுகளிலிருந்து தண்ணீரானது பிகோட்டா லிவர் மூலம் தொட்டிகளுக்கு மேலேற்றப்பட்டது. பின்பு அது நாற்பத்து எட்டு அடி நீளமும் முப்பது அடி அகலமும் ஆறு அடி உயரமும் கொண்ட பில்டர்களில் (வடிப்பான்கள்) சுத்திகரிக்கப்பட்டது. பின்பு அங்கிருந்து 2,000 கன அடி கொள்ளளவு கொண்ட இரண்டு பெரிய தொட்டிகளுக்குத் தண்ணீர் மேலேற்றப்பட்டது. பின்பு அந்தத் தொட்டிகளிலிருந்து 5 அங்குல விட்டம் கொண்ட இரும்புக் குழாய்கள் வழியாகப் புவி ஈர்ப்பு விசையின்மூலம் தேவைப்படும் இடங்களுக்குத் தண்ணீர் வழங்கப்பட்டது. இந்தத் திட்டத்துக்கு அப்போது ஆன மொத்தச் செலவு சுமார் நாற்பத்து மூன்று ஆயிரம் ரூபாய் மட்டுமே.

1925-ம் வருடம்வரை இந்த ஏழு கிணறுகளின் பாதுகாப்பாளராக நிக்கோலஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான் இருந்துள்ளார்கள். மரியாதையின் அடிப்படையில் அரசாங்கத்தால் அவர்கள் பாதுகாப்பாளராக நியமிக்கப்பட்டனர். ஆனால், அந்தக் கௌரவத்தைப் பயத்தின் அடிப்படையில் அவர்கள் துறந்துவிட்டனர். இந்த இரண்டுக்கும் ஒரு சுவாரசியமான பின்னணி உண்டு.

18-ம் நூற்றாண்டில் மைசூர் நவாப் ஹைதர் அலியும் அவரது மகன் திப்பு சுல்தானும் ஆங்கிலேயர்களைத் தென்னிந்தியாவில் மிகத் தீவிரமாக எதிர்த்துள்ளனர். சொல்லப்போனால் தங்கள் படை பலத்தாலும் போர் உத்திகளாலும் நவீன ஆயுதங்களாலும் அவர்கள் ஆங்கிலேயர்களுக்குச் சிம்ம சொப்பனமாக இருந்துள்ளார் என்பதை வரலாற்றிலிருந்து அறிய முடிகிறது. கிழக்கிந்திய அரசாங்கத்தின் வளர்ச்சியை மட்டுப்படுத்தும் நோக்கில் அவர்களை மதராஸப்பட்டணத்திலிருந்து அகற்ற ஹைதர் அலி 1767-ம் ஆண்டும் 1769-ம் ஆண்டும் மிகப் பெரிய போர் தொடுத்துள்ளார். அந்தப் போர்கள் இன்றைக்கு ராயபுரம் என்று அழைக்கும் பகுதியில் நடந்துள்ளன.

1769-ல் நடந்த போரின்போது அப்பகுதியில் இருந்த குடிநீர்க் கிணறுகளில் விஷத்தைக் கலக்கும் ஹைதர் அலியின் முயற்சியை சில்வெஸ்டர் நிக்கோலஸ் எனும் படை வீரர் முறியடித்துள்ளார். நேர இருந்த பெரும் ஆபத்திலிருந்து ஆங்கிலேயர்களைக் காப்பாற்றிய அவருடைய துணிவைக் கௌரவிக்கும் விதமாக, அந்த நிகழ்வுக்கு மூன்று ஆண்டுகளுக்குப் பின்னால் நிர்மாணிக்கப்பட்ட ஏழு கிணறுகள் தண்ணீர் நிலையத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு அவர் குடும்பத்தினர் வசம் ஒப்படைக்கப்பட்டது.

சில்வெஸ்டர் நிக்கோலஸ் காலத்துக்குப் பின் அவருடைய மகன் ஜோஸப் நிக்கோலஸ் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்; அவருக்குப் பின் அவருடைய மகன் எட்மண்ட் அல்பன் நிக்கோலஸ் ஏற்றுக்கொண்டார். அவருடைய மறைவுக்குப் பிறகு அந்தப் பொறுப்பை அவருடைய சகோதரர் எவ்லின் ஏற்றுக்கொண்டார். அந்தக் கௌரவப் பொறுப்பு வகித்த எல்லா நிக்கோலஸ்களும் பதவியில் இருக்கும்போதே இறந்து போனதால், தலைமுறை தலைமுறையாகத் தன் குடும்பத்தின் வசம் இருந்த அந்தப் பணியை 1925-ம் ஆண்டு எவ்லின் நிக்கோலஸ் அரசாங்கத்திடம் ஒப்படைத்து முடித்துவைத்தார்.

அதன் வரலாற்றுச் சிறப்புக்குச் சான்றாக, அந்த ஏழு கிணறுகளில் ஒன்று மட்டும் இன்றும் தண்ணீரைக் கோட்டைக்கு அனுப்பித் தன்னை உயிர்ப்போடு வைத்துக்கொண்டுள்ளது. அன்று ஏழு கிணறுகள் தண்ணீர் நிலையம் இருந்த பகுதியில் இன்று பொதுப்பணித் துறையின் பணிமனையும் சேமிப்புக் கிடங்கும் உள்ளன. அதன் அருகில் இருக்கும் வீராசாமி தெருவில் ராமலிங்க அடிகளாரின் நினைவு இல்லம் உள்ளது. அதில் ராமலிங்க அடிகளார் தங்கி இருந்துள்ளார்.

இந்த ஏழு கிணறுகளைச் சுற்றியுள்ள, அடர்த்தியான வீடுகளால் நிறைந்திருக்கும் பல தெருக்களை உள்ளடக்கிய குடியிருப்புப் பகுதி இன்றும் ‘செவென் வெல்ஸ்’ என்ற பெயரில்தான் அழைக்கப்படுகிறது. ஆனால், அந்தப் பெயரின் காரணத்தை அறிந்தவர்களே இன்று இல்லை என்று சொல்லும்வண்ணம், அவர்கள்அரிதினும் அரிதாக உள்ளனர். அன்று சென்னையின் தாகத்தைத் தணித்த பகுதி, இன்று கேட்பாரற்று எந்தப் பராமரிப்புமின்றி புறக்கணிக்கப் பட்டுக் காலத்தின் கொடிய மறதிக்குச் சான்றாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x