Published : 06 Aug 2016 12:40 PM
Last Updated : 06 Aug 2016 12:40 PM

புதுப் புதுப் புத்தக அலமாரிகள்

புத்தகங்கள் நற்பண்புகள் தந்து நம்மைப் பேணக்கூடிய வழிகாட்டி எனச் சொல்லலாம். அப்படிப்பட்ட புத்தகங்களை நாமும் சரியாகப் பேண வேண்டும் அல்லவா? அதற்காகத்தான் புத்தக அலமாரிகள். இந்தப் புத்தக அலமாரிகளில் பல வகைகள் உள்ளன. மரபான அலமாரிகள் இல்லாமல் புதிய வடிவங்களிலும் இப்போது அலமாரிகள் கிடைக்கின்றன.

காட்சிப்படுத்தும் அலமாரி

இவ்வகை அலமாரிகள் புத்தகக் கடைகளில் பயன்படுத்தக் கூடியவை. பொதுவாக வீட்டு அலமாரிகளில் புத்தகங்கள் முதுகு காட்டியபடி அடுக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்த அலமாரியில் புத்தகங்கள் முகத்தைக் காட்டியபடி அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.

பாரிஸ்டர் அலமாரி

பாரிஸ்டர் அலமாரி என்பது இங்கிலாந்தில் பாரிஸ்டர்களின் பயன்பாட்டுக்கு வந்தது. பாரிஸ்டர்கள் தங்களுக்குத் தேவையான சட்டப் புத்தகங்களை வைப்பதற்காகத் தயாரிக்கப்பட்டுப் புழக்கத்துக்கு வந்தது. இது ஒரு மரபான அலமாரி வகை. கண்ணாடிக் கதவுகள் கொண்டது. இதனால் புத்தகங்கள் தூசிபடமால் பாதுகாக்கப்படும். இன்று இவ்வகை அலமாரிகள் உலகம் முழுவதும் பரவலாகப் பயன்பாட்டில் உள்ளன.

மாடுலர் அலமாரி

மாடுலர் அலமாரிகள் பல மாதிரி வடிவங்களில் கிடைக்கின்றன. இவை மரபான அலமாரி வடிவங்களில் இருந்து வேறுபட்டவை. அதாவது முட்டை வடிவம், குறுக்குநெடுக்குமான வடிவம் போன்ற பல வடிவங்களில் கிடைக்கின்றன. இம்மாதிரி அலமாரிகள் நவீன வீடுகளில் அதிகமாகப் பயன்பட்டு வருகின்றன. சிறு வடிவிலிருந்து மிகப் பெரிய வடிவம் வரை கிடைக்கின்றன.

சுவர் ஓர அலமாரி

சுவர் ஓரங்களில் அமைக்கப்படும் இவ்வகை அலமாரிகளும் சமீப காலத்தில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் அலமாரி வகை. புத்தகங்கள் அடுக்கிவைப்பதற்கு மட்டுமல்லாமல் வீட்டுக்கு அழகு சேர்ப்பதாகவும் இந்த அலமாரிகள் இருக்கும்.

ஏணி வடிவ அலமாரி

ஏணியைச் சுவரோடு சேர்த்துச் சரித்துவைத்தால் எப்படி இருக்குமோ அப்படியான வடிவில் உருவாக்கப்பட்டவை இவ்வகை அலமாரிகள். ஏணி போன்ற வடிவமைப்பு என்பதால் ஒவ்வொரு அடுக்கின் அளவும் கீழிருந்து மேலே குறைந்துகொண்டே செல்லுமாறு அமைக்கப் பட்டிருக்கும். மேலே உள்ள அடுக்கு மிகச் சிறியதாக இருக்கும் அதில் பூச் சாடிகள், படங்கள் எதையாவது வைக்கலாம். புத்தகங்களைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல் வீட்டுக்கும் அழகு கூட்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x