Published : 22 May 2015 03:15 PM
Last Updated : 22 May 2015 03:15 PM

உறவுகள்: தனிமையில் வாடுகிறேன்...

என் வயது 22. நான் முதுகலைப் பட்டம் படிக்கிறேன். சிறு வயதில் இருந்தே தனித்து இருப்பேன். அம்மா, பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தேன். நண்பர்கள் குறைவு. எப்போதும் அமைதியாக, சோகமாக இருப்பேன். பருவ வயதை அடைந்தும் மற்ற மாணவர்களைப் போல என்னால் இயல்பாய் இருக்க முடியவில்லை. குழந்தைத்தனமான நடவடிக்கை கொண்டிருந்தேன். என் செய்கைகளில் கொஞ்சம் பெண்மை சாயலும் இருக்கும் என்பதைச் சக மாணவர்கள் கேலி செய்யும்போது உணர்ந்திருக்கிறேன். ஆனால் எனக்குப் பெண்ணாக மாற வேண்டும் என்றெல்லாம் தோன்றியது இல்லை.

நான் 12-ம் வகுப்பு படிக்கும்போது சிவா என்னும் நண்பன் என்னைக் காதலிப்பதாகச் சொன்னான். ஒரு ஆண் எப்படி இன்னொரு ஆணைக் காதலிக்க முடியும் என்றேன். உன் குழந்தைத்தனமான கேரக்டர் எனக்குப் பிடித்திருக்கிறது என்று சொல்லி என்னோடு பழக ஆரம்பித்தான். எனக்கும் அவனுடைய செய்கைகள், என்னிடம் காட்டும் அன்பு எல்லாம் பிடித்திருந்தது. இருவரும் ரொம்பவே நெருக்கமாகி இருந்தோம். ஒரே படுக்கையில் படுக்கும் அளவுக்கு. மற்றவர்கள் எங்களை கணவன், மனைவி எனக் கேலி செய்வார்கள்.

நானும் இவன்தான் என் வாழ்க்கைத் துணை என்று வாழத் தொடங்கினேன். அவனும் என்னை மனைவியாய் ஏற்றுக்கொண்டான்.

நான் கல்லூரிப் படிப்பை முடிக்கும்போது, இந்த உறவு நிலைக்குமா, சமுதாயமும், குடும்பமும் ஏற்றுக்கொள்ளுமா என்று எண்ண, பயம் வந்தது. அவனிடம் கேட்டதற்கு நாம் நம்மை ஏற்றுக்கொள்ளும் நாட்டுக்குச் சென்றுவிடலாம் என்று கூறினான். அவன் இன்ஜினீயரிங் கல்வியை நிறைவுசெய்தான். முதுகலையில் என்னைச் சேர்த்துவிட்டான். அவன் சென்னையில் வேலைக்குச் சென்றான்.

சென்னையில் ஒரு பெண் இவனைக் காதலிப்பதாகச் சொல்லியிருக்கிறாள். என்னிடம் இதைச் சொன்னான். ஒரு நாள் என் வீட்டுக்கு வந்து அவனும் அந்தப் பெண்ணும் இருக்கும் படங்களைக் காட்டினான். இருவரும் காதலிப்பதாகச் சொன்னான். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. கோபத்தில் அவன் போனை உடைத்துவிட்டேன். பிறகு சில நாட்கள் பேசவில்லை. எனக்கு அவன்தான் வாழ்க்கை, அவன் இல்லாமல் எப்படி இயல்பாய் இருக்க முடியும் என்று கவலைப்பட்டேன். அந்தப் பெண்ணிடம் அவனைப் பற்றிச் சொல்லிவிடலாம் என்று நினைத்தேன். ஆனால், என்னால் முடியவில்லை. ரொம்பவும் அழுதேன்.

அவன் மீண்டும் என்னைச் சந்தித்து, என்னால் அவளை மறக்க முடியவில்லை எனக்கு அவள் வேண்டும்; உன்னையும் வைத்துக்கொள்வேன் என்றான். என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தினமும் அழுகிறேன். என் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிட்டது. அவனை இப்போதும் உண்மையாய்க் காதலிக்கிறேன். தன் இச்சைக்காக அவன் என்னைப் பயன்படுத்திக்கொண்டான் என நினைக்கும்போது கேவலமாய் இருக்கிறது. எந்த விஷயத்தையும் தனித்துச் செய்யும் தைரியம் இல்லை. அவன்தான் என் உலகம் என வாழ்ந்துவிட்டேன். இப்போது மீள வழி தெரியாமல் தவிக்கிறேன். உங்கள் பதிலுக்காகக் காத்திருக்கிறேன்.

