Last Updated : 15 Apr, 2017 02:53 PM

 

Published : 15 Apr 2017 02:53 PM
Last Updated : 15 Apr 2017 02:53 PM

பாதாளத்தில் ஒரு விடுதி

போலந்து நாட்டின் தலைநகரம் வார்ஸா. என்றாலும் நாங்கள் செல்லத் தேர்ந்தெடுத்தது க்ராக்கோ நகரத்தை. இதற்கு ஒரு முக்கியக் காரணம் `உப்புச் சுரங்கங்கத்துக்குள் நிலத்துக்கு வெகு கீழே தங்கும் அனுபவத்தைப்’ பெறத்தான்.

க்ரோக்கோ நகரிலிருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது வியலிக்ஸா உப்புச் சுரங்கம். இந்தப் பகுதியில் 13-ம் நூற்றாண்டிலிருந்து உப்புச் சுரங்கங்கள் செயல்பட்டுக் கொண்டிருந்தன. உலகின் மிகத் தொன்மையான உப்புச் சுரங்கங்களில் ஒன்றான இது 2007-ல் மூடப்பட்டது. அவ்வப்போது நிகழ்ந்த வெள்ளங்களாலும், உப்பு விலை மிகவும் குறைந்ததாலும் இவை மூடப்பட்டன. ஆனால் சுற்றுலாப் பயணிகளுக்கு இது திறந்துவிடப்பட்டிருக்கிறது. அங்கு சென்று தங்கவும் செய்யலாம் என்றார்கள்.

உப்புச் சுரங்கத்தின் அடிவாரத்தில் இரவு தங்குவது என்பது வித்தியாசமான அனுபவமாக இருக்கும். அதை அனுபவிக்கத் தீர்மானித்தோம். 125 மீட்டர் ஆழத்தில் உறங்கும் அனுபவம்!

‘உள்ளே அதிக லக்கேஜை எடுத்துச் செல்லக் கூடாது. கைப்பைகளுக்கு மட்டும்தான் அனுமதி’ என்றதும் சிலர் அதிர்ச்சியடைந்தார்கள். ‘பெரிய லக்கேஜ்களை வெளியில் பாதுகாப்பாக வைத்திருக்கும் ஏற்பாடு உண்டு’என்ற அறிவிப்பு தொடர்ந்தது சிலருக்கு ஆசுவாசம் அளித்தாலும், நெதர்லாந்திலிருந்து வந்திருந்த இரு பெண்களால் அதிர்ச்சியிலிருந்து மீள முடியவில்லை. காரணம் அவர்கள் கூடவே அழைத்து வந்திருந்த நாய்க்குட்டிதான். செல்லப் பிராணிகளுக்கு உள்ளே செல்ல அனுமதியில்லை என்பதுடன் அவற்றை வெளியில் பாதுகாத்து வைத்திருக்கும் ஏற்பாடுகளும் இல்லை என்பதை அறிந்ததும் அவர்கள் திகைத்தனர். வேறு வழியில்லாமல் திரும்பிச் சென்றனர்.

அங்கு செல்ல முன்னதாகவே ரிசர்வ் செய்துகொள்வது நல்லது. ஏனென்றால் எல்லா நாட்களிலுமே ஆங்கிலத்தில் பேசும் வழிகாட்டி கிடைத்துவிட மாட்டார். 125 மீட்டர் பாதாளத்தில் உள்ளது தங்குமிடம். போகும் வழியில் (பாதாளத்தில்தான்) ஒரு பிரம்மாண்ட உணவகம் காணப்படுகிறது. நுழைவுக் கட்டணத்திலேயே இரவு உணவும், காலைச் சிற்றுண்டியும் அடக்கம். எதிர்பார்த்தபடி சைவ உணவுக்காரர்களுக்கான விருப்பத் தேர்வு மிகக் குறைவுதான். மது வகைகளுக்குக் குறைவில்லை.

ஒவ்வொருவருக்கும் ஒரு படுக்கை விரிப்பு தரப்படுகிறது. ஒருவேளை தரையிலேயே படுத்துக்கொள்ள வேண்டி இருக்குமோ என்று சின்னதாக ஒரு திகில் உணர்வு. தங்குமிடத்தில் வெப்பம் 14 டிகிரி சென்டிகிரேடுதான் இருக்குமென்று வேறு அறிவித்திருந்தனர்.

