Last Updated : 29 Apr, 2016 02:47 PM

 

Published : 29 Apr 2016 02:47 PM
Last Updated : 29 Apr 2016 02:47 PM

புறப்படும் புதிய இசை - 5: அடங்காத இசை சாகசம்

அந்த இசையில் குறும்புத்தனம் நிரம்பி வழிகிறது. சில தினங்களுக்கு முன்பு வெளியான, ‘ஹோலா ஹோலா அமீகோ’ சிங்கிள் டிராக் தெரு போஸ்டர் முதல் யூடியூப் வரை பட்டையைக் கிளப்பியது. சாய் பரத் இயக்கிவரும் ‘ரம்’ படத்துக்கான இப்பாடல் ஸ்பானிஷ் மொழியில் ‘ஹலோ நண்பர்களே’ என்கிற அர்த்தம் தரும் ‘ஹோலா அமீகோ’ என்கிற கவர்ச்சியான வார்த்தைகளுக்குப் புதிய ஒலிகளைக் கூட்டியிருக்கிறது.

‘அடுத்த தெருவில் இருக்கும் குப்பைக்கு’ எனச் சுற்றுச்சூழல் மாசுபாடு முதல் ஊழல் நிறைந்த அரசியல்வரை ஏகப்பட்ட சமூகப் பிரச்சினைகளைக் கிளறுகிறது. பாடலின் மத்தியில் ‘பீப் சாங் அ கேட்டு ஆடும் கேங்க் ஆ நீ’ என்றுகூட சுயவிமர்சனம் செய்துகொள்கிறார் பாடகரும் இசையமைப்பாளருமான அவர். இசையமைத்துப் பாடியது மட்டுமல்லாமல் பியானோ, சிந்தஸிஸ், தாள வாத்தியங்களையும் அவர் வாசித்திருக்கிறார். இப்படித் திறமையும் இளமையும் கொப்பளிக்கும் இளைஞர் அனிருத்.

அவர் பெயரைச் சொன்னதும் ரஜினி, தனுஷ் எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே கண் முன் தெரிவார்கள். நடிகர் ரவி ராகவேந்திரர் மகன். லதா ரஜினிகாந்த்தின் மருமகன். பத்மா சேஷாத்ரி பள்ளியிலும் லயோலா கல்லூரியிலும் படித்த பக்கா சென்னைப் பையன். பள்ளி நாட்களிலேயே நண்பர்களோடு சேர்ந்து ‘ஸிங்க்ஸ்’ எனும் தனி இசை ‘பேண்டி’ல் சொந்த இசையை உருவாக்கத் தொடங்கினார். ஸிங்க்ஸில் இருந்த லியோன் ஜேம்ஸ் மற்றும் விவேக் இன்று திரை இசையில் கால்பதித்திருக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மானிடம் சில காலம் கீபோர்டிஸ்ட்டாக இருந்தார். கல்லூரிக் காலத்தில் குறும்படங்களுக்கு இசையமைக்க, ‘ஒய் திஸ் கொலை வெறி’ வரை அது கொண்டு வந்துவிட்டது.

நானோ வேகம் 10 நிமிடங்களில் மெட்டு போட்டு 20 நிமிடங்களில் உதித்த லோக்கல் இங்கிலிஸூ வார்த்தைகளை தனுஷ் கலைத்துப் போட்டு கோத்த‌தால் ‘ஒய் திஸ் கொலை வெறி’ வந்துவிட்டது. தோராயமாக வந்த பாடலை திடீரென யாரோ யூ டியூபில் பதிவேற்றப் பரவலானது. பின்பு 2011 நவம்பரில் ‘ஒய் திஸ் கொலை வெறி மேக்கிங்’ வீடியோவை அனிருத்தே பதிவேற்ற ஒரே மாதத்தில் அந்த ஆண்டு அதிக அளவில் கேட்கப்பட்ட பாடலாக சிஎன்என் வீடியோ அதை அறிவித்தது. ஜனவரி 1, 2012-ல் 3 கோடிப் பேர் அதை யூடியூப்பில் கேட்டிருக்கிறார்கள். இணையத்தில் சவாரி செய்து நானோ வேகத்தில் அனிருத்தின் இசை இந்தியா மட்டுமல்லாமல் வெவ்வேறு நாடுகளைச் சுற்றியது. கேட்க மிகச் சாதாரண மெட்டுபோல ஒலித்தாலும் அதில் நாதஸ்வரம், ஷெனாய், தவில், உருமி, சாக்ஸஃபோன், அகொஸ்டிக் கித்தார், எலக்ட்ரானிக் சின்தஸிஸ், ஸ்கராட்ச்சஸ் எனப் பல இசை அம்சங்களை இழைத்திருக்கிறார் அனிருத்.

‘3’ படத்துக்காக இசையமைக்கப்பட்ட மற்ற பாடல்களும் தமிழ் இசை ரசிகர்களுக்குப் புதிய இசை அனுபவத்தைத் தந்தன. சிக்கலான திரைக்கதைப் போக்கு கொண்ட அப்படத்துக்குப் பின்னணி இசை உயிரூட்டியது.

