Last Updated : 27 Mar, 2015 02:22 PM

 

Published : 27 Mar 2015 02:22 PM
Last Updated : 27 Mar 2015 02:22 PM

ஸ்மைல் சோனாலி!

உலகிலேயே மகிழ்ச்சியான ஒரு விஷயம் குழந்தைகளின் முகத்தில் புன்னகையை வரவழைப்பதுதான்! உதட்டுப் பிளவு ஏற்பட்ட குழந்தைகளின் முகத்தில் புன்னகையை வரவழைத்திருக்கிறார் கலிபோர்னியாவில் வசிக்கும் 15 வயது சோனாலி ரணவீரா. நான்கு ஆண்டுகளுக்கு முன் கிறிஸ்துமஸ் பரிசாக 6,500 ரூபாயை வழங்கினார் சோனாலியின் அம்மா. “இந்தப் பணம் முழுவதையும் நீயே செலவு செய்துகொள். அல்லது மற்றவர்களுக்காகவும் செலவு செய்யலாம்” என்றார் அம்மா.

மாற்றமாகி நின்றாய்!

அம்மாவின் பேச்சு 11 வயது சோனாலியை மிகவும் யோசிக்க வைத்தது. தனக்கு 40 சதவிகிதமும் மற்றவர்களுக்கு 60 சதவிகிதமும் ஒதுக்க நினைத்தார். அப்போது ‘ஸ்மைல் டிரெயின்’ அமைப்பு பற்றி தெரியவந்தது. வளர்ந்துவரும் நாடுகளில் உதட்டு பிளவு ஏற்பட்ட குழந்தைகள், அறுவை சிகிச்சை செய்துகொள்ளப் பணம் இல்லாமல் தவிக்கிறார்கள்.

அவர்களின் சிகிச்சைக்குப் பணம் கொடுத்து உதவும் வேலையைச் செய்துவந்தது ஸ்மைல் டிரெயின். உடனே பரிசுப் பணம் முழுவதையும் ஒரு குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு அளிக்க முடிவெடுத்தார் சோனாலி. ஆனால் சிகிச்சைக்கு 15 ஆயிரம் ரூபாய் தேவைப்பட்டது. மீதிப் பணத்துக்கு என்ன செய்யலாம் என்று யோசித்தார். நாட்கள் நகர்ந்தன.

பள்ளியில் ஒருநாள் புவியியல் வகுப்பில் சுற்றுச்சூழல் மாசு பற்றிப் பாடம் எடுக்கப்பட்டது. பிளாஸ்டிக் போன்ற பொருட்கள் எவ்வாறு பூமியைப் பாதிக்கின்றன என்றும், இதுபோன்ற பொருட்களை மறுசுழற்சி செய்து நாம் பயன்படுத்த வேண்டும் என்றும் ஆசிரியர் சொல்லச் சொல்ல, சோனாலிக்குச் சட்டென்று ஒரு யோசனை வந்தது. தன் திட்டத்தை அம்மாவிடமும் அண்ணனிடமும் தெரிவித்தார். அவர்களும் ஆதரவு தெரிவித்தனர்.

நண்பர்கள், உறவினர்கள், அறிந்தவர்கள், தெரிந்தவர்கள் என்று அத்தனை பேரிடமும் காலி அலுமினிய கேன்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள், கண்ணாடி பாட்டில்களைச் சேகரிக்க ஆரம்பித்தார் சோனாலி.

“நன்கொடையாகப் பணம் கேட்பதைவிட வீணாகத் தூக்கி வீசும் பாட்டில்களையும் கேன்களையும் சேகரிப்பது எளிதான விஷயமாக இருந்தது. நல்ல காரியங்களுக்காக வீடு வீடாகச் சென்று சேகரிப்பதில் எனக்கு எந்தவிதத் தயக்கமோ, சங்கடமோ இல்லை.

பூமிக்குக் கேடு விளைவிக்கும் இந்தப் பொருட்களை மறுசுழற்சி செய்வதற்கு அளிக்கும்போது பணமும் கிடைக்கிறது. பூமியும் சூழலியல் சீர்கேட்டில் இருந்து தப்பிக்கிறது. அதனால் இந்தக் காரியத்தை மகிழ்ச்சியுடன் நானும் என் குடும்பமும் செய்கிறோம்” என்கிறார் சோனாலி.

உதவும் கரங்கள்

‘ரீசைக்ளிங் ஃபார் ஸ்மைல்ஸ்’ என்ற அமைப்பை ஆரம்பித்தார் சோனாலி. வீணான பொருட்களின் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு, சோனாலியின் பிறந்தநாள் அன்று ஒரு குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

2012-ல் மட்டும் 20 அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. இப்போது சோனாலியின் அமைப்பைக் கேள்விப்பட்டு ஏராளமானவர்கள் தாங்களாகவே முன்வந்து கேன்களையும் பாட்டில்களையும் கொடுக்கிறார்கள்.

சோனாலியும் அவரது அண்ணன் மனோவும் வார இறுதியில் ஒவ்வொரு இடமாகச் சென்று, சேகரித்துவருகிறார்கள். பிளாஸ்டிக்கையும், கண்ணாடியையும் தனித்தனியாகப் பிரிக்கிறார்கள். தினமும் மறுசுழற்சித் தொழிற்சாலையில் இவற்றைக் கொடுத்துவிட்டு வருகிறார் சோனாலியின் அம்மா.

இப்படியாக, இரண்டு ஆண்டுகளில் 1,709 கிலோ அலுமினியம், 555 கிலோ பிளாஸ்டிக், 4,944 கிலோ கண்ணாடிகளைச் சேகரித்துக் கொடுத்து, 6 ½ லட்சம் ரூபாயை உதட்டு பிளவு குழந்தைகளின் சிகிச்சைக்கு வழங்கியிருக்கிறார் சோனாலி.

தேடி வந்த விருது

மிகச் சிறப்பாகத் தொண்டு செய்யும் மாணவர்களுக்கு வழங்கப்படும் கோல் விருதும் 6 ½ லட்சம் ரூபாயும் சோனாலிக்குக் 2013-ல் வழங்கப்பட்டன. இந்தத் தருணத்தில் 2009-ல் ஆஸ்கார் பரிசைப் பெற்ற இந்திய ஆவண குறும்படமான ‘ஸ்மைல் பிங்கி’ நினைவுக்கு வருகிறது.

35 ஆயிரம் குழந்தைகளில் இருந்து சோனாலி இந்த விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அந்தப் பணமும் வீணான பொருட்களில் இருந்து கிடைக்கும் பணத்தையும் வைத்து மேலும் சில விஷயங்களைத் திட்டமிட்டார் சோனாலி.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான சிகிச்சை, ஏழை நாடுகளில் இருக்கும் குழந்தைகளுக்குத் துணிகள், புத்தகங்கள், மருத்துவ முகாம்கள் என்று அவரது சேவை எல்லை விரிந்தது. இதுவரை 22 லட்சம் ரூபாயை அவரது அமைப்பு மூலம் வழங்கி, ஏழைக் குழந்தைகளின் துயர் துடைத்திருக்கிறார் இந்தச் சின்னஞ்சிறிய சிறிய தேவதை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x