மேலும் கீழே சென்றோம். லிஃப்ட் இருந்தது. அதைப் பயன்படுத்தினாலும் நீண்ட தூரம் நடக்கவும் வேண்டும். வழிகாட்டியின் வேகமான நடைக்குப் பாதி பேரால்தான் ஈடுகொடுக்க முடிந்தது. உள்ளுக்குள்ளேயே உள்ளே செல்ல ஒரு வழி, வெளியே செல்ல ஒரு வழி. தவிர கிளைப்பாதைகள் வேறு இருந்தன. இவற்றில் மாறிச் செல்லாமல் இருப்பதும் ஒரு சின்ன சவால்தான்.

‘ஸ்லோவாகி சாம்பர்’ என்ற அரங்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டோம். அங்கு மரத்தினால் ஆன 48 கட்டில்கள். பார்ப்பதற்கே அந்தச் சூழல் வெகு ரம்மியமாக இருந்தது. இரவில் எப்போது வேண்டுமானாலும் உணவகத்துக்குச் சென்று வேண்டியதைச் சாப்பிடலாம். இரவு முழுவதும் அந்த உணவகம் திறந்திருந்தது என்பதற்காகச் சொன்னேன். மற்றபடி காசு கொடுத்துத்தான் சாப்பிட வேண்டும்.

சிலர் கட்டிலைப் பார்த்தவுடனேயே படுக்கை விரிப்பை விரித்துக் கொண்டு அங்கு தயாராக இருந்த தலையணைகளைத் தலைக்கு வைத்தபடி தூங்கத் தொடங்கி விட்டார்கள். அவர்களைப் பற்றி வேறு சிலர், ‘ரசனை கெட்டவர்கள். இந்த இடத்தை ரசிக்க வேண்டாமா?’ என்று விமர்சித்தனர்.

அந்த இரவில் பெரும் பகுதியை அருகிலுள்ள எளிய பொழுதுபோக்குக் கூடத்திலும், சிறிய நூலகத்திலும் கழித்தேன். பொழுதுபோக்குக் கூடத்தில் டேபிள் டென்னிஸ் விளையாட முடியும். மேஜை கால்பந்து என்ற விளையாட்டும் வந்திருந்த சிறுவர்களை ஈர்த்தது. நூலகத்தில் குழந்தைகளுக்கான புத்தகங்கள்தான் அதிகம் இருந்தன.

கழிப்பறைகள் விசாலமாகவும், வெகு சுத்தமாகவும் இருந்ததைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். ஆங்காங்கே அகலமான சுரங்கப் பாதைகள்கூடத் தென்பட்டன. அங்கே ரயில் தண்டவாளங்கள் போன்ற அமைப்புகளையும் காண முடிந்தது. உப்பைத் தள்ளுவண்டிகளில் ஏற்றி எடுத்துச் செல்வதற்கு உதவும் வகையில் அவை அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. ஒரு பகுதியில் எளிமையான ஆனால் அழகான ஒரு தேவாலயத்தையும் காண முடிந்தது.

இங்கு வந்து தங்குவது சனிக்கிழமைகளில் மட்டும்தான் சாத்தியம். ஜூலை - ஆகஸ்ட் மாதங்களில் மட்டும் கூடுதலாக வெள்ளிக்கிழமையும் அனுமதிக் கிறார்கள். இதை மனதில் கொண்டு கடைசி நேரத்தில் எங்கள் பயணத் திட்டத்தைக் கொஞ்சம் மாற்றியமைக்க வேண்டியிருந்தது. அந்த அளவுக்கு இந்த உப்புச் சுரங்க இரவுத் தங்குதல் அனுபவம் மனநிறைவு தருமா என்பது முதலில் கேள்விக்குறியாக இருந்தது.

ஆனால் மறுநாள் காலை அங்கிருந்து திரும்பும்போது இதுவரை கிடைக்காத மாறுபட்ட அனுபவத்தை உணர்ந்தோம். சுற்றுலாக்களின் முக்கிய நோக்கங்களில் ஒன்றல்லவா இது?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x