Last Updated : 17 Dec, 2016 11:52 AM

 

Published : 17 Dec 2016 11:52 AM
Last Updated : 17 Dec 2016 11:52 AM

எதை முதலில் தேர்ந்தெடுக்க வேண்டும்?

வீட்டை வடிவமைக்கும்போது எதை முதலில் தேர்ந்தெடுக்கிறோம், அதை எப்படித் தேர்ந்தெடுக்கிறோம் என்பதில்தான் வடிவமைப்பு உத்திகள் அடங்கியிருக்கின்றன. வடிவமைப்பில் செய்யப்படும் பொதுவான சில தவறுகள் இருக்கின்றன. அவற்றைத் தவிர்த்துவிட்டால் வீட்டை வடிவமைத்த பிறகு எந்த மாற்றமும் செய்ய வேண்டிய தேவையிருக்காது. வடிவமைக்கும்போது தவிர்க்கவேண்டிய சில விஷயங்கள்...

வண்ணமா, அறைக்கலன்களா?

நம்மில் பலரும் வடிவமைப்பில் முதலில் தேர்ந்தெடுப்பது வண்ணமாகத்தான் இருக்கும். வீட்டின் தோற்றத்தைத் தீர்மானிப்பதில் சுவர் நிறத்துக்குப் பெரிய பங்கிருக்கிறது என்பது உண்மைதான். ஆனால், அதற்காக வண்ணத்தைத்தான் முதலில் தேர்ந்தெடுக்க வேண்டுமென்ற அவசியமில்லை. மாறாக, வீட்டின் அறைக்கலன்களும், அதற்கான அலங்காரப் பொருட்களையும் (தரை விரிப்புகள், குஷன்கள், திரைச்சீலைகள், அறைக்கலன்களுக்கான துணிவிரிப்புகள்) முதலில் தேர்ந்தெடுத்துவிட்டால் சுவர் வண்ணங்களைத் தேர்ந்தெடுப்பது இன்னும் எளிதாகிவிடும். வீட்டுக்கு வண்ணத்தை முதலில் தேர்ந்தெடுத்துவிட்டால், அதே வண்ணத்தில்தான் அறைக்கலன்களையும் தேர்தெடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தை இதன் மூலம் தவிர்க்கலாம்.

அறைக்கலன்களின் அளவு

கடையில் ஓர் அறைக்கலனைப் பார்க்கும்போது அதன் அளவைக் கச்சிதமாகக் கணிப்பது என்பதென்பது இயலாத காரியம். அதனால்தான் வீட்டில் அவற்றைப் பொருத்தியவுடன் அதன் அளவைப் பார்த்து நம்மில் பலரும் அதிர்ச்சியடைகிறோம். அறையின் மொத்த இடத்தையும் அறைக்கலன்களே எடுத்துக்கொண்டன என்று புலம்பாமல் இருக்கவேண்டுமென்றால் அளவெடுத்து வாங்குவதுதான் சரியான தீர்வாக இருக்கும். அதற்காக அளவெடுக்கும் ‘டேப்’புடன் கடைக்குச் செல்ல முடியுமா என்று யோசிக்கிறீர்களா? ஆனால், அப்படிச்செய்வதில் தவறில்லை என்று சொல்கிறார்கள் உள்அலங்கார வடிவமைப்பாளர்கள். வீட்டில் அறைக்கலனுக்கு ஒதுக்கியிருக்கும் இடத்தை அளவெடுத்துச் சென்று, அதற்குப் பொருந்தக்கூடிய அறைக்கலனைத் தேர்ந்தெடுப்பதால் வீட்டில் இடப்பற்றாக்குறை ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

ஒரே கடை வேண்டாம்!

வீட்டுக்குத் தேவையான அறைக்கலன்கள் எல்லாவற்றையும் ஒரே கடையில் வாங்குவது இப்போது எளிமையான விஷயமாக இருக்கிறது. ஆனால், இப்படி ஒரே கடையில் வாங்குவதால் சுவாரஸ்யமான அறைக்கலன் வகைகளைப் பலரும் தவறவிட்டுவிடுகிறோம். அதனால், அறைக்கலனை வாங்குவதற்குமுன் குறைந்தபட்சம் இரண்டு கடைகளுக்காவது சென்று பாருங்கள். அத்துடன், இப்போது நவீன வடிவமைப்பிலான அறைக்கலன்கள் ‘ஆன்லைன் ஸ்டோர்’களிலும் கிடைக்கின்றன. அவற்றையும் ஒருமுறை பார்த்துவிட்டுக் கடைக்குச் செல்வது கூடுதல் உதவியாக இருக்கும்.

மொத்தமாக வாங்கலாமா?

ஒரு சோஃபாவை வாங்கும்போது அதனுடன் இருக்கும் நாற்காலிகளையும் சேர்த்து மொத்தமாக வாங்கத் தேவையில்லை. சோஃபாவை வாங்கிவிட்டு அதற்குப் பொருந்தக்கூடிய நாற்காலிகளைத் தனியாக வாங்கலாம். சோஃபா, மேசை, படுக்கை என எல்லாமே ஒரே மாதிரியான வடிவமைப்பில் இருப்பது வீட்டுக்கு ஓர் அயர்ச்சியான தோற்றத்தைக் கொடுப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. அத்துடன், அறைக்கலன்களில் ‘மிக்ஸ் அண்ட் மேட்ச்’(Mix and Match) செய்வதுதான் அப்போதைய போக்கு. இதை நடைமுறைப்படுத்தும்போது ஏதாவது ஓர் இணைப்பு அம்சம் மட்டும் இருக்கும்படி பார்த்துக்கொள்வது நல்லது. அது வண்ணம், வடிவமைப்பு என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

துணிச்சலான தேர்வுகள்

வடிவமைப்பு என்று வரும்போது முற்றிலும் புதுமையான அலங்காரங்களைத் தேர்வுசெய்வதில் சிலருக்குத் தயக்கம் இருக்கலாம். உண்மையில், இப்படிப்பட்ட புதுமையான, துணிச்சலான அலங்காரத்தைத் தேர்ந்தெடுக்கும்போது வீட்டை அது உயிர்ப்புடன் மாற்றிவிடுகிறது. உதாரணத்துக்கு, ஒரு துணிச்சலான (கண்ணைக் கவரும் வண்ணங்கள்) சுவர் அலங்காரத்தைச் செய்யும்போது அதை மட்டுப்படுத்த நினைத்தால் அறைக்கலன்களை மென்மையான நிறங்களில் தேர்ந்தெடுக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x