Published : 07 Oct 2017 10:46 AM
Last Updated : 07 Oct 2017 10:46 AM

கட்டிடம் சொல்லும் கதைகள் 3: கைவிடப்பட்ட வரலாற்றுக் கிணறு

நம் நாட்டில் மிகவும் சிதிலமடைந்த பாரம்பரிய கட்டிடங்களின் எண்ணிக்கை 359. ‘இந்திய கலை மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துக்கான தேசிய அறக்கட்டளை’ (ஆங்கிலத்தில் ‘இண்டாக்’), ‘தி ஸ்டேட் ஆஃப் பில்ட் ஹெரிடேஜ் ஆஃப் இந்தியா’ எனும் தலைப்பில் தயாரித்துவரும் அறிக்கையில்தான் மேற்கண்ட எண்ணிக்கை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதில் ஒன்றுதான் பாத்ஷாபூர் பவோலி எனப்படும் படிக்கட்டு வடிவக் கிணறுகள். இது ஹரியாணா மாநிலத்தில் உள்ளது. மேற்சொன்ன 359 பாரம்பரியமிக்கக் கட்டிடங்களில் இந்தக் கிணறுகள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. ‘அப்படியென்றால், மீதிமிருக்கும் 358 கட்டிடங்கள் முக்கியமானவை இல்லையா, ஏன் இதற்கு மட்டும் தனிச் சிறப்பு?’ என்ற ஒரு கேள்வி எழலாம். காரணம், இதர கட்டிடங்களில் மனிதர்கள் வாழ்ந்தார்கள். இந்தக் கிணறுகளோ மனிதர்களை வாழவைத்தன!

தாகம் தீர்த்த வரலாறு

வறட்சி காலத்தில் மக்களின் தாகத்தைப் போக்குவதற்காக இந்தக் கிணறுகள் அன்றைய மன்னர்களால் உருவாக்கப்பட்டன. நீர் என்பது வேத காலத்திலிருந்து மிகவும் புனிதமான ஒரு பொருளாகக் கருதப்பட்டது. எனவே, அதை அடைவதற்குப் படிக்கட்டுகள் மூலமாகக் கீழிறங்கி வர வேண்டும், நீருக்குரிய மதிப்பை மக்கள் தர வேண்டும் என்பதற்காக, ஓரளவு ஆழமுள்ள கிணற்றை வெட்டி, அதைச் சுற்றிலும் படிக்கட்டுகளை அமைத்திருந்தார்கள். இப்படியான கட்டிட அமைப்பை சிந்து சமவெளி நாகரிகம், மொஹஞ்சதாரோ நாகரிகம் போன்றவற்றில் காணலாம்.

பூச்சு வேலை தோன்றுவதற்கு முன்பு, நிலத்தடி நீரை எடுப்பதற்காக, ஆதி மனிதர்கள் கண்டுபிடித்த ஒரு முறையாகவும் இந்தப் படிக்கட்டுக் கிணறுகள் கருதப்படுகின்றன. மன்னர் ஆட்சிக் காலத்தில் இப்படியான கிணறுகள் குடிநீருக்கென்று தனியாகவும், குளிப்பதற்கென்று தனியாகவும் அமைக்கப்பட்டிருந்தன. கோயில்கள், மசூதிகள் ஆகியவற்றுக்கு அருகில் இப்படியான கிணறுகள் இருந்தன.

குடிநீர், குளியல் ஆகியவற்றைத் தவிர்த்து, வெறுமனே நீரைச் சேமித்து வைப்பதற்காகவும் இத்தகைய கிணறுகள் கட்டப்பட்டிருந்தன. சில கிணறுகளின் மேலே யாத்ரீகர்கள், வழிப்போக்கர்கள், தேசாந்திரிகள் போன்றோர் தங்கிச் செல்வதற்காக அறைகளும் கட்டப்பட்டிருந்தன.

பாத்ஷாபூர் கிணறு அமைப்பு

நீரைச் சேமித்துவைக்கும் கிணறு, கிணற்றை அடைவதற்கான படிகள், படிகளில் விசாலமான அறைகள் என மூன்று முக்கிய அம்சங்களைக் கொண்டு இந்தக் கிணறுகள் கட்டப்பட்டிருந்தன.

05jkr_badshapur boli3right

சுமார் 50 அடி ஆழத்தைக் கொண்டிருந்த இப்படியான படிக்கட்டுக் கிணறுகள் வட்டம், செவ்வகம், எண் கோணம் போன்ற பல்வேறு வடிவங்களில் கட்டப்பட்டிருந்தன. பெரும்பாலான இந்திய கட்டிடப் பாணிகளில் மனித உடலை நிகராக வைத்துக் கட்டிடங்கள் தலைப் பகுதி, இடைப் பகுதி, கீழ்ப் பகுதி என்ற ஒரு ஒழுங்கில் கட்டப்பட்டிருக்கின்றன.

குறிப்பாக, பாத்ஷாபூர் கிணறு பல வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்தது. சுமார் 112 ஆண்டுகளுக்கு முன்பு முகலாய மன்னர்களால் இந்தக் கிணறு கட்டப்பட்டிருக்கிறது. முகலாய கட்டிடப் பாணியுடன், ஆங்கிலேய கட்டிடப் பாணியும் இதில் ஆங்காங்கே தெரியும். ‘ஜெனானா’ எனும் பெண்களுக்கான அந்தப்புரப் பகுதியும், ‘மர்தானா’ எனும் ஆண்களுக்கான பகுதியும் கொண்டதாக இந்தக் கிணறு உள்ளது. இது பெருமளவு செங்கற்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது.

இப்படியான பெருமைகளைக் கொண்ட இது, இன்று பராமரிப்பு இல்லாமல் குப்பைக் கிடங்காக மாறிவருகிறது. அதிசயம் என்னவென்றால், இந்தக் கிணற்றை முறையாகப் பராமரித்துவந்தால், முற்காலத்தைப் போலவே இப்போதும் இதில் நீரைச் சேமித்துவைக்க முடியும், அதைப் பயன்படுத்தவும் முடியும் என்பதுதான்!

இந்தக் கிணற்றைப் போன்று டெல்லி உள்ளிட்ட இதர வட மாநிலப் பகுதிகளிலும் நிறைய கிணறுகள் உள்ளன. அவற்றின் நிலையும் கிட்டத்தட்ட இதேதான். எனினும், டெல்லியில் உள்ள கிணறுகள் ஓரளவு சீரான முறையில் பராமரிக்கப்பட்டுவருகின்றன. ஆனால், அந்த மரியாதை, பாத்ஷாபூர் போன்ற குக்கிராமக் கிணறுகளுக்குக் கிடைப்பதில்லை என்பதுதான் வேதனை. ஹரியாணா போன்ற மாநிலங்களில் உள்ள கிணறுகளையும் மத்திய, மாநில அரசுகள் பராமரித்தால் அங்கும் நிறைய சுற்றுலாப் பயணிகள் வரக்கூடும். கிணற்றுடன் உள்ள தொடர்பை இன்றைய தலைமுறைக்கு நாம் புரியவைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. காரணம் அப்போதுதான், நீர்வளமும் காப்பாற்றப்படும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x