Published : 27 Mar 2015 02:48 PM
Last Updated : 27 Mar 2015 02:48 PM

காதலுக்கு வயதில்லை

வாழ்க்கை பற்றிய ஆழமான புரிதல் ஏதும் நமக்குக் கிடையாது. நமக்கு இருப்பது வெறும் இரவல் கருத்துகள்தான். அதனால் வாழ்க்கை பெருமளவுக்குக் குழப்பமும் சிக்கலும் நிறைந்ததாக இருக்கிறது. வாழ்க்கை பற்றிய நம் கருத்துகளையே வாழ்க்கை என்று நினைத்துக்கொள்கிறோம். இதனால் வாழ்க்கையின் அடிப்படையான எளிமையையும் நேரடித்தன்மையையும் தொலைத்துவிட்டோம்.

மனத்தின் குழப்பங்களும் சிந்தனையின் சிக்கல்களும் வாழ்க்கையின் சிக்கலாக ஆகிவிட்டன. வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் நாம் பிரச்னைக்குரியதாக ஆக்கிவிட்டிருக்கிறோம். குறிப்பாக உறவுத் தளத்தில் இன்று தொட்டதெல்லாம் பிரச்சினையாக உருவெடுக்கிறது. உறவுத்தளம்தான் மனித உணர்ச்சிகளும் மென்னுணர்வுகளும் ஊடாடும் மேடை. வாழ்க்கையின் நாடகம் எல்லாம் அங்கேதான் நடக்கிறது.

முன்பைவிட இன்றைக்குக் குழப்பமும் சிக்கலும் அதிகமாகியிருப்பதற்குக் காரணம் அதிகரித்துவரும் அறிவுணர்வுதான். ஒரு அளவில் இது நல்லதுதான். மாறிவரும் மனித வாழ்க்கையின் பயணத்தில் இன்று புதியதொரு கட்டம் நடந்துவருகிறது.

இது புதிய தெளிவுகளுக்கு நம்மை அழைத்துச் செல்கிறது. பயணிப்போம்.

நான்கு வருடங்களாக ஒரு பெண்ணோடு நெருக்கமாகப் பழகிக் கொண்டிருக்கிறேன். ஆனால் அவருக்கு என்னை விடவும் 6 வயது அதிகம். இன்னமும் திருமணம் ஆகாமல்தான் இருக்கிறார். அவரை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என ஆசைப்படுகிறேன். அவருக்கும் இதில் விருப்பம்தான். ஆனால் என் வீட்டில் எப்படி இதைச் சொல்வது என்றே புரியவில்லை. நான் சொன்னால் ஏற்றுக் கொள்வார்களா? திருமணம் செய்துகொண்டால் என்ன விதமான பிரச்னைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்? அதை எப்படி எதிர்கொள்வது? எதுவுமே புரியவில்லை.

இதனால் சமூகத்தில் என்ன மாதிரியான சிக்கல்களை நான் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை நீங்கள் விளக்கிக் கூறும்படிக் கேட்டுக் கொள்கிறேன். அதன் மூலம் நான் ஒரு முடிவுக்கு வரமுடியும் என நம்புகிறேன். ரொம்பவும் குழப்பமாக உள்ளது.

முதலில் மற்றவர்கள் என்ன சொல்லக் கூடும் என்று பார்ப்போம். “உங்களுக்கு என்ன குறைச்சல்? நீங்கள் இவ்வாறு செய்யவேண்டிய அவசியம் என்ன? முதலில் அவளுக்கு வயதாகிவிடுமே? வயதில் பெரியவளாக இருப்பதால் கொஞ்ச நாட்களில் அவள் உங்கள்மேல் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிவிடுவாள்,” என்றெல்லாம் சொல்வார்கள். அது தவிர, சாதாரணமாக எல்லா உறவுகளிலும் வரக்கூடிய எந்த ஒரு சிறிய பிரச்னைக்கும் இந்த வயது விஷயம்தான் காரணம் என்று சொல்வார்கள். இவைதான் நீங்கள் சமூக ரீதியாகச் சந்திக்கக் கூடிய பிரச்னைகள்.

