Published : 13 Feb 2016 11:12 AM
Last Updated : 13 Feb 2016 11:12 AM

மரபு இல்லங்கள்: வீரர்களின் வீடு

இந்தியாவின் பாரம்பரிய வீடுகளில் பிரசித்திபெற்றது பந்த் சமூகத்தினரின் குத்தூ வீடுகள். பந்த் சமூகத்தினரின் தாய்மொழி துளு. இம்மொழியில் பந்த் என்றால் வீரன் என்று பொருள். இதிலிருந்து பந்த் சமூகம் சத்திரிய குலமாக இருந்திருக்கிறது எனத் தெரிந்துகொள்ளலாம். இவர்கள் கர்நாடக மாநிலத்தின் தென் கனரா மாவட்டத்தில் அதிகமான அளவில் வாழ்கிறார்கள். இந்தப் பகுதி முற்காலத்தில் துளு நாடு என அழைக்கப்பட்டது.

துளு நாட்டு அரசவம்சம் கி.மு. 3-ம் நூற்றாண்டில் இருந்து கி.பி.4-ம் நூற்றாண்டு வரை ஆட்சிப் பொறுப்பில் இருந்ததாக வரலாற்று ஆதாரங்கள் கூறுகின்றன. அரசர்கள் கோசர்கள் என அழைக்கப்பட்டனர். துளு நாடு இன்றைய கேரளத்தின் சில பகுதிகளையும் உள்ளடக்கிய பகுதியாக இருந்திருக்கிறது. துளு நாடு குறித்த தகவல்கள் பழந்தமிழ் இலக்கியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அகப்பாடலிலும் சிலப்பதிகாரத்திலும் இவர்களைப் பற்றிய தகவல்கள் உள்ளன.

கூட்டுக் குடும்ப வீடுகள்

பந்த் சமூகத்தினர் சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தனர். உலகமயமாக்கலுக்குப் பிறகு நகரங்களை நோக்கி புதிய தலைமுறை புலம் பெயர்ந்ததால் இந்தக் கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறை இப்போது அழிந்துவருகிறது. இவர்களது பாரம்பரிய வீடுகள் கூட்டுக் குடும்ப அங்கத்தினர் எல்லோருக்குமான இல்லமாக இருந்திருக்கிறது. பொதுவாக இவர்கள் பிற்காலத்தில் நிலக்கிழார்களாக இருந்ததால் இவர்களது வீடுகள் வயல் வெளிகளுக்கு நடுவில், தென்னை மரங்களுக்கு நடுவில் கட்டப்பட்டுள்ளது.

அரசன் வசிக்கும் வீடு, ‘அரச மனே’ என அழைக்கப்படுகிறது. மக்கள் வசிக்கும் வீடுகள் ‘குத்தூ மனே’ என அழைக்கப்படுகிறது. இந்த குத்தூ வீடுகள் வாஸ்து ஷில்ப முறைப்படி கட்டப்பட்டுள்ளன. வீட்டின் முன் பகுதியை நிலப் பகுதி ‘பகிமர் கந்தே’ என அழைக்கப்படுகிறது. இந்தப் பகுதியில் அவர்களில் முக்கியமான சடங்குகள் மேற்கொள்ளப்படும். வீட்டின் முன் வாசல் ‘துடமே’ என அழைக்கப்படுகிறது.

இது மூங்கில் கம்புகளால் உருவாக்கப்பட்டுள்ளது. வீட்டின் முன் பகுதியில் உள்ள திறந்த வெளி வரந்தா ‘ஜால்’ என அழைக்கப்படுகிறது. இந்தப் பகுதியில் கோடைக்காலத்தில் வெயிலைத் தடுக்கும் படியாகத் தென்னை ஓலையால் தடுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. வீட்டின் நுழைவுப் பகுதி, ‘முகசாலே’ என அழைக்கிறார்கள். ‘ஹெப்பகிலு’ என அழைக்கப்படும் கதவு, தேக்கு மரம் அல்லது கருங்காலி மரப் பலகை கொண்டு செய்யப்பட்டிருக்கும். நுட்பமான வேலைப்பாடுகள் அந்தக் கதவுகளில் செதுக்கப்பட்டிருக்கும்.

தரவாட்டு வீடும் குத்தூ வீடும்

முன்வாசலைத் தாண்டி உள்ளே நுழையும் பகுதி ‘அங்கலா’. இந்தப் பகுதியைத் தாண்டியதும் எதிர்ப்படுவது ‘சாவடி’. இந்த அறையில் கம்பீரமான மர இருக்கை ஒன்று இருக்கும். இதுதான் அந்த வீட்டின் மூத்த மனுஷி அமரும் ‘நியாயபீட’ என்னும் இருக்கை. எனக் கேரளத்தின் நாயர் சமூகம்போல் பந்த் சமூகமும் தாய் வழிச் சமூகம்தான். அதனால் இங்கு பெண்ணுக்குத்தான் குடும்ப காரியங்களில் முடிவெடுக்கும் அதிகாரம். அதுபோல பந்த் வீட்டுக் கட்டிட அமைப்பும் நாயர் தரவாட்டு வீடுகளை ஒத்ததாக உள்ளன.

ஆனால் கேரள வீடுகள் உயரம் குறைந்ததாக இருக்கும். இந்த குத்தூ வீடுகள் உயரமான கூரைகளைக் கொண்டவை. சாவடி அறை மரத் தூண்களால் உருவாக்கப்பட்டிருக்கும். அதன் மேற்பகுதியில் மரத்தால் வேலைப்பாடுகள் செதுக்கப்பட்டிருக்கும். இதில் இந்து புராணக் கதைகள், பறவைகள், விலங்குகள், துளு நாட்டுச் சிறப்புகள் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டிருக்கும் சாவடிக்கு அடுத்துள்ள பகுதி ‘நடுமனே’. இது பெண்கள் மட்டும் புழங்கும் பகுதி. இந்த அறையின் கதவுகள் பலா மரத்தால் செய்யப்பட்டவை. இந்த அறைக்குள்தான் நகைகள் வைப்பதற்கான அலமாரி இருக்கும். இதற்கு அடுத்தபடியாக ‘பண்டசால’ அறை உள்ளது.

சாவடி அறையின் மூலையிலிருந்து மேல்மாடிக்குச் செல்ல படிக்கட்டுகள் உள்ளன. மாடியில் பல படுக்கையறைகள் உள்ளன. தென் மேற்கு முலையில் வீட்டின் மூத்த மனுஷிக்கான பெரிய படுக்கையறை இருக்கும். பிறகு சாப்பாட்டு மேஜையுடன் கூடிய சமையலறை உள்ளது. இது அல்லாது ‘சுதகதகோனே’ என்னும் ஓர் அறை வீட்டுக்கு வெளியே இடைவெளி விட்டு உருவாக்கப்பட்டிருக்கும். மாதவிடாய் காலத்தில் பெண்கள் தங்குவதற்கான அறை இது. குளியலறை வீட்டின் பின் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும்.

வீட்டின் நடுப்பகுதி மேற் கூரையில்லாமல் திறந்த வெளியாக இயற்கை வெளிச்சத்தையும் காற்றையும் பயன்படுத்தும் வகையில் உள்ளது. இந்தப் பகுதியில் துளசிச் செடி வளர்க்கும் வழக்கம் உள்ளது. மழை நீர் சேமிப்பதற்கான பாத்திரங்கள் இந்தப் பகுதியில் வைக்கப்பட்டிருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x