அனிருத் வெறும் ‘ஒன் டைம் ஃபேம்’ எனப் பரவலாகப் பேசப்பட்டபோது 2013-ல் ‘எதிர் நீச்சல்’, ‘வணக்கம் சென்னை’ ஆகிய படங்கள் வெற்றிபெற்று, அவரின் ‘கரியர் கிராஃபை' ஏற்றின. படத்தின் பின்னணி இசையைப் பாராட்டி ஒரிஜினல் சவுண்ட் டிராக் மற்றும் பின்னணி இசையை 19 டிராக்காக சோனி மியூசிக் இந்தியா யூடியூபில் வெளியிட்டது.

‘மான் கராத்தே’, ‘வேலையில்லா பட்டதாரி’ படங்களைத் தொடர்ந்து ‘கத்தி’, ‘வேதாளம்’ என விஜய், அஜித்துக்கு இசையமைத்தார். ‘கத்தி’ படத்தின் ‘செல்ஃபி புள்ள’ பாடலுக்கு ஆடாத இளைஞர்களைத் தேட வேண்டும். அதேபோல பின்னணி இசை படத்துக்கு விறுவிறுப்பைச் சேர்த்தது. வேதாளத்தில் அஜித் ரசிகர்களை ‘ஆலுமா டோலுமா’ என குத்தாட்டம் போடவைத்தார். இசை வடிவமாக அதை நிராகரிக்கலாம். ஆனால் இளைஞர்களிடம் அது ஏற்படுத்திய தாக்கத்தை யாரும் மறுக்க முடியாதே!

சலனமற்ற இசை நீச்சல்

அதே நேரம் ‘வணக்கம் சென்னை’யில் ‘பெண்ணே பெண்ணே…’, ‘3’-ல் ‘போ நீ போ’, ‘நீ பார்த்த விழிகள்’, ‘தங்கமகனி’ல் ‘என்ன சொல்ல ஏது சொல்ல’, ‘டேவிட்’-ல் ‘கனவே கனவே’ போன்ற பாடல்கள் அனிருதின் மெலடி முத்திரை. சலனமற்ற நீர் ஓடையில் உருளும் கூழாங்கற்கள்போல பியானோ இசைத்து, மெல்லியதாக வயலின் இழைத்து, கித்தாரை வருடியும் அவரால் இசை கொடுக்க முடியும் என இவை காட்டுகின்றன.

‘எதிர் நீச்சலி’ல் ‘மின் வெட்டு நாளில்’, ‘மான் கராத்தே’யில் ‘உன் விழிகளில் விழுந்த நாட்களில்’, ‘நானும் ரவுடிதானி’ல் ‘தங்கமே உன்னை நான்’ போன்ற பாடல்களிலும் காதலுக்கே உரிய ஏக்கம், தவிப்பு, ஆதங்கம் ஆகிய உணர்வுகளை வெளிப்படுவதையும் அவை அதே இசையின் வழியாகக் களையப்படுவதையும் காணலாம். ‘மின் வெட்டு நாளில்’ படலில் இழையும் புல்லாங்குழல் ஏக்கத்தை வெளிப்படுத்தும்போது, டிஜிட்டல் அரேஞ்ச்மெண்ட் செய்யப்பட்ட வயலின் உற்சாகம் கூட்டும். அதேபோல ‘உன் விழிகளில் விழுந்த நாட்களில்’ வயலினும், பியானோவும் தாபத்தைக் கூட்டும். உடனடியாக எலக்ட்ரிக் கித்தார் கை கொடுத்து உற்சாகப்படுத்தும்.

பிரியமான மெர்சல்

இசையமைப்பாளர் என்பதைத் தாண்டி அனிருதின் குரலுக்கு எக்கச்சக்கமான இசையமைப்பாளர்கள் ரசிகர்களாக இருக்கிறார்கள். அவருடையது கம்பீரமான ஆண் குரல் அல்ல. கணீரென ஒலிக்கும் விடலைப் பருவ பையனின் விளையாட்டுத்தனமானக் குரல். தனக்கு மோசமான குரல் இருப்பதாக நினைத்து முதல் படத்தில் பாடாமல் தவிர்த்திருக்கிறார் அனிருத். எதிர் நீச்சலில் ‘பூமி என்ன சுத்துதே’ என்பதுதான் அவர் பாடிய முதல் பாடல். ஆனால் இன்று ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ‘மெர்சல் ஆயிட்டேன்’ முதல் கோபி சுந்தருக்கு ‘தோழா என் உயிர் தோழா’, சந்தோஷ் நாராயணனுக்கு முன் செல்லடா’, டி.இமானுக்கு ‘டண்டணக்கா’, விஷால் சந்திரசேகருக்கு ‘ஷூட் தி குருவி’ என ஏகப்பட்ட இசையமைப்பாளர்களின் பிரியமான குரலோனாக இருக்கிறார்.

இசை என்பது ஒரு ஆன்மிகப் பயணம், காலம் கடந்து நிலைத்து நிற்பதே உண்மையான இசை போன்ற பெருங்கதையாடல்களைப் போட்டு உடைக்கிறது அனிருத் இசை. ‘அட ஊதுங்கடா சங்கு’, ‘வாட்ட கருவாடு’, ‘டானு டானு’ என நம்மைச் சுற்றிலும் இரைந்து கிடக்கும் நிதர்சனங்களை அது கொண்டாடச் சொல்கிறது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x