இப்போது உங்களைப் பற்றிப் பார்ப்போம். மற்றவர்கள் என்ன சொல்வார்கள், அதை நான் எப்படி எதிர்கொள்வது என்பது உங்கள் முக்கியக் கவலையாக இருக்கிறது. இந்த விஷயத்தில் உள்ள பிரச்னைகளைப் பற்றித்தான் நீங்கள் பெரிதும் கவனமாக இருக்கிறீர்கள். உண்மையில் உங்களுக்கு இந்த உறவு எந்த அளவுக்கு முக்கியம்?

எல்லோரும் ஒப்புக்கொள்ளும்படியாக இருந்தால்தான் நீங்கள் இந்த உறவைத் தொடர்வீர்களா? சமூகத்தின் பார்வை முக்கியமா அல்லது உங்கள் இதயம் சொல்வது முக்கியமா? இதில் எது சரி? இந்த முடிவை நீங்கள் மட்டுமே எடுக்க முடியும். உங்கள் முடிவு எதுவாக இருந்தாலும் அதற்கு விளைவுகள் உண்டு. அதற்கு நீங்கள் பொறுப்பேற்றுக்கொண்டு முடிவெடுங்கள்.

நானும் அவனும் ஒரே கல்லூரியில்தான் படித்தோம். அப்போதே காதல் வந்தது. கடந்த 5 வருடங்களாகக் காதலித்து வருகிறோம். என்னுடைய குணமும் அவனுடையது நேர் எதிர் எனச் சொல்லலாம். ஆணும் பெண்ணும் சமம் என நான் நினைப்பேன். ஆனால் அவனோ பொண்ணுன்னா மரபை மீறக்கூடாது என வாதாடுவான். ஆனால் போகப்போக அவனிடம் நல்ல மாற்றங்கள் காணப்பட்டு என் உணர்வுகளை மதிக்க ஆரம்பித்தான். படித்து முடித்த பிறகு நல்ல வேலையில் சேர்ந்தவுடன் வீட்டில் எங்கள் காதலை தெரிவித்து சம்மதம் பெறலாம் என நினைத்தோம்.

ஆனால் எதிர்பார்த்தபடி வேலை கிடைக்கவில்லை. ஆனால் ஏதோ ஒரு வேலையில் தற்காலிகமாகச் சேர்ந்தான். திடீரென என் வீட்டில் எனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். என் மீது அளவுகடந்த பாசம் வைத்திருக்கும் என் பெற்றோரிடம் காதலை பற்றி எப்படிச் சொல்வது எனத் தெரியாமல் ஒரு கடிதத்தில் எழுதிக் கொடுத்தேன். அதைப் படித்துவிட்டு மிகவும் வருந்தினார்கள். அவனைக் கல்யாணம் பண்ணிக் கொண்டால் தற்கொலை செய்துக் கொள்வோம் என்றார்கள்.

அந்த சிக்கலை அவனிடம் சொன்னபோது யாரையும் நாம் கஷ்டப்படுத்த வேண்டாம் கொஞ்சம் பொறுமையாக இருப்போம் என்றான். இதற்கு பிறகு என் வீட்டில் என் மொபைல்போனை பிடுங்கி வைத்துக் கொண்டார்கள். வேலைக்கும் போகக்கூடாது எனத் தடுத்துவிட்டார்கள். திடீரென்று அவன் தங்கை வீட்டில் சொல்லாமல் யாரையோ கல்யாணம் செய்துகொண்டார். ‘என் தங்கச்சியினால் என் வீட்டில் மனமுடைந்துபோய் இருக்காங்க. நானும் அதே காரியத்தை செய்ய முடியாது. உங்க வீட்டில் உனக்குப் பார்க்கும் மாப்பிள்ளையை நீ கல்யாணம் செய்துக்கோ’ எனச் சொல்லிவிட்டான்.

