Last Updated : 19 Dec, 2014 03:47 PM

 

Published : 19 Dec 2014 03:47 PM
Last Updated : 19 Dec 2014 03:47 PM

ஒரு நாளு நான் கிளாஸ்ல இருந்தப்ப...

காலேஜ் என்றாலே காமெடிகளுக்குப் பஞ்சம் இருக்காது. எல்லா விஷயமுமே நமக்குக் காமெடியாதான் தோணும். அதிலும் க்ளாஸ் ரூம் காமெடி பத்தி சொல்ல வேண்டாம். மல்லிகப் பூவுக்கும் மல்லிப் பூ மாதிரியான இட்லிக்கும் பேர்போன மதுரை கலாய்க்கிறதுலயும் காமெடியிலயும் எப்பவும் டாப்தான். மதுரை யாதவா கல்லூரி மாணவர்கள் என்ன சொல்றாங்கன்னு கேட்போம்.

பி.பாரதிதேவி:

எங்க காலேஜ்ல இருந்து கோவா டூர் கூட்டிக்கிட்டுப் போயிருந்தாங்க. தங்கியிருந்த ஹோட்டல்ல மா மரம் ஒண்ணு கொத்துக் கொத்தா காய்ச்சிருந்ததைப் பார்த்ததும், நாக்குல எச்சி ஊறிடுச்சி. செட் சேர்ந்து மாங்க அடிச்சோம். ஆறேழு காய்தான் பறிச்சிருப்போம். அதுக்குள்ள ஹோட்டல் ஸ்டாப் ஒருத்தர் வந்திட்டாரு. பயத்துல ரூமுக்கு ஓடிவந்திட்டோம்.

திருட்டு மாங்காவ ருசிக்கப் போன சமயத்துல ஒருத்தி, ‘ஏய் இதை இப்படியே சாப்பிட்டா நல்லாயிருக்காதுடீ, இருங்க நான் உப்பு கொண்டாரேன்’னு சொல்லிட்டுப் போனா. அந்த மகராசி நேரா ஓட்டல் ரிஷப்ஷனுக்கே போய் மாங்கா திங்க உப்பு கேட்டிருக்கா. கொதிச்செழுந்த மேனேஜர் எங்க சாரை கூப்பிட்டு திட்டுனதோடு, அபராதமாக 500 ரூபாய் வாங்கிட்டாரு. அதைக்கூடப் பொறுத்துக்கிடலாம், டூர் முடிஞ்சி ரூமைக் காலி பண்ற வரைக்கும் ஏதோ குரங்குகளைக் கண்காணிக்கிற மாதிரி குச்சியோட காவலுக்கு ஆள் போட்டுட்டாய்ங்கப்பா.

டி.பிரதீபா:

காலேஜ் பங்ஷன் முதல் யுனிவர்சிட்டி காம்படிஷன் வரைக்கும் டான்ஸ் ஆடுற பொண்ணு நான். அது என்னோட பலம் மட்டுமல்ல பலவீனமும்தான். எங்க குத்துப்பாட்டு கேட்டாலும், மேளச் சத்தத்தைக் கேட்ட சாமியாடி மாதிரி எனக்கு ஆட்டம் வந்திடும். கல்யாண வீடு, பஸ், ஆட்டோ ஸ்டாண்ட்ன்னு பொது இடங்கள்ல ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டு அந்த ஆசையை அடக்கிக்கிடுவேன்.

ஒருநாள் செமஸ்டர் எக்ஸாம் எழுதிக்கிட்டு இருந்தப்ப பக்கத்துல ஏதோ பங்ஷன்ல வரிசையா குத்துப்பாட்டு போட்டாங்க. “இப்ப நீ பாட்ஷா இல்ல, மாணிக்கம்”னு சொல்லி நடன உணர்ச்சிகளை எல்லாம் கட்டுப்படுத்திக்கிட்டு இருந்தேன். என் வீக்னஸ் தெரிஞ்ச பிரண்ட்ஸ் எல்லாம் எக்ஸாம் எழுதாம என்னைப் பார்த்தபடியே, ‘பிரதி ஆடுடா செல்லம்’னு சைகையிலேயே வெறியேத்திக்கிட்டு இருந்தாங்க. ‘ஜிங்கினு மணி ஜிங்கினு மணி’ பாட்டு பாடுறப்ப, கட்டுப்படுத்த முடியாம நான் ஒரு ஸ்டெப் போட அதை எக்ஸாம் சூப்ரவைசர் பார்த்துவிட, ரணகளமாகிடுச்சி.

