Published : 17 Apr 2015 03:04 PM
Last Updated : 17 Apr 2015 03:04 PM

இரும்புக் குதிரைகளில் பறக்கும் இளைஞர்கள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத் தலங் களுக்குச் சென்றால் நிச்சயம் அந்த டீம் கண்ணில் படும். வகை வகையான பைக்குகள், வித விதமான ஹார்ன் ஓசைகளுடன் நம்மைக் கடந்து செல்லும். விடுமுறை நாள்களில் நாகர்கோவில் வடசேரி பகுதியில் உள்ள காந்தி பார்க்கில் இருந்து சீறிப் புறப்படுகின்றனர் இந்த டூவீலர் பிரியர்கள்.

கன்னியாகுமரி, திற்பரப்பு, சிதறால் மலைக்கோவில் என அன்றைக்கு விசிட் அடிக்க வேண்டிய பகுதிகளைத் துண்டுச் சீட்டு குலுக்கிப் போட்டு எடுத்துவிட்டுப் பறக்கின்றன பைக்குகள். அப்பகுதி இளைஞர்கள் ஒன்றுகூடி ரேசிங் லெஜண்ட் வெர்ஷன் 2.0 என்கின்ற அமைப்பை வைத்துள்ளனர். அனைவரது மோட்டார் சைக்கிள்களிலும் இந்த வாசகம் ஸ்டிக்கரிங் செய்தும் வைக்கப்பட்டுள்ளது.

ஒரு காலைப் பொழுதில் நாகர்கோவிலில் சீறிப் பாய்ந்து சென்றவர்களை விரட்டிப் பிடித்துப் பேச்சுக் கொடுத்தோம். “எங்கள் அமைப்புக்குத் தலைவர்ன்னு யாரும் கிடையாது பாஸ். நாங்க எல்லாரும் சேருவோம்; சுத்துவோம்; என்ஜாய் பண்ணுவோம். தலைவ ரெல்லாம் எடுத்து வைக்க இது என்ன அரசியல் கட்சியா? எங்களுக்கு எல்லாமே எங்க பைக்தான்” என ஆறுதலாய் மோட்டார் சைக்கிளை வருடியவாறே பேசத் தொடங்குகிறார் அருண்,

அருண் டிப்ளமோ முடித்துள்ளார். இவரது குழுவில் 40 பேர் உள்ளனர். லீவு கிடைத்தால் போதும் பைக்குகளை எடுத்துக்கொண்டு கிளம்பிவிடுகிறார்கள். “நிறைய பசங்க இப்போ படிப்பு, வேலைன்னு வெளியில் இருக்காங்க. அதனால் விசேஷ நாள்களில் விடுமுறைக்கு வரும்போது பைக்கை எடுத்துட்டு பறந்துடுவோம். வாட்ஸ் அப்பிலும் குரூப் வைச்சுருக்கோம்.

அதிலும் இது சம்பந்தமா அடிக்கடி விவாதிச்சுப்போம். டியூக், அப்பாச்சி, பல்சர், கரிஷ்மா, புல்லட் கிளாசிக், சடாக், ஜாவான்னு எங்க பசங்க கிட்ட எல்லா கம்பெனி பைக்கும் இருக்கு. நாங்க சேர்ந்துபோனால் அது மோட்டார் சைக்கிள் கண்காட்சி மாதிரி இருக்கும் பாஸ்” என்று சொல்லும் நண்பர்கள் பரபரக்கிறார்கள்.

முன் வீல் (வீலிங்), பின் வீல்களை (ஸ்டாபி) தனித் தனியாகத் தூக்குறது, ஓடிட்டு இருக்கும்போதே தூக்குறது (ரோலிங் ஸ்டாபி), ஒன் ஹேண்ட் ஸ்டாபி, புகை வர வைக்குறது (பேர்ன் அவுட்) என்று ஏராளமான சாகசங்களும் செய்கிறார்கள். பாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் ஆங்கிலப் படத்துல கார் ரேஸ்க்குன்னு ஒரு கேங் இருக்கும். அந்தப் படம் இந்த இளைஞர்களின் பேவரைட் பிலிம்.

அதைப் பார்த்துட்டு தான் தங்களுக்கென்று ஒரு கேங் வைக்க முடிவுசெய்து இந்த அமைப்பை ஏற்படுத்தியுள்ளார்கள். ஆறு வருடங்களாக இணைந்து செயல்பட்டுவருகிறார்கள் இவர்கள். “பைக் ரேஸ்ல எங்க ரோல் மாடல் தல அஜித். எங்க நண்பர்களில் யார் வீட்டில் விசேஷம்னாலும் சேர்ந்து பைக்கில் போய் டெரர் காட்டுவோம். வீட்டில் ஆரம்பத்துல திட்டினாங்க.

இப்போவெல்லாம் இந்த வார லீவுக்கு எங்கடா போறீங்கன்னு கேட்குறாங்க. பைக் ஓட்டத்துல, வாழ்க்கை ஓட்டமும் மாறிருக்கு பாருங்க தலைவா…” சொல்லிவிட்டு கேரள மாநிலத்தில் உள்ள கோவளம் பீச்சை நோக்கி பறக்கிறது ரேசிங் லெஜண்ட் டீம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x