Last Updated : 17 Apr, 2015 02:50 PM

 

Published : 17 Apr 2015 02:50 PM
Last Updated : 17 Apr 2015 02:50 PM

உலக கோப்பை நமக்குத்தான்! -மாற்றுத் திறன் கிரிக்கெட் வீரர் சிவா

கிரிக்கெட் ரசிகர்கள் கவனிக்க வேண்டிய இளைஞர் சி.சிவக்குமார். மதுரை கிரிக்கெட் ரசிகர்களால் ‘சச்சின்’ சிவா என்று அழைக்கப்படும் இவர், மாற்றுத் திறனாளிகளுக்கான தமிழக கிரிக்கெட் அணியின் கேப்டன். கடந்த 3 மாதங்களில் நடந்த இரு தென்னிந்திய போட்டிகளிலும் தொடர் நாயகன் விருதைப் பெற்ற கையோடு, இந்திய அணிக்குத் தேர்வாகியிருக்கிறார் சச்சின் சிவா. இந்திய மாற்றுத் திறன் கிரிக்கெட் அணியில் இடம்பிடித்த முதல் தமிழக வீரர் இவர்.

“மாற்றுத் திறனாளிகள் விளையாடும் கிரிக்கெட் போட்டி, சாதாரணப் போட்டிகளுக்கு எந்த விதத்திலும் குறைந்தது கிடையாது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வகுத்துள்ள அதே சட்டதிட்டங்களின் கீழ் இதுவும் நடத்தப்படுகிறது. பை ரன்னர்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற ஒரே ஒரு சலுகை மட்டுமே உண்டு” என்கிறார் சிவக்குமார்.

டிவியைப் பார்த்துக் கற்றேன்

கிரிக்கெட்டைப் போலவே சிவாவின் வாழ்க்கையும் சுவாரசியமும் சாகசமும் நிறைந்ததுதான். ஆறு மாதக் குழந்தையாக இருந்தபோதே போலியோ பாதிப்பால், அவரது இடது கால் மெலிந்துபோய்விட்டது. ஓடித் திரிய வேண்டிய வயதில், வீதி விளையாட்டுகளிலிருந்து ஓரங்கட்டப்பட்டார். வீட்டுக்குள் முடங்கிய சூழலிலும், டிவியைப் பார்த்தபடி கிரிக்கெட் நுட்பங்களைக் கவனிக்க ஆரம்பித்தார்.

தன்னால் முடியாது என விரட்டியவர்கள் முன், விளையாடிக் காட்ட வேண்டும் என்ற வைராக்கியம் வளர்ந்தது. ஒரு கட்டத்தில், “அவர்களைவிடவும் எனக்கு கிரிக்கெட் அறிவு கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது என்பதை உணர்ந்த பின்பு என்னையும் விளையாட்டில் சேர்த்துக் கொண்டார்கள்” என்று தனது இன்னிங்ஸ் ஆரம்பமான கதையைச் சொல்கிறார் சிவா.

உன்னால் முடியும் தம்பி

7-ம் வகுப்புப் படித்த போது 12-ம் வகுப்பு மாணவர் ஒருவர் இவரைத் தனியே அழைத்து, “தம்பி நீ கிரிக்கெட் ஆடுறதை ரொம்ப நாட்களாகக் கவனிச்சிட்டுவர்றேன். ரொம்ப அற்புதமா ஆடுற. வாழ்க்கையில் என்ன கஷ்டம் வந்தாலும் கிரிக்கெட் ஆடுறதை மட்டும் நிறுத்திடாத” என்று இறுக்கக் கையைப் பற்றியபடி சொன்னார். முன்பின் அறிமுகமே இல்லாத அந்த அண்ணனின் பாராட்டு, ராக்கெட்டைக் கிளப்பும் எரிபொருள்போல சிவாவை ஊக்கப்படுத்தியது.

ரப்பர் பந்தில் மட்டுமே விளையாடிக்கொண்டிருந்த சிவா, தெப்பக்குளம் ‘பயர் பிரண்ட்ஸ்’ அணியில் இடம்பிடித்த பிறகுதான் முதன்முறையாக கிரிக்கெட் பந்தை எதிர்கொண்டார். அந்த அணியின் உரிமையாளர் நாகேந்திரன், மதுரை மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடந்த உள்ளூர் போட்டி ஒன்றில் நம்பிக்கையுடன் சிவாவை ஓப்பனிங் பேட்ஸ் மேனாக இறக்கினார்.