இளைஞரே, உங்கள் நிலைமை மிகவும் கடினமானதுதான். முதலில் உங்கள் காதலர்மீது உண்டான கோபத்தை விடுங்கள். ஓரினச் சேர்க்கையில் உள்ளவர்களில் சிலர் ஈரினச் சேர்க்கையிலும் நாட்டம் காட்டலாம். அதனால், அவர் உங்கள் காதலைத் துறந்துவிட்டார் என்று கொள்ள வேண்டாம். சொல்லப்போனால், இருதலைக் கொள்ளி எறும்பாக அவர் தவித்துக்கொண்டிருப்பதால்தான், ‘உன்னையும் வைத்துக் கொள்வேன்’ என்ற வாக்கியம் வந்தது.

தனக்கு வேறு பாலினத்தவரிடம் ஈடுபாடு வரும் என்று உங்களுடன் உறவு ஆரம்பித்தபோது அவருக்கே தெரிய வாய்ப்பில்லை! அதெப்படி என்று கேட்டால், இதெப்படியோ அதுமாதிரிதான் அதுவும். அவர் பக்கம் நான் பேசுவதாக உங்களுக்குத் தோன்றலாம். உண்மையைப் புரியவைக்க முயல்கிறேன் அவ்வளவுதான்.

அவர் சொல்படி உங்களுடனும் உறவு தொடர்ந்தால் மேற்கொண்டு அதனால் பல சிக்கல்கள் வரும். அவருடைய மனைவியால் இந்த உறவை ஏற்றுக்கொள்ள முடியாது; அவர்களுக்குள் சண்டை வந்து நானா, அவனா என்று தீர்மானியுங்கள் என்று கெடு கொடுத்துவிடலாம். சமுதாயம் அங்கீகரிக்காத உறவு இது; ஆகவே அவர் விலகிப்போக வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். குழந்தை வேறு பிறந்துவிட்டால் பிரச்சினை பூதாகரமாக உருவெடுக்கும் என எச்சரிக்கிறேன்.

ஆனால், இன்னும் உங்கள் நண்பருக்குத் திருமணம் ஆகவில்லையே; காத்திருங்கள். காத்திருக்கும் காலத்தில் அவருடன் தொடர்புகொள்ள வேண்டாம். இது அவருக்கு நீங்கள் வைக்கும் பரிசோதனை. அவர் ‘பாஸா ஃபெயிலா’ என்று நாளடைவில் தெரிந்துவிடும்! அவர் ஃபெயிலாகிவிட்டால், நீங்கள் வாழ்க்கைத் துணையை இழந்துவிடுவீர்கள்.

துக்கம்தான். ஆனால், மெல்ல அதிலிருந்து மீள்வீர்கள். தனித்து வாழ வேண்டாம்; வேறொருவர் உங்கள் வாழ்வில் வருவார். இப்போது அவர் பாஸானாலும், மறுபடி வேறு ஒரு பெண் வரலாம் அவர் வாழ்வில்! நிரந்தரமில்லாத இந்த உறவின் பின் ஓட வேண்டுமா? யோசித்து முடிவெடுங்கள்.

நான் பொறியியல் பட்டதாரி. படிப்பை முடித்து நான்கு வருடங்கள் ஆகின்றன. வேலை கிடைக்கவில்லை. ஆங்கிலம் எனக்கு மிகுந்த தடையாக உள்ளது. என்னுடன் படித்த அனைவரும் நல்ல நிலையில் உள்ளனர். நான் மத்திய, மாநில அரசுப் போட்டித் தேர்வுகளுக்கு எழுதிவருகிறேன். என்னால் எந்தச் செயலையும் முழு ஈடுபாட்டோடு செய்ய முடியவில்லை. எதிலும் பிடிப்பில்லாமல் இருக்கிறேன். என்ன செய்வதென்று தெரியாத மனநிலையில் இருக்கிறேன். தேர்வுகளின் முக்கியத்துவம் தெரிந்தும் என்னால் முழு கவனத்தோடும் ஈடுபாட்டோடும் தேர்வுகளுக்குத் தயாராக முடியவில்லை.

எப்பொழுதும் பயம், பதற்றம், அவநம்பிக்கை. சிறு வயதிலிருந்தே மன நெருக்கடி ஏற்படுத்தும் சூழலில் வளர்ந்தவன் நான். வெளியுலகம் தெரியாமல் வாழ்ந்தவன். குழப்ப நிலையில் வளர்ந்தவன். பள்ளிப் படிப்பு முடிந்ததும் மேற்படிப்பு பற்றிய திட்டம் எதுவும் இல்லாமல் பொறியியல் படிப்பைத் தேர்வு செய்தேன். தனிமையில் வாடினேன். பாலியல் உணர்வுகள் அலைக்கழித்தன. நடுவில் ஒரு பி.பி.ஓ.வில் வேலை கிடைத்தது. அங்கு ஒரு பெண்ணைப் பார்த்தேன். அவள் மேல் விருப்பம் ஏற்பட்டது. அவளைப் பார்த்த பின்தான் என்னுடைய நிலையை உணர்ந்தேன். என்னுடைய தவறுகள் புரிந்தன. கோபத்தை விட்டேன்.

