Published : 07 Nov 2015 12:19 PM
Last Updated : 07 Nov 2015 12:19 PM

வீட்டுப் பராமரிப்பு: சில குறிப்புகள்

உண்ணவும், உறங்கவும், கதை பேசுவும் மட்டுமா வீடு? அன்னையின் அணைப்பின் கதகதப்பைத் தர வல்லதல்லவா வீடு? வெயில், மழை, பனி, குளிர் என அனைத்திலிருந்தும் நம்மைக் காப்பது வீடு. நம் துக்கம், சந்தோஷம், கோபம், விருப்பு, வெறுப்பு என அனைத்து உணர்ச்சிகளையும் மவுனமாய் உள்வாங்கிக்கொள்ளும் உயிரற்ற, ஆனால் உயிருக்குயிரான இடம் வீடு.

ஆனால் அதைப் பராமரிப்பதில் நம் காட்டும் அக்கறையைப் பற்றிச் சொல்ல வாரத்தைகள் இல்லை. பல லட்சம் செலவு செய்து வீட்டைக் கட்டி வந்தவுடன் முடிந்துவிடுவதில்லை நம் பணி. அதனை அழகுபடுத்துவதிலும் பராமரிப்பதிலும்தான் உண்மையான திறமை உள்ளது. அது ஒன்றும் கம்ப சூத்திரம் அல்ல. மிக எளிய வழிமுறைகளைப் பின்பற்றினால் நம்முடைய வீட்டை அனைவரும் ரசித்துப் பாராட்டும் வண்ணம் அமைக்கலாம்.

வீடு பொலிவுடன் திகழ அலங்காரமான, படோபமான பொருட்கள் தேவை என்றில்லை. எளிமைதான் என்றுமே அழகு. வீடெங்கும் நிறைந்திருக்கும் தேவையற்ற பொருட்களை நீக்கினாலேயே வீடு அழகு பெற்றுவிடும். வீடு சிறியதாக இருக்கிறது, ஆனால் பொருட்கள் எக்கச்சக்கமாக இருக்கின்றன, எதை எங்கே வைப்பது என்றே தெரியவில்லை என்று புலம்புபவர்களுக்கு ஒரு வார்த்தை.

பழையன கழிந்த பிறகு மட்டுமே புதியன புக வேண்டும். தேவைக்கு அதிகமான பொருட்களைச் சேர்க்காதீர்கள். என்றாவது ஒரு நாள் தேவைப்படும் என்று பொருட்களைச் சேகரிக்காதீர்கள். ஒரு பொருளை ஒரு மாதத்துக்கு ஒரு முறையேனும் நாம் உபயோகிக்கவில்லையெனின் அதன் பயன்பாடு நமக்குத் தேவையில்லை என்றே அர்த்தம். அதைத் தூர வீசிவிடலாம். மனமில்லை எனின் அட்டைப்பெட்டியில் போட்டு லாஃப்ட் என்னும் பரணில் வைத்துவிட்டு தேவையான நேரத்தில் எடுத்துக் கொள்ளலாம்.

வீட்டின் ஒவ்வொரு பகுதியும் முக்கியமானதே. சிலர் விருந்தாளிகள் வரலாம் என்று வரவேற்பறையை மட்டும் சுத்தமாக வைத்துக்கொண்டு பிற அறைகளைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவர். இது தவறு. சமையலறை, படுக்கையறை, குளியலறை என்று வீடு முழுக்கவுமே கண்ணும் கருத்துமாகப் பராமரிக்க வேண்டியது அவசியம். கூடுதலாகச் சில நிமிடங்கள் வீட்டைப் பேணுவதில் செலவழித்தால் இது சாத்தியமே.

வீட்டின் தரையைத் தினமும் சுத்தம் செய்வது போலவே சமையல் மேடையையும், சிங்க்-ஐயும் தினமும் சுத்தம் செய்ய வேண்டும். குளியலறையைத் தினமும் கழுவி நீரில்லாமல் துடைத்துவிட்டால் அவை நீண்ட நாட்கள் பொலிவுற விளங்கும். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை ஃபிரிட்ஜில் உள்ள காய், பழவகைகளைக் கை பார்க்க வேண்டும். மீந்த குழம்பு வகைகளைத் தூர வீச வேண்டும். வாரம் ஒரு முறை மைக்ரோவேவ் மற்றும் ஃபிரிட்ஜை சுத்தமாகத் துடைக்க வேண்டும்.

மாதமொரு முறை அனைத்து கப்போர்ட்களையும் ஒதுக்கி பேப்பர் மாற்ற வேண்டும். சமையலறைப் பொருட்களைச் சரி பார்த்து வெயிலில் காய வைக்க வேண்டியவற்றை வெயிலில் காய வைத்து எடுத்து வைக்க வேண்டும். மின் சாதனங்களை உபயோகப்படுத்தவில்லை என்றாலும் அடிக்கடித் துடைத்து சரிபார்த்து உள்ளே வைக்க வேண்டும். அழையா விருந்தாளிகளாய் வரும் தூசியும், பூச்சிகளும், தம்முடன் அழைத்து வருவது நோய் நொடிகளைத்தான் என்பதை உணர்ந்து சுத்தத்தைப் பேண வேண்டும்.

விருந்தினர் வரும் வீடு அழகாய்த் திகழ வேண்டும் என்பது அனைவரின் அவாவும்கூட. அந்நேரம் அனைத்தையும் ஒதுக்கி அடுக்கி வைக்காமல் எப்போதுமே அதுபோல் வைத்திருப்பதுதான் சாமர்த்தியம். எந்தப் பொருளையையுமே எடுத்த இடத்திலேயே திருப்பி வைத்தாலே பாதி வேலை முடிந்துவிடும். எந்தப் பொருளையும் தேடாமல் எடுத்துக் கொடுக்கும் வகையில் நம் வீட்டில் பொருட்கள் இருக்க வேண்டும். வீட்டில் உள்ள அனைவரும் இணைந்து முயன்றால் மட்டுமே வீட்டை அழகாகப் பராமரிக்க முடியும். வீட்டைக் கலைநயத்துடன் கட்டமைத்து, உள் அலங்காரம் செய்திருந்தாலும் அதைப் பராமரிப்பதைப் பொறுத்தே வீட்டின் அழகு வெளிப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x