Published : 29 Apr 2016 03:13 PM
Last Updated : 29 Apr 2016 03:13 PM

என் வாக்கு யாருக்கு?- இளைஞர்களின் எலக்ஷன் பல்ஸ்

வேட்பு மனுத் தாக்கல், 'அனல்' பிரச்சாரம் என உண்மையிலேயே 'சூடு' பிடிக்கத் தொடங்கியுள்ளது தமிழக சட்டமன்றத் தேர்தல் களம். இந்தத் தேர்தலில் முதன்முறையாக வாக்களிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் ஒரு கோடி என்று கூறப்படுகிறது. ஆக, இந்தத் தேர்தலில் இளைஞர்களின் வாக்குகள் நிச்சயம் ஒரு புதிய பாதையை வகுக்கும் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில், சில இளைஞர்களிடம் 'எலக் ஷன் பல்ஸ்' பார்த்தோம். அந்த 'பீட்ஸ்' இங்கே...

ஹரிஹரன், கல்லூரி மாணவர்

'நாங்க செய்வோம்'னு சொல்ற தலைவர்களை விட 'நாம‌ சேர்ந்து செய்யலாம்'னு சொல்ற தலைவர்களுக்குத்தான் நான் ஓட்டுப் போடுவேன். இந்தத் தேர்தல்ல‌ யாரு வெற்றியடைந்தாலும் பரவாயில்லை. ஆனா ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது மக்களைப் பற்றி நினைக்கிற முதல்வரைத்தான் நாங்க எதிர்ப்பார்க்கிறோம்.

நாராயணி, கல்லூரி மாணவி

இந்தத் தேர்தல் மற்ற தேர்தல்களைப் போலத்தான் இருக்கப் போகிறது. கண்டிப்பாக திராவிடக் கட்சிகள்ல ஒண்ணுதான் ஜெயிக்கபோகுது. எந்த மாற்றமும் இருக்கப் போறதில்லை. 'நோட்டா' எந்த ஒரு பெரிய மாற்றத்தையும் கொண்டுவரப் போறது இல்லை.

ஸ்ரீவத்சன், ஐ.டி. பணியாளர்

தேர்தலில் இலவசங்கள் என்பது மக்களை ஏமாற்றுவதற்கும், யோசிக்க விடாமல் செய்வதற்கும்தான். தேர்தலில் போட்டியிடும் தலைவர்களுக்குக் கண்டிப்பாகக் கல்வித் தகுதி அவசியம். நல்ல ஆங்கிலம் பேசத் தெரிந்த, சமூக நோக்குடைய, தெளிவான அரசியல் சிந்தனையுடையவர்களே அரசியலுக்குத் தேவை.

பாரதி, கல்லூரி மாணவி

நிறைய இளைஞர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை சரியா கிடைக்கலை. கிடைச்சாலும் அதுல நிறைய தவறுகள் இருக்கு. அதனாலயே ஓட்டு போட முடியலை. நோட்டா ஒரு கண்துடைப்பு மாதிரிதான். அதிக வாக்குகள் நோட்டாவுக்கு விழுந்தாலும் அதுக்கடுத்து யாருக்கு அதிக வாக்குகள் பதிவாகியிருக்கோ அவங்கதான் வெற்றி பெற்றதா அறிவிப்பாங்க. அதனால நோட்டா தேவையற்றது.

குணா, கல்லூரி மாணவர்

நூறு சதவீதம் ஓட்டுப் பதிவு சாத்தியமில்லைதான். ஓட்டு போடலைன்னா ஓட்டர் ஐ.டி. கேன்சல் செய்யப்படும்னு சட்டம் வந்தா அதிக சதவீதம் வோட்டுப் பதிவாக வாய்ப்பு இருக்குபோல. வறுமையை ஒழிக்கிற அரசுதான் அமைய வேண்டும்.

மீனாட்சி, பள்ளி ஆசிரியை

நான் இந்தத் தேர்தல்லதான் முதல் முறையா ஓட்டு போடப் போறேன். ஓட்டுக்குப் பணம் கொடுப்பது த‌வறுதான். ஆனா மக்கள், கட்சிகளுக்குப் பயந்து வாங்கிட்டுத்தான் இருக்காங்க. மக்களுக்குச் சேவை செய்யும் ஆர்வம் இருக்கும், படித்த‌ இளைஞர்கள்தான் அரசியலுக்கு வரணும்.

பாலமுருகன், மென்பொருள் பொறியாளர்.

எனக்கு ஒரு அளவுக்கு அரசியல் பத்தியும் வோட்டிங் புரொஸீஜர்ஸ் பத்தியும் தெரியும். இளைஞர்களை ஊக்குவிக்க அரசியலில் நல்ல உதாரணங்கள் இல்லை. மக்களுக்கு எதுவும் செய்யலைன்னாகூடப் பரவாயில்லை. ஆனா அவங்களை ஏமாத்தக் கூடாது. அதைத்தான் நான் இந்தத் தேர்தல்ல எதிர்பார்க்கிறேன்.

ப.ஜெயஸ்ரீ, கணினிப் பொறியாளர்.

தொழில் முன்னேற்றம் பற்றி மட்டும் யோசிக்காம, விவசாயத்தைப் பற்றியும் யோசிக்கணும். நம் நாடு ஒரு விவசாய நாடு. அதற்கேற்ற ஒரு அரசு அமையணும். ஓட்டுக்குப் பணம் தரவும் கூடாது, வாங்கவும் கூடாது. மக்கள் யாருமே பணம் வாங்கலைன்னா அப்புறம் அரசியல்வாதிங்க யாருக்குத் தருவாங்க? ஓட்டுப் போடுவது என் கடமை. அதனால அதுக்காக தர்ற விடுமுறையை நான் அதுக்குத்தான் பயன்படுத்துவேன்.

அபிஷேக், கல்லூரி மாணவர்

தேர்தல்ல போட்டியிடறவங்களோட‌ வயது முக்கியம் இல்லை. ஆனா மக்களுக்கு நல்லது செய்யறவங்கதான் ஆட்சிக்கு வரணும். ஓட்டுப் போடுற நான் எதிர்பாக்குறது ஒண்ணுதான். நாங்க ஏமாந்துடக் கூடாது. எங்களோட வரிப்பணம் வீணாக்கப்படக் கூடாது.

மு.ஷாலினி, கல்லூரி மாணவி

நான் இந்தத் தேர்தல்லதான் முதல் முறையா ஓட்டு போடப் போறேன். இந்த நாட்டோட குடிமகளா என்னோட வோட்டை நான் நோட்டாவுக்காவது போடுவேனே தவிர என் ஓட்டு கள்ள ஓட்டாக மாற விட மாட்டேன். இதை என் கடமையாக நினைக்கிறேன். மத்தபடி ஓட்டுக்குப் பணம் வாங்குறது நம்முடைய உரிமையை விற்பதற்குச் சமம்.

தொகுப்பு: கோ.நந்தினி, ப.ஸ்வாதி, ரா.தனலஷ்மி, நா.அபிராமி, மு.பவித்ரா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x