Last Updated : 28 Oct, 2016 10:59 AM

 

Published : 28 Oct 2016 10:59 AM
Last Updated : 28 Oct 2016 10:59 AM

ஹேப்பி ‘அனிமேஷன்’ தீபாவளி!

‘ஃபர்ஸ்ட் டே… ஃபர்ஸ்ட் ஷோ!’ பார்க்கிற வீரமுள்ள ரசிகர் கூட்டமல்லவா நாம். ஆனால், ‘மெய்ன்ஸ்ட்ரீம்’ படங்களுக்குக் கிடைக்கிற இத்தகைய வரவேற்பு, அனிமேஷன் படங்களுக்குக் கிடைக்கிற நிலை இந்தியாவில் இப்போதைக்கு இல்லை!

இது குழந்தைகளுக்கான படமென்று அப்படங்களைப் பார்க்கும் முன்பே பட்டம் சூட்டிவிடுவோம். அப்படியே அனிமேஷன் படங்கள் பார்த்தால்கூட, வால்ட் டிஸ்னி, பிக்ஸார் போன்ற அதிகம் பரிட்சயமுள்ள பிரம்மாண்டமான படைப்புகளையே பார்த்திருப்போம். முழு நீள அனிமேஷன் படங்களுக்கே இந்த நிலை என்றால், அனிமேஷன் குறும்படங்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.

ஆனால் ஆஸ்கரில் தொடங்கி இன்னும் பல திரைப்பட விழாக்களின் விருதுப் பட்டியலில், அனிமேஷன் குறும்படங்களுக்கென்றே தனி இடம் வழங்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் பலவும் அனிமேஷன் குறும்படங்கள் தயாரிப்பதில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார்கள். இந்தியத் திரை உலகமோ, தற்போதுதான் அனிமேஷனில் லேசாக எட்டிப் பார்க்கிறது.

சென்ற ஆண்டின் சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான ஆஸ்கர் பரிந்துரையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சஞ்சய் பட்டேலின், ‘சஞ்சய்ஸ் சூப்பர் டீம்’ என்னும் படம் இடம் பிடித்தது. ஆனால் ஆஸ்கர் பேச்சு முடிந்த கையோடு அப்படத்தையும் மறந்துவிட்டோம். காரணம், அனிமேஷன் படங்களை வெறும் பொம்மைப் படங்களாக, சிறுவர்களுக்கானதாக மட்டுமே நாம் கருதுவதுதான்!

அனிமேஷன் குறும்படங்களை உயிர்ப்புள்ள படைப்பாக இனியாவது கருத வேண்டும். அப்படி நாம் பார்க்க மறந்த, அதிகம் கவனிக்கப்படாத சில உன்னதமான படைப்புகள் பற்றி ‘மினி’ ட்ரெய்லர் இங்கே...

இதைப் போன்ற குறும்படங்களையும் பார்க்கலாம். இந்தியாவிலும் சில படைப்புகள் ஆங்காங்கே உருவாவதுண்டு. ‘டேக் மீ ஹோம்’ (Take me home), சஸ்னி (Chasni), மகர்வாசி (Magarwasi) போன்ற அனிமேடட் குறும்படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. ஆனால் அதிகம் கவனிக்கப்பட்டதில்லை.

அனிமேஷனில் ஆர்வமுள்ள ஏராளமான இந்திய இளைஞர்களுக்கு, அனிமேஷன் கோர்ஸ் வழங்கினால் மட்டும் போதாது, அதை ஊட்டி வளர்க்க இந்திய சினிமா கை கொடுக்க வேண்டும். மேலும் அந்தப் படைப்புகளைப் பாராட்டும் அளவுக்கு நம் சினிமா பார்வையையும் வளர்த்துக்கொள்ள‌ வேண்டும். இந்த தீபாவளிக்கு ‘முதல் நாள், முதல் காட்சி’க்கு டிக்கெட் கிடைக்காதவர்கள், இதுபோன்ற அனிமேஷன் படங்களைப் பார்த்து தீபாவளி கொண்டாடுங்கள்.

பிளானெட் அன்னோன் (Planet unknown)

கிறிஸ்டோபர் நோலனின், ‘இன்டெர்ஸ் டெல்லர்’ படத்தைப் பார்த்திருப்போம். அப்படத்தில் வரும் டார்ஸ் மற்றும் கேஸ் என்ற இரண்டு ரோபோட் கதாப்பாத்திரங்களின் கதையை மையமாகக் கொண்டு அமைந்துள்ள படமே, ‘பிளானெட் அன்னோன்’. பூமியைத் தவிர்த்து, மனிதர்கள் வாழ ஒரு கிரகத்தைத் தேடும் பணியில் ஈடுபடுகிறார்கள், டார்ஸ் மற்றும் கேஸ். அங்கு அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை எப்படிச் சமாளிக்கிறார்கள் என்பதை ஒன்பது நிமிடங்களுக்குள் ஆக்ஷன் மசாலா தூவிச் சொல்கிறது இந்தப் படம். சயின்ஸ் ஃபிக் ஷன் கதைகளில் அதிகம் ஆர்வம் உள்ளவர்கள், நோலனின் அடுத்த படம் வரும் வரை காத்திருக்க வேண்டாம்.

