Published : 28 Nov 2014 12:42 PM
Last Updated : 28 Nov 2014 12:42 PM

காதலரின் நண்பர்களுடன் நட்பு பாராட்டலாமா?

உங்கள் காதலரின் நண்பர்களுடன் பழகுவதில் எந்த அளவுக்குக் கவனமாக இருக்கிறீர்களோ, உங்களுக்கும் உங்கள் காதலருக்குமான உறவை அந்த அளவுக்கு அது மேம்படுத்தும். முதன்முறையாகக் காதலரின் நண்பர்களைச் சந்திக்கும்போது அவர்கள் முற்றிலும் அந்நியமானவர்களாகத் தெரியலாம். ஆனால், அவர்கள் உங்கள் காதலரின் நண்பர்கள். உறவு என்பது ஏற்றுக்கொள்வதிலும், அனுசரித்துப்போவதிலும்தான் வளர்கிறது. அதில் உங்கள் துணையின் நட்புவட்டத்தை அங்கீகரிப்பதிலும் அடங்கியிருக்கிறது. காதலரின் நட்புவட்டத்துடன் பழகுவதற்குச் சில வழிமுறைகள்:

சோஷியலாக இருக்கலாமா?

ஒருவேளை, நீங்கள் சோஷியலாக இருப்பதை விரும்பாத நபர் என்றால், உங்கள் காதலரின் நண்பர்களைச் சந்திக்கும் நிகழ்வு நிச்சயம் கடினமானதாகத்தான் இருக்கும். இதுவே நீங்கள் எக்ஸ்ட்ரோவெர்ட் நபர் என்றால் இந்தச் சந்திப்பு எளிதானதாக இருக்கும். முதல் சந்திப்பைக் கடந்துவிட்டால், உங்கள் காதலரின் நட்புவட்டத்தைப் பற்றிய புரிதல் கிடைத்துவிடும். அதற்குப் பிறகு நடக்கும் சந்திப்புகள் அவர்களை உங்கள் நண்பர்களாகவும் மாற்றிவிட வாய்ப்பு இருக்கிறது.

வாங்க பழகலாம்!

மற்ற உறவுகளைவிட நட்பு நீண்ட மதிப்பைக் கொண்டது. உங்கள் காதலருக்கு அவருடைய நண்பர்களை நீண்டகாலமாகத் தெரிந்திருக்கலாம். உங்கள் காதலர் உண்மையிலேயே உங்களைப் பற்றி சீரியஸாக இருக்கிறார் என்றால், முதலில் உங்களை அவருடைய நட்புவட்டத்தில்தான் அறிமுகப்படுத்துவார். இந்த அறிமுகம்தான் உங்கள்

உறவுக்கான நீண்டகால அடித்தளத்தை அமைக்கப் போவதற்கான அறிகுறி. இதை மனதில் வைத்துக்கொண்டு, அவருடைய நண்பர்களை உங்கள் நண்பர்களாக மாற்றிக்கொள்ளுங்கள்.

தீர்ப்புகள் வேண்டாம்

நண்பர்கள் எப்படியிருந்தாலும் நண்பர்கள்தான். உங்கள் காதலரிடம் அவருடைய நண்பர்களின் நடவடிக்கைகளைப் பற்றித் தொடர்ந்து குறைசொல்லிக்கொண்டிருந்தால், அது நிச்சயம் உங்கள் உறவிலும் பிரதிபலிக்கும். அவருடைய நண்பர்களின் நடவடிக்கைகளில் ஏதாவது வித்தியாசமாகவோ, தவறாகவோ தோன்றினால் உடனடியாக அதைத் தெரிவிக்க வேண்டாம். ஒரு சில வாரங்கள் காத்திருங்கள்.

ஏனென்றால் நீங்கள் அவசரப்பட்டுக்கூட அவருடைய நட்புவட்டத்தைப் பற்றிய தவறான முடிவுக்கு வந்திருக்க வாய்ப்பிருக்கிறது. காதலருடைய நட்புவட்டம் பற்றிய சிக்கல் தொடர்ந்து உங்களுக்கு இருந்தால், அதை உங்கள் காதலரிடம் மனம்விட்டு பேசுங்கள். அது பல பிரச்சினைகளைத் தீர்க்கும்.

நட்புக்கும் எல்லைகள் உண்டு

உங்கள் காதலரின் நட்புவட்டம் உங்களுக்கும் உங்கள் காதலருக்குமான ‘குவாலிட்டி டைம்’மை முற்றிலும் எடுத்துக் கொள்வதாகத் தோன்றினால், அடிக்கடி நட்பு சந்திப்புகளைத் தவிர்ப்பது நல்லது. ஆனால், அதே சமயம், உங்கள் காதலர் அவருடைய நண்பர்களைச் சந்திக்கவே கூடாது என்று கட்டுப்பாடெல்லாம் விதிக்காதீர்கள். இந்த நட்பு சந்திப்புகள் உங்கள் காதலரைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள உதவும் என்பதை மறக்காதீர்கள்.

ஒரு வேளை, உங்களால் உங்கள் காதலரின் நட்பு வட்டத்தை முற்றிலுமாக ஏற்றுக்கொள்ள முடியவில்லையென்றால், அதைப் பற்றி காதலரிடம் தெளிவாகப் பேசிவிடுங்கள். அவர்களுடனான சந்திப்புகளையும் குறைத்துக் கொள்ளலாம். ஆனால், உங்கள் காதலரைப் பற்றித் தெரிந்துகொள்ள அவருடைய நண்பர்களைக் காட்டிலும் வேறு யாரும் உங்களுக்குப் பெரிதாக உதவ முடியாது. அதனால், அவர்களுடன் நட்புப் பாராட்ட உங்களால் முடிந்த முயற்சிகளைச் செய்யுங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x