Published : 29 Oct 2016 10:36 AM
Last Updated : 29 Oct 2016 10:36 AM

கட்டிட அனுமதி வாங்கிவிட்டீர்களா?

வீடு கட்ட நிலம் வாங்கிவிட்டோம். அடுத்தது என்ன வீட்டைக் கட்டத் தொடங்கிவிடலாம்தானே? வெளியிலிருந்து பார்க்கும்போது எளிதாக இருந்தாலும் உள்ளே பல்வேறு வழிமுறைகளைக் கொண்டது, வீடு கட்டும் திட்டம். வீடு கட்டுவதற்கு முன்பு, கட்டுமானத்துக்கான அனுமதி வாங்குவது அதன் வழிமுறைகளில் ஒன்று. தமிழகத்தில் கட்டுமானம் கட்டுவதற்கான வழிமுறைகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

தமிழகத்தைப் பொறுத்தவரைத் தலைநகரான சென்னையில் கட்டிடம் கட்ட சென்னைப் பெருநகர வளர்ச்சிக் கழகத்தின் (சிஎம்டிஏ) அனுமதி அவசியம். தமிழகத்தின் பிற மாவட்டங்களில் கட்டிடம் கட்டுவதற்கு பஞ்சாயத்து, உள்ளூர்திட்டக் குழுமம் (LPA), நகர்ஊரமைப்பு இயக்கம் (DTCP) போன்ற அமைப்புகளில் அனுமதி வாங்க வேண்டியது அவசியம்.

பஞ்சாயத்து அனுமதி

14-06-10 நகர்ஊரமைப்பு இயக்கம் (DTCP) சுற்றறிக்கையின்படி, பஞ்சாயத்துத் தலைவர், நகர்ஊரமைப்பு இயக்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட மனைகளுக்கு மட்டுமே கட்டிடம் கட்ட அனுமதி வழங்க முடியும். குடியிருப்புக் கட்டிடம் கட்ட அதிகபட்சமாக 4,000 சதுர அடி அல்லது நான்கு குடியிருப்புகள் கட்டுவதற்கு மட்டுமே அனுமதி வழங்க முடியும். இரண்டு தளம் வரை கட்டிடம் கட்ட அனுமதி வழங்கலாம். இரண்டு தளத்துக்கு மேல் கட்டிடம் கட்டப் பஞ்சாயத்துத் தலைவரால் அனுமதி வழங்க இயலாது.

வணிகக் கட்டிடம் கட்டுவதற்கு ஒரு தளத்துக்கு மட்டும் அனுமதி வழங்க முடியும். அதேபோல் அக்கட்டிடம் 2,000 சதுர அடிக்கு மேல் இருக்கக் கூடாது.

உள்ளூர் திட்டக் குழுமம் அனுமதி (LPA)

இந்த அமைப்பு நகர்ஊரமைப்பு இயக்கத்தின் (DTCP) கீழ் இயங்குவதாகும். தமிழகத்தில் சென்னை நீங்கலாக 11 மாநகராட்சிகளிலும் அனைத்து மாவட்டத் தலைமையகங்களிலும் உள்ளூர்திட்டக் குழுமத்தின் அலுவலகங்கள் உள்ளன.

உள்ளூர் திட்டக் குழுமத்தின் கட்டிடம் கட்டப் பின்பற்றப்படும் வழிமுறைகள்:

குழு மேம்பாட்டுக் கட்டிடமாக இருக்கும்பட்சத்தில் (Group Development Building) கான்கிரீட் தூணுடன் சேர்த்து நான்கு மாடி அல்லது தரைத்தளத்துடன் சேர்த்து மூன்று மாடி இருக்க வேண்டும். மேலும் மொத்தக் கட்டுமானப் பரப்பளவு 25,000 சதுர அடிக்குள் இருக்க வேண்டும். மேலும் 50 குடியிருப்புகளுக்குள் இருக்க வேண்டும். அதேபோல் 15 மீட்டர் நீளத்துக்கு மேல் இருக்கக் கூடாது. மேலும் சாலை, குறைந்தபட்சம் 9 மீட்டர்அல்லது 29.52 அடி இருக்க வேண்டும். தீயணைப்புத்துறையிடமிருந்து தடையில்லாச் சான்று பெற வேண்டும். தாசில்தாரிடமிருந்து தடையில்லாச் சான்று பெற வேண்டும். அந்த நிலமானது புறம்போக்கு நிலமாக இருக்கக் கூடாது.

நிலம் கையகப்படுத்துதலில் அரசாங்கத்திடமிருந்து 4 (1) Notification வழங்கவில்லை என்று குறிப்பிட வேண்டும். நிலச் சீர்திருத்தச் சட்டம் 1961, நிலஉச்ச வரம்புச் சட்டம் 1978 மற்றும் மழைக் காலங்களில் ஏற்படும் வெள்ளப் பாதிப்புகளுக்குக் கீழ் அந்த நிலங்கள் வரவில்லை என்று குறிப்பிடப்பட வேண்டும். அரசாங்க வழக்கறிஞரிடம் சம்பந்தப்பட்ட இடத்துக்கான சட்ட ஆலோசனைகள் பெற வேண்டும்.

மழை நீர்சேகரிப்பு மற்றும் சூரிய மின்சக்தி நீர்ச் சூடாக்கி முறை போன்ற தகவல்கள் வரைபடத்தில் குறிப்பிட்டிருக்க வேண்டும். மனைக்கான அங்கீகரிக்கப்பட்ட அனுமதி விவரங்கள் தெரிவிக்கப்பட வேண்டும்.

அமைப்பு (Institutions) கட்டிடமாக இருக்கும்பட்சத்தில் கான்கிரீட் தூணுடன் சேர்த்து நான்கு மாடி அல்லது தரை தளத்துடன் சேர்த்து 3 மாடி மொத்தக் கட்டுமானப் பரப்பளவு 25,000 சதுர அடிக்குள் இருக்க வேண்டும். அதேபோல் 15 மீட்டர் நீளத்திற்கு மேல் இருக்கக் கூடாது. பள்ளிக்கூடக் கட்டிடமாக இருக்கும்பட்சத்தில் தரைதளத்துடன் சேர்த்து 2 மாடியாக இருக்க வேண்டும். மொத்தக் கட்டுமானப் பரப்பளவு 25,000 சதுர அடிக்குள் இருக்க வேண்டும். நீதிபதி சம்பத் குழு அளித்த பரிந்துரைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

நகர் ஊரமைப்பு இயக்கம்

மொத்தக் கட்டிடப் பரப்பளவு 25,000 சதுர அடிக்கு மேல் இருந்தால் உள்ளூர்திட்டக் குழுமத்தால் அனுமதி வழங்க இயலாது.

அப்படியிருக்கும்பட்சத்தில் நகர் ஊரமைப்பு இயக்கத்தால் மட்டுமே அத்தகைய அனுமதி வழங்க இயலும். சென்னையில் இயங்கும் நகர ஊரமைப்பு இயக்கத்தின் தலைமை அலுவலகம் மூலமாகவே அனுமதிபெற வேண்டும். சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் எல்லைக்கு அப்பாற்பட்ட தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளும் நகர ஊரமைப்பு இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வரும்.

கட்டுரையாளர், கேரள அரசின் சட்ட ஆலோசகர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x