கூப்டு (Cooped)

நம்மை ஒரு வீட்டிற்குள் அடைத்து வைத்து, சோறு தண்ணி போடாமல், நம்மோடு யாரும் பேசாமல், விளையாடாமல் இருந்தால் எப்படி இருக்கும்? நரகம்தான் இல்லையா? மனிதர்களுக்கே இந்த நிலை என்றால் நாம் செல்லமாக வளர்க்கும் பிராணிகளைப் பற்றி யோசித்துப் பாருங்கள். வாய் பேசத் தெரியாத அந்த ஐந்தறிவு ஜீவன், எப்படியெல்லம் வருந்தும் என்பதை நகைச்சுவை கலந்து சொல்லும் படமே இது. செல்லப் பிராணிகளை ஆசை யாக வாங்கினால் மட்டும் போதாது, அதனோடு சேர்ந்து வாழ வேண்டும், அதன் துயரத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். ‘கூப்ட்’ பாருங்கள்... உங்கள் செல்லப் பிராணிகளைக் கொஞ்சுங்கள்!

அலாரம் (Alarm)

காலை வேளையில், சூரியன் உச்சந்தலைக்கு மேல் ஏறிய பின்புதான் நம்மில் பலருக்கு ஆழ்ந்த தூக்கமே வரும். அப்படி உறங்கும்போது பல நல்ல கனவுகள் லேசாக வந்து போவதுண்டு. அப்படியே சொர்க்கத்தில் இருப்பதுபோல நம்மை உணருவோம். ஆனால் நேரங்கெட்ட நேரத்தில்தான் இந்த பாழாய்ப்போன அலாரம் 'டோர்ர்ர்ர்ர்ர்ர்ர்' என்று அடித்து ஊரைக் கூட்டும். அப்படி நாம் நித்தம் நித்தம் அனுபவிக்கும் காலை நேரப் போராட்டததை மிக அருமையாகக் கதையாக்கியிருக்கும் படமே, இது! உங்கள் அலாரம் அலறுவதற்குள் இந்த ஜப்பானியக் குறும்படத்தைப் பார்த்துவிடுங்கள்.

பாரோவ்டு டைம் (Borrowed Time)

ஒரு விபத்தில் எதிர்பாராத விதமாய்த் தன் தந்தையை இழந்துவிடுகிறான், ஷெரிஃப். வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் தன் இழப்பை நினைத்து வருந்துகிறான். அந்த விபத்தை மறக்க நினைத்தாலும் முடியவில்லை. விரக்தியடைந்த ஷெரிஃப் பிறகு என்ன செய்தான் என்பதை முற்றிலும் வேறுபட்ட கண்ணோட்டத்தில் எடுத்திருப்பார்கள். இப்படம், புனித லூயி சர்வதேச திரைப்பட விழா 2015, நாஷ்வில் திரைப்பட விழா 2016, யு.எஸ்.ஏ. திரைப்பட விழா 2016, ஃபாஸ்ட்நெட் திரைப்பட விழா 2016, ப்ளூ ப்ளம் அனிமேஷன் விழா 2016 உள்ளிட்ட திரைப்பட விழாக்களில் பல விருதுகளைக் குவித்துள்ளது.

ஃபகிர் (FAKIR)

வருண் நாயர் இயக்கியுள்ள மிக அற்புதமான படைப்பு. கண்னை மூடித் திறப்பதற்குள் இந்தக் குறும்படம் முடிந்துவிடும். ஆனால் ஒவ்வொரு காட்சியும் கருத்து நிரம்பியது. இந்திய மாடர்ன் பிச்சைக்காரரைப் பற்றிய கதை. நாம் சாப்பிடும் உணவை எப்படி வீணாக்குகிறோம் என்பதை நறுக்கென்று சுட்டிக்காட்டும் படம். மேலும் அந்தப் பிச்சைக்காரர், மக்களின் அலட்சியத்தை எப்படித் தன் வயிற்றை நிறப்பப் பயன்படுத்திக்கொள்கிறார் என்பதையும் காட்டுகிறது. நகைச்சுவை கலந்த இந்த இந்தியப் படைப்பைப் பார்க்க வெறும் மூன்று நிமிடங்கள் போதும்!

தி ப்ரெசென்ட் (The Present)

சமீபத்தில் வெளியாகி அதிகக் கவனத்தை ஈர்த்த அனிமேடட் குறும்படம், ‘தி ப்ரெசென்ட்’. பிரேசிலியன் காமிக் புத்தகத்தில் வெளிவந்த ஒரு குட்டிக் கதையைத் தழுவி இப்படம் எடுக்கப் பட்டுள்ள‌து. மாற்றுத் திறன் கொண்ட நாய்குட்டிக்கும், அதன் இளம் எஜமானருக்கும் இடையே உருவாகும் அழகான புது உறவைப் பற்றிய அனிமேடட் கதை இது.

பொதுவாகவே நமக்கு நாய்க்குட்டிகள் மேல் அதிகமான பிரியம் உண்டு, அதுவே மாற்றுத் திறன் கொண்ட‌ நாய்க்குட்டிகள் என்றால், அதைப் பார்த்துப் பரிதாபம் அடைவோமே தவிர அதனோடு விளையாடவோ வீட்டுக்கு எடுத்துச் செல்லவோ மாட்டோம். ஆனால் அதுவும் மற்ற நாய்களைப் போல நன்றி உள்ளதுதான் என்பதை மிக அழகாகத் தெரிவிக்கும் கதையே இது. மொத்தமே நான்கு நிமிடங்கள்தான், ஆனால் இதற்குக் கிடைத்துள்ள வரவேற்பும், விருதுகளும் ஏராளம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x