Last Updated : 31 Oct, 2014 02:47 PM

 

Published : 31 Oct 2014 02:47 PM
Last Updated : 31 Oct 2014 02:47 PM

நாமே ராஜா... நாமே மந்திரி...! - மீண்டு(ம்) வருது மாணவர் பேரவைத் தேர்தல்

அந்தக் காலத்தில் மாணவர் பேரவைத் தேர்தல் எப்படி நடந்தது என்று வீட்டில் பெரியவர்கள் சொல்லிக் கேட்டிருப்பீர்கள். தேர்தலில் தாங்கள் பங்கெடுத்தது, பிரச்சாரம் செய்தது, அழகான கையெழுத்தில் விளம்பர வாசகங்கள் எழுதியது, கோஷமிட்டது பற்றியெல்லாம் பரவசத்துடன் பகிர்ந்துகொண்டிருப்பார்கள்.

“ச்சே... நமக்கு அந்தக் கொடுப்பினை எல்லாம் இல்லையே. சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் வாக்களிப்பது நமது கடமை என்று பிரச்சாரம் செய்கிறோம். ஆனால், நம்முடைய ஜனநாயக உரிமையை நைசாக பறித்துவிட்டார்களே” என்று நம்மில் பலர் புலம்பியிருப்போம்.

சில இடங்களில் நடந்த வன்முறை காரணமாக 15 ஆண்டாகத் தமிழகத்தில் மாணவர் பேரவைத் தேர்தல்கள் நடத்தப்படவில்லை. அந்த நிலை தற்போது மாறத்தொடங்கி இருக்கிறது. மாணவர் தேர்தலை நடத்துகிற தன்னாட்சிக் கல்லூரிகளின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்துவருகின்றன. மதுரையில் மட்டும் இந்தாண்டு 5 கல்லூரிகளில் தேர்தல் நடந்துள்ளது. சங்கத்தால், சங்கடமா? சந்தோஷமா? மாணவர்களிடம் கேட்கலாம்.

மதுரை பாத்திமா கல்லூரி மாணவிகள் பேரவை தலைவி ஏ.பர்கீன் ரீனுவிடம் கேட்டபோது, “அனைத்து மாணவர்களும் நேரடியாகத் தேர்தலில் பங்கேற்கிற ஒரே கல்லூரி எங்கள் கல்லூரிதான். இங்கே யார் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிட முடியும். இந்த ஆண்டு எய்டட் (அரசு உதவிபெறும்) பிரிவில் நானும், சுயநிதிப் பிரிவில் கே.ஷ்ருதியும் தலைவராகத் தேர்வுசெய்யப்பட்டுள்ளோம். மாணவிகளின் பிரச்சினைகள் பலவற்றை நிர்வாகத்துடன் பேசி தீர்த்து வைத்திருக்கிறோம். 1952 முதல் இன்று வரையில் இங்கே மாணவர் பேரவையால் கல்லூரி நிர்வாகத்திற்கோ, பொதுமக்களுக்கோ எந்தப் பிரச்சினையும் ஏற்பட்டதில்லை” என்கிறார்.

மதுரை லேடி டோக் கல்லூரி மாணவர் பேரவை தலைவியான ஆர்.அருளரசி கூறுகையில், “எங்கள் கல்லூரியில் 1949 முதல் சிறு பிரச்சினைகூட இல்லாமல் தேர்தல் நடந்து வருகிறது. முன்பு தேர்தல் என்றால் காமர்ஸ், இங்கிலீஷ், எக்னாமிக்ஸ் டிபார்ட்மெண்ட்டைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் ஜெயிக்க முடியும் என்ற நிலை இருந்தது. காரணம், அந்தத் துறைகளில் தான் வாக்குகள் (மாணவிகள்) அதிகம். ஆகவே, தலைமைப் பண்பு இருந்தும்கூட மற்ற துறை மாணவிகள் தேர்தலில் ஆர்வம் காட்டாமல் இருந்தார்கள். சமீபத்தில் இந்தத் தேர்தல் முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, வகுப்புதோறும் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்குள் தேர்தல் நடத்தப்படுகிறது. இதன் பலனாக, இதுநாள் வரை வாய்ப்பே கிடைக்காத துறை மாணவிகளும் பொறுப்புக்கு வந்திருக்கிறார்கள். உதாரணமாக, 65 ஆண்டு வரலாற்றிலேயே முதன் முறையாகத் தமிழ்த் துறையைச் சேர்ந்த நான் தலைவியாகி இருக்கிறேன்” என்றார்.

