Published : 14 Nov 2015 11:48 AM
Last Updated : 14 Nov 2015 11:48 AM

மறுசுழற்சி வீடுகள்: இது கூடல்ல... என் கனவு வீடு!

இருபத்தாறு வயதே நிரம்பிய முகமது அஸ் ரி அப்துல் ரஹிம் தனது புத்திசாலித்தனமான முடிவுக்காகச் செய்திகளில் இடம் பிடித்திருக்கிறார். மலேசியா நாட்டின் க்வால லங்காட்டின் மாவட்டத்தில் வசிக்கும் இவர் ஒரு சிஸ்டம் டெவலப்பர். மென்பொருள் துறையில் வேலைசெய்தாலும் இவரது மாத வருமானம் 3,500 மலேசிய ரிங்கிட்கள்தான். இன்னும் திருமணம் செய்துகொள்ளாத இந்த பேச்சிலருக்கு எல்லோரையும் போல சொந்த வீட்டுக் கனவு இருக்காதா என்ன?

தனது மாத ஊதியம்போல் எத்தனை மடங்கு வீட்டுக் கடன் கிடைக்கும் என வங்கியின் படியேறி விசாரித்தபோது அவருக்கு அதிர்ச்சி. பதினைந்து லட்சம் மலேசிய ரிங்கிட்களை வீட்டுக் கடனாகப் பெற்றுக்கொள்ளலாம். ஆனால் அதை 30 ஆண்டுகள் திருப்பிச் செலுத்தவேண்டும்; முதல் 7 ஆண்டுகள் வட்டியை மட்டுமே செலுத்த முடியும் என்று தெரிந்துகொண்டதும் தெறித்து ஓடிவந்திருக்கிறார்.

“அத்தனை நீண்டகால வீட்டுக் கடனுக்காக என் வாழ்க்கையையே அடமானம் வைக்க வேண்டியிருக்கும் என்ற ஞானத்தைப் பெற்றுக் கொண்டேன். என்றாலும் என் மாதச் சம்பளத்தில் பாதியை நான் தங்கி வந்த அறைக்கான வாடகையாகக் கொடுத்துவந்தது இனியும் தொடரக் கூடாது என்று முடிவு செய்தேன். அப்போதுதான் பயன்படுத்தப்பட்ட ஷிப்பிங் கண்டெய்னர்களை மறுசுழற்சி முறையில் பட்ஜெட் வீடுகளாக மாற்ற முடியும்; அதன்மூலம் சுற்றுச்சூழலுக்கும் நம்மால் நன்மை செய்ய முடியும் என்பதை இணையம் வழியே படித்தேன். அந்த கனமே என் கனவு வீட்டுக்கான ஐடியா பிறந்துவிட்டது” என துள்ளலாக பேட்டியளித்திருக்கிறார்.

அஸ் ரி செய்தது இவ்வளவுதான். ஐந்தே ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தும் வண்ணம் 75 ஆயிரம் மலேசிய ரிங்கிட்டுகளை தனிநபர்க் கடனாகப் வாங்கியவர் அதைக் கொண்டு தான் பணியாற்றும் நிறுவனத்திலிருந்து 24 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கம்போங் என்ற இடத்தில் 2, 400 சதுர அடி விவசாய நிலத்தை வாங்கியிருக்கிறார். தனது நிலத்தை சீர்திருத்திய கையோடு பழைய ஷிப்பிங் கண்டெய்னர்கள் விற்கும் கடைக்குச் சென்று 20 அடி நீளம் கொண்ட இரண்டு கண்டெய்னர்களை வாங்கிவந்து தனது வீட்டை உருவாக்கிவிட்டார் அஸ்ரி.

இவரது கண்டெய்னர் வீட்டில் ஒரு சமையலறை, கழிவறை, சொகுசான படுக்கையறை உண்டு. கண்டெய்னரின் மேல்பகுதியில் பிளாஸ்டிக் ஷீட்டுகளைக் கொண்டு ஒரு படிப்பறையும் உருவாக்கிவிட்டார்.

அஸ்ரி இத்துடன் நின்றுவிடவில்லை. தனது நிலத்தைச் சிறிய இயற்கை விவசாயப் பண்ணையாகவும் மாற்றிவிட்டார். தன் சமையலுக்குத் தேவையான காய்கறிகளை இங்கேயே விளைவித்துக்கொள்ளும் அஸ் ரி, கூடுதல் வருமானம் ஈட்ட ஸ்டீயா செடிகளை இங்கே பயிரிட்டு விற்பனை செய்கிறார். அஸ் ரியின் வீட்டுக்கு வரும் அவரது நண்பர்களை வரவேற்கிறது ‘இது கூடல்ல.. என கனவு’ என்ற நல்வரவுப் பலகை.

அஸ் ரி மட்டுமல்ல, ஷிப் கண்டெய்னர்களை மறுசுழற்சி முறையில் பயன்படுத்தி அகதிகளுக்கு வீடு அமைத்துத் தரும் முறை உலகின் பல நாடுகளில் பரவிவருகிறது. அகதிகளுக்கு என்றில்லாமல் கண்டெய்னர்களைப் பயன்படுத்தி அலுவலகம், பள்ளிக்கூடம் கூட்டுக் குடியிருப்பு போன்றவற்றை அமைத்துப் பயன்படுத்தும் முயற்சி ஐரோப்பாவின் பலநாடுகளில் சுற்றுச்சுழல் ஆர்வலர்களிடையே வேகமாகப் பரவிவருகிறது. ஐக்கிய அரபு நாடுகளில் தொழிலாளர்களுக்கான விடுதிகள், தற்காலிக அலுவலங்கள் கண்டெய்னர்கள் கொண்டு அமைக்கப்பட்டுவருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x