அனைவரிடமும் சந்தோஷத்தைப் பார்த்தேன். நல்ல நிலையை அடைய வேண்டும் என்னும் முனைப்பு வந்தது. சிறு வயது முதல் ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என்று என் மனதில் இருந்தது. என்னுடைய குறிக்கோளாக அதைக் கொண்டேன். அதற்கான பயிற்சிக்குச் சென்ற பிறகு அதன் வேகத்துக்கு என்னால் ஈடு கொடுக்க முடியவில்லை. மற்றவர்களின் கிண்டல், தனிமை, பண ஏமாற்றம், குடும்பச் சூழ்நிலை என அனைத்தும் சேர்ந்து என்னை மீண்டும் பழைய நிலைக்கே அனுப்பிவிட்டன. யாரும் இல்லாமல் தனியாக உள்ளது போன்று உள்ளது. சில நேரங்களில் தவறான எண்ணங்களும், பழக்கங்களும் இழுக்கின்றன. மறுபுறம் அவற்றை வெறுக்கவும் செய்கிறேன். நான் இன்னும் மோசமாக இருப்பதாகத் தோன்றுகிறது. உங்களுடைய பதிலுக்காகக் காத்திருக்கிறேன்.

தோழரே, நீங்கள் மனச்சோர்வில் இருக்கலாம் என்று தோன்றுகிறது. வாழ்வில் பிடித்தமில்லாமை, தனிமையை நாடுவது, எதிலும் கவனம் செலுத்த இயலாததால் முழுமை பெறாத வேலைகள், பதற்றம், தன்னம்பிக்கை குறைவு போன்ற அறிகுறிகள் இதைத் தெரிவிக்கின்றன.

அச்சில் ஏற்ற வேண்டாம் என நீங்கள் குறிப்பிட்ட சில தகவல்களிலிருந்து உங்கள் குடும்பச் சூழலாலும், குழந்தைப் பருவ அனுபவங்களாலும் இன்று இந்த நிலை என்று தெரிகிறது. உங்கள் காதலி விலகிவிட்டார் என்றும் ஊகிக்கிறேன். அவர் இருந்தபோது ஏறிய உத்வேகம், ‘புஸ்’ஸென்று இறங்கிவிட்டது. பிறரை நம்பி வாழ்ந்தால் இதுதான் கதி.

தன்னம்பிக்கையை ஏற்படுத்திக்கொள்ளச் சில வழிகள் சொல்கிறேன். உங்களை நீங்கள் நேசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். எப்படி? தினமும் கவனமெடுத்து உங்கள் தோற்றத்தை அழகுபடுத்திக்கொள்ளுங்கள். கண்ணாடி முன் நின்று, ‘நான் அழகாக இருக்கிறேனே!’ என்று பாராட்டிக்கொள்ளுங்கள். மறுநாள் செய்ய வேண்டிய சின்னச் சின்ன வேலைகளின் பட்டியலைத் தயாரியுங்கள்; மறுநாள் செய்து முடித்த பின் பட்டியலில் டிக் செய்யுங்கள். ஒவ்வொரு டிக்கும் உங்கள் தன்னம்பிக்கையைக் கூட்டும்.

உங்களிடம் உள்ள நல்லதையும், கெட்டதையும் பட்டியல் போடுங்கள். நல்லது குறைவாக இருந்தால், பெற்றோர், அண்ணன், நண்பர்கள் ஆகியோரிடம் கேட்டு அதையும் சேர்த்துக்கொள்ளுங்கள். தாழ்வாக உணரும்போது நல்லதின் பட்டியலைப் பாருங்கள். உற்சாகமடைவீர்கள். வாழ்வில் நீங்கள் அடைந்த வெற்றிகளை எழுதி வைத்துக்கொள்ளுங்கள். அவையும் உங்களை ஊக்குவிக்கும்.

கருத்துள்ள வாசகங்களை போஸ்டராகத் தயாரித்துச் சுவரில் ஒட்டிவைத்துக்கொள்ளுங்கள். அடிக்கடி அவற்றைப் படிக்கும்போது, உள்வாங்கிக்கொள்வீர்கள். தானாகவே தீய எண்ணங்கள் மறைந்துவிடும். தன்னம்பிக்கை கூடும்போது மனச் சோர்வு குறைந்துவிடும்.

உளவியல் ஆலோசகர் பிருந்தா ஜெயராமனுடன் உரையாடலாம். உங்கள் கேள்விகள், எண்ணங்கள், குழப்பங்கள், உறவுச் சிக்கல்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.

முகவரி: இளமை புதுமை, தி இந்து,

கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை-600 002.

மின்னஞ்சல்: ilamaiputhumai@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x