இதேபாணியில் மதுரைக் கல்லூரியிலும் கடந்த 3 ஆண்டுகளாக மாணவர் தேர்தல் நடைபெறுகிறது. இந்த ஆண்டு மாணவர் பேரவைத் தலைவராக எஸ்.ஆனந்த சீனிவாசன், செயலாளராக மணிமாறன், துணைத் தலைவர்களாக மாளவிகா பவித்ரா, விஸ்வநாதன், பொருளாளராக ஸ்ரீதர், இணை செயலாளர்களாக மணிகண்டன், வி.ஸ்ரீராம், சுவேதா, துணை பொருளாளராக எஸ்.சுந்தரராஜன் ஆகியோர் தேர்வாகி இருக்கிறார்கள். இங்கும் எந்தப் பிரச்சினையும் இல்லாமல், மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்குமான உறவுப் பாலமாக திகழ்கிறது ஸ்டூடண்ட்ஸ் யூனியன்!

தேர்தல் பற்றிப் பேராசிரியர்கள் என்ன சொல்கிறார்கள்? 1983-84ல் லேடி டோக் கல்லூரி மாணவியர் பேரவைத் தலைவராக இருந்தவரான, எஸ்.ஸ்ரீலதாவிடம் கேட்கலாம். “மாணவிகளுக்குத் தலைமைப் பண்பையும், ஆளுமைத் திறனையும் தருவது தேர்தல் என்பதால் இதனை நான் வரவேற்கிறேன். நாங்கள் படித்த காலத்தில், தேர்தல் என்றால் காலேஜ் களை கட்டும். கார், சைக்கிள், ஸ்கூட்டர் என்று வாகனங்களிலேயே வளாகத்தை வலம் வந்து வாக்கு சேகரிப்போம். ஆனால், இப்போது அப்படியில்லை. தொழில்நுட்பம் முன்னேறிவிட்டது. எஸ்.எம்.எஸ். தட்டிவிடுகிறார்கள். வாக்குச்சீட்டில் முத்திரை குத்துவது போய், அதுவும் கணினிமயமாகி விட்டது. காலத்திற்கேற்ற மாற்றங்களை ஏற்கத் தான் வேண்டும்” என்றார்.

ஆக, மற்ற கல்லூரிகளும் மாணவர்கள்மீது நம்பிக்கை வைத்துத் தேர்தலை நடத்த வேண்டும் என்பது இளையோரின் ஆசை.

“தேர்தல் நடந்தால் கல்விக் கட்டணம் குறையும்!”

கல்லூரி மாணவர் பேரவை தேர்தல் குறித்து இந்திய மாணவர் சங்கத்தின் கருத்து என்ன? அதன் மாநில தலைவர் உச்சிமாகாளி: “கல்லூரி, பல்கலைகளில் ஆசிரியர்களுக்குச் சங்கம் இருக்கிறது. ஆசிரியர் அல்லாதவர்களுக்கும் சங்கம் இருக்கிறது. தனியார் கல்லூரி முதலாளிகளுக்குக்கூடச் சங்கம் இருக்கிறது. ஆனால், யாருக்காகக் கல்லூரிகள் நடத்தப்படுகிறதோ அந்த மாணவர்களுக்குச் சங்கம் இல்லை என்பது கொடுமையான விஷயம்.

ஓய்வுபெற்ற தலைமைத் தேர்தல் அதிகாரி ஜெ.எம்.லிங்டோ தலைமையிலான கமிட்டியின் பரிந்துரையை ஏற்று, கல்லூரிகளில் மாணவர் பேரவைத் தேர்தலைக் கண்டிப்பாக நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு 5 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், இன்னமும் தமிழக அரசு அதில் ஆர்வம் காட்டவில்லை. சில தன்னாட்சி கல்லூரிகளில் மட்டும், யு.ஜி.சி.யிடம் நல்ல பெயர் வாங்குவதற்காகத் தேர்தல் நடத்துகிறார்கள்.

தேர்தல் நடந்தால்தான் மாணவர்கள் ஏமாற்றப்படுவது குறையும். உரிமைகளைக் கேட்டுப்பெற முடியும். உதாரணமாக, உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் 2009 முதல் 2011 வரையிலான கால கட்டங்களில் மாணவர் பேரவை தேர்தல் நடத்தப்பட்டது. அனைத்துக் கல்லூரி மாணவர் பேரவைத் தேர்தலும் நடத்தப்பட்டது. அந்த நேரத்தில் கல்விக் கட்டணம் உயர்த்தப்பட்டதை எதிர்த்து மாணவர் பேரவைகள் போராட்டத்தில் இறங்கின. அதன் காரணமாக ஒரே வாரத்தில் அந்தக் கட்டண உயர்வு திரும்பப் பெறப்பட்டது. தேர்தல் நடந்தால், மாணவர்களின் ஒற்றுமை குறையும் என்பது தவறான வாதம். இதைக் கிளப்பிவிடுவதே, கல்வியை வியாபாரமாகக் கருதும் சில தனியார் கல்லூரி முதலாளிகள் தான்” என்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x