இப்படி அவன் சொல்லி ஒரு வருடம் ஆகிவிட்டது. அதன் பிறகு நாங்கள் சந்திக்கவே இல்லை. ஆனால் என்னால் அவனை மறக்க முடியவில்லை. கல்யாணம் என்ற வார்த்தையைக் கேட்டாலே மனம் பதைபதைக்கிறது. எதையுமே யோசிக்கக்கூட முடியவில்லை. நல்ல வேலைக்குச் சென்று வீட்டுக்கும் பணம் கொடுத்து, நானும் மேல்படிப்பு படிக்க வேண்டும் என்பது என் ஆசையாக முன்பு இருந்தது. ஆனால் இப்போது என்னால் எதையுமே சிந்திக்கவும் முடியவில்லை, செய்யவும் இயலவில்லை. தயவு செய்து எனக்கு மாற்றுப் பாதை காட்டுங்கள்.

நீங்கள் சொல்வதிலிருந்து உங்களைப் பொறுத்தவரையில் இந்த விஷயம் முடிந்துவிட்டதாகத்தான் தெரிகிறது. ஆனால் இதிலிருந்து எப்படி வெளியே வருவது என்பதுதான் உங்களுக்குத் தெரியவில்லை. உங்களுக்குள் ஏதோ ஒன்று இதைவிட்டு வெளியே வர மறுக்கிறது. இந்த விஷயத்தை விட்டுவிடுவதைத் தவிர்க்கிறது.

அவரிடமிருந்து உங்களுக்கு என்ன கிடைத்தது என்று பாருங்கள். உங்களுக்கு அங்கீகாரம் அளித்திருக்கிறார். உங்களை உள்ளபடியே ஏற்றுக்கொண்டிருக்கிறார். உங்களுக்கு மதிப்பளித்திருக்கிறார். இவையெல்லாம் இப்போது கிடைக்கவில்லை. வேறு யாரையாவது திருமணம் செய்துகொண்டால் இவையெல்லாம் கிடைக்குமா என்று உங்களுக்குத் தெரியாது. அதற்காகத்தான் உங்கள் மனம் பதைக்கிறது.

இது ஒரு இழப்புதான். ஆனால் இந்த இழப்பை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த அனுபவம் இதோடு முடிகிறது. உங்கள் வாழ்க்கையில் ஒரு அத்தியாயம் முடிவுக்கு வந்திருக்கிறது. இதில் உள்ள பயமும் வேதனையும் உங்களைப் புடம் போட்டதுபோல் தூய்மைப்படுத்தும். உங்களை வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு இது அழைத்துச் செல்லும். அகவளர்ச்சியும் ஆழமான புரிதலும் இதன் பயன்களாக இருக்கும்.

இதைவிட்டு முழுமையாக நீங்கள் வெளியே வரும்வரைக்கும் இயல்பான வாழ்க்கை வாழ்வது உங்களுக்குக் கடினமாகவே இருக்கும். ஓரளவுக்கு மன அழுத்தமும் உங்களுக்கு இருப்பதாகத் தெரிகிறது. உளவியல் ஆலோசகர் ஒருவரைச் சந்திப்பது உங்களுக்கு உதவியாக இருக்கும்.

உளவியல் ஆலோசகர் ஆனந்த் கிருஷ்ணாவுடன் உரையாடலாம். உங்கள் கேள்விகள், எண்ணங்கள், குழப்பங்கள், உறவுச் சிக்கல்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.

முகவரி:

இளமை புதுமை, தி இந்து, கஸ்தூரி மையம்,

124, வாலாஜா சாலை, சென்னை-600 002.

மின்னஞ்சல்: ilamaiputhumai@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x