எஸ்.மோகன பிரீத்தா:

இது நான் யுஜி படிச்சப்ப எங்க ஹாஸ்டலில் நடந்த சம்பவம்.வழக்கத்துக்கு மாறா அன்னைக்கு அதிகாலை 6 மணிக்கே எந்திருச்சிட்டேன். ஹாஸ்டல் ரூம் எதிரே உள்ள நோட்டீஸ் போர்டைப் பார்த்தா, ‘கண்டிப்பாக செல்போன் பயன்படுத்தக் கூடாது. மீறினால் செல்போன் பறிமுதல் செய்யப்படுவதுடன், அபராதமும் விதிக்கப்படும்’ என்று எங்க அதிரடி ஹாஸ்டல் வார்டன் எழுதி போட்டிருந்தாங்க. மூளைக்குள்ள ஒரு பல்ப் எரிஞ்சுது. ‘கண்டிப்பாக செல்போன் பயன்படுத்தி நிறைய பேசவும். தவறினால் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்’ அப்படிஇப்படின்னு நாலஞ்சு எக்ஸ்ட்ரா பிட்டைப் போட்டுட்டேன். விடிஞ்சப்புறம் பார்த்தா, நோட்டீஸ் போர்ட் பக்கத்துல பெருங்கூட்டம். வார்டன் பத்திரகாளி மாதிரி நின்னாங்க.

அன்னைக்கு வழக்கம் போல மீட்டிங். இந்தக் காரியத்தை யார் செஞ்சான்னு கண்டுபிடிச்சிட்டேன். இது ஒருத்தியோட வேலை இல்லை. 4 பேர் கொண்ட குழுவோட சேட்டை. அவங்களைக் கண்டுபிடிச்சி, ஹாஸ்டல்ல இருந்து வெளியேத்தாம விட மாட்டேன்னு சொன்னாங்க. என்னால சிரிப்பை அடக்கவே முடியலை. நான் தான் நாலு விதமான கையெழுத்துல எழுதினேன்னு, 3 வருஷம் முடியிற வரைக்கும் யாரும் கண்டுபிடிக்கலைங்கிறதுதான் உச்சகட்ட காமெடி.

எஸ்.பார்கவி:

எங்க கிளாஸ்லயே எட்டு பொண்ணுங்க சேர்ந்து ‘வெட்டியாய் இருக்கும் வெட்டிப்புலி சங்கம்’ வெச்சிருந்தோம். ஒன் ஹவர் ஃப்ரீ கிடைச்சாலும், எங்க கிளாஸ் பக்கத்துல இருக்கும் ஒரு ஆளில்லாத பாழடைஞ்ச அறையில் உட்கார்ந்துதான் அரட்டையடிப்போம். ஒருநாள் ஜமுக்காளத்தை விரிச்சி உட்கார்ந்து பேச ஆரம்பிச்சா, அந்த ஹவர் முடிஞ்சி அடுத்த ஹவர் ஆரம்பிச்சதே தெரியல.

கிளாஸ்க்கு மேம் வந்திட்டாங்க. லேட்டா போனா மாட்டிக்குவோமேன்னு பயந்து போய் இருந்தோம். அப்ப பார்த்து எலெக்ட்ரீஷியன் அண்ணன் நாங்க இருந்த ரூம் உள்ளே வந்திட்டாரு. அவர் கண்டிப்பா போட்டுக்கொடுத்திடுவார்னு தெரியும். சட்டுன்னு ஒருத்திய ஜமுக்காளத்துல படுக்க வெச்சி, இவ திடீர்னு மயங்கி விழுந்திட்டாண்ணேன்னு சொல்லிச் சமாளிச்சோம். அதுக்குள்ள ரெண்டாவது கிளாஸும் முடியுற ஸ்டேஜ் வந்திடுச்சி.

அப்படியே அவளைக் கைத்தாங்கலா அழைச்சிக்கிட்டு கிளாஸ்க்குப் போனோம். ‘மேம் இவ திடீர்னு மயங்கி விழுந்திட்டா. நாங்க ரெண்டு பேரும் ரெஸ்ட் ரூமுக்கு கூட்டிக்கிட்டுப் போனோம். இவங்க ரெண்டு பேரும் கேண்டீன்ல -டீயும், பண்ணும் வாங்கப் போனாங்க. ரெண்டு பேர் பக்கத்துல இருந்து விசிறிக்கிட்டு இருந்தோம்’னு அள்ளி விட்டோம். மயக்கம் போட்ட பொண்ணோட முகத்தைப் பார்த்தாங்க மேம், உடனே நம்பிட்டாங்க. டயலாக்கே இல்லாம செம பெர்பான்மென்ஸ் கொடுத்த அந்தப் பொண்ணோட நடிப்புக்கு ‘ஆஸ்கரே’ கொடுக்கலாம்.

எம்.விஜய்:

ஒருமுறை பேப்பரும், பிட்டுமா எக்ஸாம் ஹால்ல சிக்கிட்டேன். பொண்ணுங்க முன்னால என்னைய ‘பெருமைப்படுத்தி’, தேர்வுக் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பி வெச்சாங்க. வேர்க்க விறுவிறுக்க நின்னேன். அங்கிருந்த பேராசிரியர்கள் எல்லாம், என் பிட்டுகளை எல்லாம் விரிச்சி வெச்சுக்கிட்டு அதை பேப்பரோட கம்பேர் பண்ணின காட்சியைப் பார்த்ததும், பயம் போய் சிரிப்பு வந்திடுச்சி. நான் மொத்தம் எழுதியிருந்ததே நாலு வரிதான். அந்த 4 வரியும் எந்த பிட்லேயாவது இருந்திடாதான்னு அவங்க தீவிரமா தேடினதை நினைச்சா இப்பவும் காமெடியா இருக்கு.

படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x