Last Updated : 17 Jun, 2017 10:43 AM

 

Published : 17 Jun 2017 10:43 AM
Last Updated : 17 Jun 2017 10:43 AM

கடன் வீட்டை வாரிசுக்கு மாற்ற முடியுமா?

வீட்டைப் பார்த்துப் பார்த்துக் கட்டுவதோ வாங்குவதோ எதற்கு? முதலில் நமக்கெனச் சொந்தமாக ஒரு இடம் என்ற திருப்தி, சொந்த வீட்டில் இருக்கிறோம் என்ற பெருமை. நமக்குப் பிறகு வாரிசுகளுக்கென விட்டுச் செல்ல ஒரு சொத்து என்ற எண்ணம். சட்டப்படி பெற்றோர் கட்டிய வீடு, வாங்கிய மனை என எந்தச் சொத்தாக இருந்தாலும் அவர்கள் காலத்துக்குப் பிறகு அது வாரிசுகளுக்கே சொந்தம் என்பது எல்லோரும் அறிந்ததுதான்.

ஆனால், இந்தக் காலத்தில் பெரும்பாலும் வங்கிகளிலிருந்து வீட்டுக் கடன் வாங்கியே பலரும் வீடு கட்டுகிறார்கள் அல்லது வாங்குகிறார்கள். பிறகு 20 முதல் 25 ஆண்டுகள்வரை தவணைத் தொகையைச் (இ.எம்.ஐ.) செலுத்துகிறார்கள். தவணைத் தொகையைக் கட்டி முடிக்கும்வரை அந்த வீட்டின் மீது கடன் இருக்கிறது. கடன் தொகை நிலுவையில் இருக்கும்போது வீட்டை வாரிசுகளுக்கு எழுதிவைக்க முடியுமா?

வீட்டுக் கடனைச் செலுத்திக்கொண்டிருக்கும்போது, வீட்டை வாரிசுகளுக்கு எப்படி எழுதிவைக்க முடியும் என்ற கேள்வி உங்களுக்குள் நிச்சயம் எழும். இன்னும் சொல்லப்போனால் இப்படி ஒரு விருப்பத்தை வங்கியில் தெரிவித்தால் உடனடியாக நடைமுறைச் சாத்தியம் இல்லை என்றே பதில் வரும். ஆனால், சட்டப்படி இதைச் செய்வதற்கு வழிகள் உள்ளன. வீட்டுக் கடன் தொகை நிலுவையில் இருக்கும்போதே விருப்பப்படி வாரிசுகளுக்கு எழுதித் தரவும் முடியும். அதற்கான நடைமுறை என்ன என்பது பற்றி ஓய்வு பெற்ற வங்கியாளர் கோபாலகிருஷ்ணன் சொல்கிறார்.

“வீட்டுக் கடன் முழுமையாகச் செலுத்தப்படாத நிலையில், வீட்டை வாரிசுகளுக்கு எழுதித் தர விரும்பினால், முதலில் அந்த விருப்பத்தை வங்கியில் எழுத்துபூர்வமாக தெரிவிக்க வேண்டும். அதில் வீட்டை எழுதித் தருவதால் வங்கிக்கு எந்தப் பாதிப்பும் இழப்பும் ஏற்படாது என்பதை உத்தரவாதமாக எழுதித் தர வேண்டும். அதன் பிறகு வங்கியிடமிருந்து ஆட்சேபனை இல்லாக் கடிதத்தைப் பெற வேண்டும். இந்த நடைமுறை முடிவுற்றால், யாருக்கு வீட்டை எழுதித் தருகிறோமோ அவர் எஞ்சிய வீட்டுக் கடனுக்கான ஜாமீன்தாரர் ஆகிவிடுவார். மேலும் வீட்டைப் பெறுபவர் கோ-பாலோயர் என்றழைக்கப்படும் இணைக் கடனாளியாகவும் மாறிவிடுவார். அடுத்த கட்டமாக இதைச் சட்ட நடைமுறையாக்கினாலே போதும், வீடு வாரிசுகளின் பெயரில் வந்துவிடும்” என்கிறார் கோபாலகிருஷ்ணன்.

இப்படி ஒரு நடைமுறை வங்கியில் இருந்தாலும், அதைப் பெரும்பாலும் வங்கிகள் பின்பற்ற முன்வருவதில்லை. அதற்கு என்ன காரணம் என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம். அதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. வீட்டுக் கடன் நிலுவையில் இருக்கும்போது, வீட்டை வாரிசுகளுக்கு எழுதித் தரும் இந்த நடைமுறை மிகவும் நீண்டது. அதுமட்டுமல்ல; வீட்டை வாரிசுக்கு மாற்றுவதால், இதுவரை வீட்டுக் கடனைச் செலுத்தி வந்தவர் அதற்குப் பொறுப்பாக மாட்டார் என்ற நிலை வந்துவிடும். கொடுத்த கடனுக்கு இப்படியொரு நிலை ஏற்படுவதை வங்கிகள் விரும்புவதில்லை. எனவே, இந்த நடைமுறையைச் செயல்படுத்த வங்கிகள் பெரும்பாலும் யோசிக்கவே செய்யும்.

மேலும், இடையில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் வீட்டுக் கடனைத் திரும்பப் பெறுவதில் பாதிப்பு ஏற்படலாம் என்றும் வங்கிகள் பல கோணங்களில் யோசிக்கும். எனவே, இப்படியொரு விருப்பத்தை வங்கியில் தெரிவிக்கும்போது, தொடக்கத்திலேயே அதைப் பெரும்பாலான வங்கிகள் நிராகரித்துவிடுகின்றன. ஆனால், உண்மையில் வீட்டுக் கடன் நிலுவையில் இருக்கும்போது, அந்த வீட்டை வாரிசுகளுக்குப் பெயர் மாற்றம் செய்யும் இந்த நடைமுறை சட்ட விரோதமானதல்ல என்றும் சொல்கிறார் கோபாலகிருஷ்ணன்.

இந்த விஷயத்தை வேறொரு முறையில் யோசித்துப் பார்ப்போம். ஒருவேளை வீட்டுக் கடனை வாங்கி வீடு கட்டியவர் அல்லது வாங்கியவர் கடன் நிலுவையில் இருக்கும்போதே இறந்துவிட்டால் வங்கிகள் என்ன செய்யும்? பெரும்பாலும் வீட்டுக் கடனை பெறும்போதே அந்தக் கடனுக்குக் காப்பீடு செய்யப்பட்டுவிடுகிறது. எதுவும் பிரச்சினை ஏற்பட்டாலும் காப்பீடு மூலம் அந்தக் கடன் தொகையை வங்கிகள் பெற்றுவிடும். சரி, வீட்டுக் கடனுக்குக் காப்பீடு செய்யாமல் இருந்திருந்தால் என்னவாகும்? எஞ்சிய பணத்தை வாரிசுகளிடமிருந்து வங்கிகள் வசூலித்துக் கொள்ளும். கிட்டத்தட்ட அதே நடைமுறைதான் வீட்டுக் கடன் நிலுவையில் இருக்கும்போது, அந்த வீட்டை வாரிசுகளுக்குப் பெயர் மாற்றம் செய்வதும்.

இப்படி வழிகள் இருந்தாலும் வங்கிகள் மனசு வைக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x