“அந்த மேட்சில் நான் 53 ரன்களைக் குவித்து, நம்பிக்கையைக் காப்பாற்றியதால் அணியின் நிரந்தரத் தொடக்க ஆட்டக்காரர் ஆகிவிட்டேன்” என்று கூறும் சிவாவுக்கு மாற்றுத் திறனாளி கிரிக்கெட் அணிக்கு வீரர்கள் தேர்வு நடைபெற இருப்பது பற்றிய தகவலை மாற்றுத் திறனாளிகளுக்கான தடகளப் பயிற்சியாளர் ரஞ்சித் சொல்லியிருக்கிறார். முகாமுக்கு மதுரையில் இருந்து சென்ற சிவா, தன் நண்பர்களான ரமேஷ்குமார், சூரிய பிரகாஷ் ஆகியோருடன் தமிழக அணிக்குத் தேர்வானார்.

வெற்றி என்னுடையதல்ல்

தமிழக வீரராக இவர் பங்கேற்ற முதல் போட்டி 2007-ல் ஆந்திர மாநிலம் அனந்தப்பூரில் நடந்த தென்னிந்திய கிரிக்கெட் போட்டி. ஆரம்பத்தில் தமிழக அணி தொடர் தோல்விகளைச் சந்தித்தது. அடுத்த ஆண்டு அதே போட்டியில் மதுரை அணியின் வீரராகவும், கேப்டனாகவும் சிவா கோப்பையை வென்றார். அதனைக் கவனித்த தமிழக மாற்றுத் திறனாளிகள் கிரிக்கெட் கழக நிர்வாகி நாகராஜன், சிவாவைத் தமிழக அணியின் கேப்டனாக உயர்த்தினார். அதன் பிறகு தமிழக அணிக்கு ஏறுமுகம்தான்.

2008-ல் தென்னிந்தியப் போட்டியில் அரையிறுதிவரை சென்ற தமிழக அணி, 2010-க்குப் பிறகு தொடர் வெற்றிகளைக் குவித்து, தென்னிந்தியாவின் நம்பர் ஒன் அணி என்ற பெயரைப் பெற்றது. ஆனாலும் சிவாவிடம் தன்னைப் பற்றிய பெருமிதம் ஏதுமில்லை. “என்னால்தான் தமிழகம் வெற்றி பெற்றது என்று சொல்ல முடியாது. எங்கள் அணியின் அனைத்து வீரர்களின் செயல்பாடுகள் காரணமாகத் தான் தொடர்ந்து வெற்றிபெற முடிந்தது” என வெற்றியைக் குழுவுக்குச் சமர்ப்பிக்கிறார்.

உலகக் கோப்பை வேண்டும்

வருகிற மே மாதம் பாகிஸ்தானின் லாகூரில் மாற்றுத் திறனாளிகளுக்கான முத்தரப்பு கிரிக்கெட் நடைபெறுகிறது. இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் பங்கேற்கும் இந்தப் போட்டியில் முதன் முறையாக இந்திய வீரராகக் களமிறங்கப் போகிறார் சிவா. அதில் எப்படியாவது ஜெயிக்க வேண்டும். இன்னும் சில ஆண்டுகளில் நடைபெற உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்பதை லட்சியமாக வைத்திருக்கும் சிவாவுக்கு வேறு சில ஆசைகளும் இருக்கின்றன.

“தமிழக கிரிக்கெட் அணியில் உள்ள பல வீரர்களிடம் நல்ல பேட்கூட இல்லை. கிழிந்த காலணியோடு தான் களமிறங்குகிறார்கள். எனக்குக் குடும்பத்தின் ஒத்துழைப்பு உள்ளதால், வேலையை விட்டுவிட்டு கிரிக்கெட்டே கதியென்று இருக்க முடிகிறது. அவர்களோ தனியார் நிறுவனங்களில் குறைந்த சம்பளத்துக்காக அதிகம் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களுக்கு அரசு வேலை வழங்காவிட்டால்கூடப் பரவாயில்லை, ஏதாவது தனியார் நிறுவனம் ஸ்பான்ஸர் வழங்கினால் போதும். அப்போதுதான் வறுமைக்குப் பயந்து கிரிக்கெட்டைவிட்டு அவர்கள் ஓட மாட்டார்கள்” என்கிறபோது தன்னை ஏற்றிவிட்ட ஏணியின் மீது அவருக்கிருக்கும் அக்கறையைப் புரிந்துகொள்ள முடிகிறது.

படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x