Published : 22 Oct 2016 11:42 AM
Last Updated : 22 Oct 2016 11:42 AM

வீட்டை அழகாக்கும் கண்ணாடிகள்

வீடு என்பது அழகும் வசதியும் நிறைந்ததாக இருக்க வேண்டும். இன்றைய நாகரிக வீட்டை அழகாக, பயன்பாடு மிக்கதாக மாற்றக் கடல் போல் வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. இவற்றில் சரியான பொருட்களைத் தேர்வு செய்வது முக்கியம். அப்படியான பொருள்களில் முக்கியமானது கண்ணாடி.

கண்ணாடி ஒன்றும் புதுமையான பொருள் அல்ல. அதை ஏற்கனவே பல இடங்களில் பயன்படுத்தி வருகிறோம். என்றாலும் முழுக்க முழுக்கக் கண்ணாடியால் கட்டிடங்களை அமைப்பது இன்றைய புதுப்பாணி. அலுவலங்கள், வணிக வளாகங்கள், மருத்துவமனைகள் என்று அனைத்துமே கண்ணாடியால் வடிவமைக்கப்படுகின்றன. அழகிய தோற்றம் மற்றும் பராமரிக்க எளிதாய் இருப்பதால் பெரிதும் வரவேற்கப்படுகிறது. மேலும் கண்ணாடியின் சிறப்பு என்னவென்றால், அது எந்தப் பொருளோடும் தன்னை இணைத்துக் கொள்ளும். உதாரணமாக மரம், அலுமினியம், இரும்பு போன்ற உலோகங்கள், தோல் மற்றும் பிற துணி வகைகள் என்று எதனுடன் இணைந்தாலும் அழகிய தோற்றத்தைத் தரும்.

கண்ணாடி பல வகைப்படும் என்றாலும் கட்டிட வடிவமைப்புக்கு என்று சில வகைகளை மட்டுமே பயன்படுத்துகின்றனர். அவை ஒளிபுகா கண்ணாடி, உறுதியாக்கப்பட்ட கண்ணாடி, தகடாக்கப்பட்ட கண்ணாடி, வளைவுக் கண்ணாடி என்பன. அதிக சூட்டுக்குப் பின் உடனடியாகக் குளிவிக்கப்படுவதால் கண்ணாடி உறுதியாக்கப்படுகிறது. நீண்ட நாள் உழைக்க வைக்கிறது. தெறித்துச் சிதறும் அபாயம் இல்லாமல் பாதுகாப்பானதகிறது.

வீடுகளுக்கு ஒரு நாகரிகத் தோற்றத்தைத் தருவதில் கண்ணாடி பால்கனி முக்கியப் பங்கு வகிக்கிறது. கண்ணாடி ஒளியை நன்றாகப் பிரதிபலிப்பதால் வீட்டினுள் நல்ல வெளிச்சம் கிடைக்கிறது. ஒய்யாரமான, ஒரு சொகுசான தோற்றத்தைத் தருவதுடன் அனைவரும் பார்த்து வியக்கும் வண்ணம் அமைகிறது. அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வெளியுலகைத் தரிசிக்கும் ஒரே வழி பால்கனிதான். அதைக் கண்ணாடியில் அமைத்தால் எத்துணை அழகாயிருக்கும். வெளியிலிருந்து பார்ப்பதற்கு மட்டுமல்லாது வீட்டின் உள்ளிருந்தும் பார்ப்பதற்கும் அழகாகத் திகழ்கிறது. கண்ணாடி என்பதால் அதன் பாதுகாப்புத்தன்மை பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. அதிக எடையைத் தாங்கும் வண்ணமும் எவ்வித சீதோஷ்ணத்தையும் ஏற்றுக்கொள்ளும் வகையிலும் உருவாக்கப்படுகிறது.

