Last Updated : 24 Sep, 2016 12:32 PM

 

Published : 24 Sep 2016 12:32 PM
Last Updated : 24 Sep 2016 12:32 PM

வீட்டுக்குத் தனிக் கலை வேண்டாமா?

வீட்டுக்கு என்று தனியாக ஓர் ஆளுமைத் தோற்றத்தை உருவாக்க வேண்டும் என்பதில் இன்று பலரும் ஆர்வம் காட்டத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த ஆர்வத்தைச் செயல்படுத்த நினைப்பவர்கள் வீட்டின் அறைக்கலன்களையும் அலங்காரப் பொருட்களையும் தனித்துவத்துடன் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த இரண்டு அம்சங்களையும் வைத்து வீட்டுக்கான தனிக் கலையை நீங்களே வடிவமைக்க முடியும்.

பழமையின் அழகு

உங்களுடைய வீட்டை ரசனைக்குப் பொருந்தும்படி பாரம்பரியமான பொருட்களை வைத்து அலங்காரம் செய்தால் அது ஒருவிதமான ஆளுமையான தோற்றத்தை வீட்டுக்குக் கொடுக்கும். ஒரு பாரம்பரியமான வடிவமைப்பைக் கொண்ட சுவர்க்கடிகாரத்தை வீட்டின் வரவேற்பறையில் மாட்டிவைக்கலாம். ஒருவேளை, உங்களுடைய வீட்டின் முந்தைய தலைமுறை பயன்படுத்திய கடிகாரம் இருந்தால் அதைச் சரிசெய்து மீண்டும் பயன்படுத்தலாம். இது வீட்டுக்கு ஒரு வரலாற்றுத் தோற்றம் இருப்பதைப் போன்ற உணர்வைக் கொடுக்கும்.

ஓவியங்கள்

வீட்டின் வரவேற்பறையும், படுக்கையறையும் ஓவியங்கள் மாட்டிவைப்பதற்கான சிறந்த தேர்வாக இருக்கும். இந்த இரண்டு அறைகளிலும் உங்களுக்குப் பிடித்த மாதிரியான ஓவியங்களை மாட்டிவைக்கலாம். இயற்கையைப் பறைசாற்றும் மலர்கள், மரங்கள், மலைகள் போன்ற ஓவியக் காட்சிகள் இந்த இரண்டு அறைகளுக்கும் ஏற்றதாக இருக்கும்.

சிற்றுருவச் சிலைகள்

அலங்கரிப்பதற்குச் சிற்றுருவ சிலைகளைப் பயன்படுத்துவது வீட்டுக்குக் கம்பீரமான தோற்றத்தைக் கொடுக்கும். கம்பீரமான தோற்றத்தை விரும்புபவர்கள் வீட்டில் சிற்றுருவச் சிலைகளைப் பயன்படுத்தலாம். குதிரை, யானை, பறவைகள் போன்றவற்றின் சிற்றுருவச் சிலைகளை வைத்து வீட்டை அலங்கரிக்கலாம். வரவேற்பறை மேசைகள், பால்கனி, தோட்டம் போன்ற இடங்களில் இவற்றை வைக்கலாம். இந்தச் சிலைகள் வீட்டின் ஆளுமையைக் கம்பீரமானதாகக் காட்டும்.

தோட்டம் வேண்டும்

தோட்டம் வைப்பதற்கு என்று தனியாக இடமில்லையென்றாலும் வீட்டின் உள்ளே வெளிச்சமும் காற்றும் இருக்கும் இடத்தில் ஒரு சின்ன உட்புறத் தோட்டத்தை உருவாக்கலாம். வீட்டில் இருக்கும் பொருட்களை மறுசுழற்சி செய்துதான் இந்தத் தோட்டத்தை உருவாக்க முடியும். உதாரணமாக, உங்கள் வீட்டில் பயன்படுத்தப்படாத சைக்கிள் இருந்தால் அதைச் செடிகளை வைப்பதற்குப் பயன்படுத்திக்கொள்ளலாம். இப்போது இந்த மாதிரியான உட்புறத் தோட்ட அலங்காரம் நகர்ப்புறங்களில் பிரபலமாக இருக்கிறது.

பெட்டிகளும் கண்ணாடிகளும்

வீட்டின் பழைய மரப்பெட்டிகளும் கண்ணாடிகளும் இருந்தால் அவற்றுக்குப் புதிய வடிவம் கொடுத்துப் பயன்படுத்தலாம். இதுவும் வீட்டுக்கு ஆளுமையான தோற்றத்தைக் கொடுக்கும் வழிகளில் ஒன்று. பெட்டியை வரவேற்பறையிலும் கண்ணாடியைப் படுக்கையறையிலும் வைக்கலாம். இந்த இரண்டு பொருட்களையும் மற்ற பொருட்களோடு சேர்த்துவைக்காமல் அறையில் தனித்துத் தெரியும்படி வைக்கலாம்.

சுவர்களும் மேசைகளும்

நேர்த்தியும் பாரம்பரியமும் நிறைந்த ‘வால் ஹேங்கிங்ஸை’(Wall hangings) சுவரை அலங்கரிக்கப் பயன்படுத்தலாம். இவை வீட்டுக்குப் பழமை கலந்த வசீகரத் தோற்றத்தைக் கொடுக்கும். மேசைகளில் ‘ஹவர் கிளாஸ்’ போன்ற உங்களுக்கு ரசனைக்குப் பொருந்தும்படியான பொருட்களை வைத்து அலங்கரிக்கலாம்.

இப்படி உங்களுடைய ஆளுமையைப் பறைசாற்றும் பொருட்களை வைத்தே வீட்டுக்கு ஆளுமையான தோற்றத்தைக் கொடுக்க முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x