Last Updated : 17 Mar, 2018 09:17 AM

 

Published : 17 Mar 2018 09:17 AM
Last Updated : 17 Mar 2018 09:17 AM

தெருவாசகம்: நரிமேட்டால் உருவான பிராட்வே

பி

ராட்வே என்றால் அகலப்பாதை என்று தமிழில் பொருள். ஆனால், இன்று அந்தச் சாலையில் அகலமும் இல்லை பாதையும் இல்லை. சாலையெங்கும் காளான்களைப்போன்று கடைகள் முளைத்து பாதையைக் குறுக்கி நிற்கின்றன. இது போதாதென்று சில வருடங்களாக மெட்ரோ ரயில் பணிகளும் பாதையை இன்னும் குறுக்கி நடப்பதே சிரமம் என்ற நிலையை ஏற்படுத்தி, நம்மை மூச்சுத் திணறவைக்கிறது.

ஆனால், இந்தச் சாலை அது உருவான காலகட்டத்தில் உண்மையிலேயே விஸ்தாரமான சாலையாகத்தான் இருந்துள்ளது. அது அன்று ஜார்ஜ் டவுனை முத்தையால்பேட்டை என்றும் பெத்துநாயக்கன்பேட்டை என்றும் இரண்டாகப் பிரித்து தெற்கிலிருந்து வடக்கு நோக்கி நீண்டு சென்றுள்ளது.

இந்தச் சாலை உருவாவதற்கு முன்பாக அந்தப் பகுதி ஒரு தேவையற்ற பள்ளமாக இருந்தது. இந்தப் பள்ளத்தின் பெரும்பகுதி ஸ்டீபன் பாபன் என்னும் ஆங்கிலேயருக்குச் சொந்தமாக இருந்துள்ளது. பிரிட்டிஷ் அரசின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஸ்டீபன் பின்னாளில் கல்கத்தாவின் அட்வகேட் ஜெனரல் ஆகவும் இருந்தார். 1878-ம் வருடம் சென்னையில் குடியேறினார். 1882-ம் வருடம் சென்னையில் நவீன காவல்படையை உருவாக்கியவர் என்ற பெருமையும் இவரையே சாரும்.

இன்று இந்தச் சாலையில் பொது மருத்துவமனையும் பார்க் டவுன் தபால் நிலையமும் இருக்கும் இடம் அன்று ஒரு மலையாக இருந்தது என்பதை நம்ப முடிகிறதா? ஆம் அன்று அந்தப் பகுதியில் ஒரு மலை இருந்தது. அந்த மலை அப்போது நரிமேடு என்று தமிழிலும் ஹாக்ஸ் ஹில்ஸ் என்று ஆங்கிலேயர்களாலும் அழைக்கப்பட்டது. உயரமான நரிமேடு மலைப் பகுதியால் ஜார்ஜ் கோட்டைக்கு ஆபத்து நேர வாய்ப்பிருப்பதாகக் கருதிய பிரிட்டிஷ் அரசு, அந்த நரிமேடு மலையை உடைத்துத் தரைமட்டமாக்க முடிவு செய்தது.

ஆனால், நமது ஸ்டீபனுக்கு வேறு திட்டம் இருந்தது. அதனால், அவர் அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தை நடத்தி, உடைக்கும் அந்த மலையைக்கொண்டு பள்ளத்தை நிரப்பும்படி செய்தார். மண்ணடி என அழைக்கப்படும் பகுதியிலும் ஸ்டீபனின் நிலத்திலிருந்த பள்ளத்தையும் மூட நரிமேடு மண் பயன்படுத்தப்பட்டது. இவ்வாறு, யாருக்கும் பயனற்ற எதற்கும் லாயக்கற்ற பள்ளத்தை, இன்றும் நமக்குப் பயன்படும் பிராட்வே ஆக மாற்றினார். அதை ஸ்டீபன் பாபனின் நினைவாக பாபன் பிராட்வே என்று அழைக்கலாமா என்றெல்லாம் பேசியிருக்கிறார்கள்.

இன்று மூக்குக் கண்ணாடிக் கடைகள் நிரம்பி வழியும் இந்த பிராட்வே, 1890-களில் இரண்டு புகழ்பெற்ற உணவகங்களைத் தன் அடையாளங்களாகக் கொண்டிருந்தது. முதலாவது அடையாளம் பி. வெங்கடாச்சலம் உணவகம். அதன் சுவை மிகுந்த உணவுகளும் காரத் துவையல்களும் இங்கிலாந்துவரை புகழ்பெற்று விளங்கியிருக்கிறது. மிளகு ரசத்தை மிளகு சூப்பாக்கிய பெருமை வெங்கடாச்சலத்தையே சாரும். இரண்டாவது அடையாளம் ஹாரிசன் உணவகம். ஹாரிசன் உணவகம் இன்றும் நுங்கம்பாக்கத்தில் நவீனமாக வளர்ந்துள்ளது.

இன்று நம் நாட்டின் குக்கிராமங்களில்கூடத் தனியார் மருத்துவமனைகள் நிறைந்துள்ளன. ஆனால், நம் மாநிலத்தின் முதல் தனியார் மருத்துவமனை இந்த பிராட்வேயில்தான் உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பலர் அறிந்திருக்க மாட்டார்கள். ஆம். 1900-ம் வருடம் டி.ஏ. சங்கர நாராயணன் என்ற புகழ்பெற்ற மருத்துவர் அங்கு அவரது மருத்துவமனையை நடத்தி வந்திருக்கிறார்.

popham ஸ்டீபன் பாபன் right

இன்று காலம் மாறிவிட்டது. அந்தச் சாலையின் பெயரும் மாறிவிட்டது. இன்று அந்தச் சாலை புகழ்பெற்ற சுதந்திரப் போராட்ட வீரர் டி. பிரகாசம் நினைவாக பிரகாசம் சாலை என்று அழைக்கப்படுகிறது.

ஆனாலும் சிலர் அதை இப்போதும் பிராட்வே என்று சொல்லும் போக்கும் உள்ளது. என்றாலும், இன்று எப்படி நமக்கு அந்தப் பள்ளமும் நரிமேடு என்ற மலையும் தெரியாமல் உள்ளதோ, அதே போன்று இன்னும் சில பத்தாண்டுகளில் பிராட்வே என்ற பெயரும் முற்றிலும் மறைந்து பிரகாசம் சாலை என்னும் பெயர் நிலைபெற்றுவிடக்கூடும்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x