மாடிப்படிகள் என்பது இரு தளங்களை இணைக்கிற ஒரு இணைப்பாக மட்டும் திகழாமல் வடிவமைப்புக் கலையின் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. மாடிப்படிகள் வீட்டின் சொந்தக்காரரின் ரசனை மற்றும் ஆடம்பரத்தைப் பறைசாற்றுவதாக அமைகிறது. கண்ணாடியிலான மாடிப்படிகள் என்பது ஆடம்பரமான கட்டிடக்கலை சார்ந்த விஷயம் என்று பலர் நினைக்கலாம். ஆனால் இன்றைய நாகரிக நுகர்வோர் உலகில் அது பட்ஜெட்டுக்குள் சாத்தியமே. கண்ணாடி என்றவுடன் அதன் பாதுகாப்புத்தன்மை பெரிதும் விவாதிக்கப்படுகிறது.

ஆனால் கண்ணாடிகள் மிகவும் பாதுகாப்பானவை. ஏனெனில் அவை ரசயான முறைகளில் பதனிடப்பட்டு, உறுதிப்படுத்தப்பட்டு மென்தகடுகளாக்கப்பட்டுள்ளன. படிகள் மட்டுமல்லாது அதன் அருகே அமைக்கப்படும் கைப்பிடித் தடுப்பான்களும் கண்ணாடியிலேயே, அமைக்கப்படுகின்றன. கண்ணாடி மாடிப்படிகள் அமைக்கப்படும்போது வடிவமைப்பாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்: கண்ணாடியின் அளவு மற்றும் தடிமன், தோற்றம், சிராய்ப்பு ஏற்படுத்தாத கூர் பகுதிகள் அற்ற முனைப் பகுதிகள், வளைவுகள், வழுக்குத்தன்மையைக் குறைக்கும் முறைகள். கண்ணாடியும் ஒளியும் எவ்வாறு இணைந்து விளங்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

படிக்கட்டுகளைக் கண்ணாடியில் அமைத்துவிட்டுப் பின் முறையாக விளக்குகள் அமைக்காவிடில் அதன் அழகு கெட்டுவிடும். அலுவலகங்களில் கண்ணாடியினால் கதவுகளும், பிரிவினைக் கதவுகளும் அமைக்கப்படுகின்றன. பல இடங்களில் தானியங்கிக் கதவுகளும் அமைக்கப்படுகின்றன. கதவுகளுக்கான கைப்பிடிகளும் ஆணிகளும் கீல்களும் பிரத்யேகமாகக் கடைகளில் கிடைக்கின்றன. விற்பனை அங்காடிகளில் கண்ணாடி அலமாரித் தட்டுகள் அமைக்கப்படுகின்றன. இவை தவிர ஷவர் உறை கண்ணாடியில் அமைக்கப்படுகின்றன. குளியலறையில் காய்ந்த மற்றும் ஈரப்பகுதிகளைப் பிரிப்பதற்கும் இவை பயன்படுகின்றன.

வெளிப்புறத் தோற்றத்தை மேம்படுத்தவும் கண்ணாடி பயன்படுகிறது. கட்டிடக்கலை வல்லுநர்களுக்கு இது போன்ற கடினமாக்கப்பட்ட கண்ணாடி கொண்டு வடிவமைப்பது பெரும் வரப் பிரசாதமாகும். தற்போது இது போன்ற கடினமாக்கப்பட்ட கண்ணாடி பழுப்பு, பச்சை, சாம்பல் ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது. உட்புறங்களில் அமைக்கப்பட்டால் 20 முதல் 30 வருடங்கள் வரை நீடித்து உழைக்கும். வெளிப்புறங்களில் எனில் 10 முதல் 15 வருடங்கள் வரை உழைக்கும்.

கண்ணாடி, அது உருவாக்கப்பட்ட கி.மு 500 முதல், மனிதர்களால் பெரிதும் விரும்பப்படும் பொருளாகத் திகழ்கிறது. கட்டிடக்கலையில் எளிமையாகத் தன்னுடைய பயணத்தைத் தொடங்கிய அது இன்று அலங்காரமாகப் பல நவநாகரிகக் கட்டிடங்களில் ராஜாங்கம் நடத்துகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x