Last Updated : 22 Aug, 2014 12:00 AM

 

Published : 22 Aug 2014 12:00 AM
Last Updated : 22 Aug 2014 12:00 AM

இது சென்னை கெத்து

சென்னை தனது 375வது பிறந்தநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. சென்னையும், அதன் மக்களும் எப்போதும் சுறுசுறுப்பானவர்கள். கல்வியிலும், வேலைகளிலும் நம்ம சென்னப் பட்டினம் அவுட் ஸ்டேண்டிங் ப்ளேஸ்தான். ஆகவே, வெவ்வேறு ஊர்களிலி ருந்தும் வெவ்வேறு மாநிலங்களிலிருந்தும் மக்கள் இங்கு வந்து வாழ்கின்றனர்.

சென்னைக்கு வந்துவிட்டால் இங்கு இருந்து வெளியே செல்லவே முடியாது. செல்லவே மனம் சம்மதிக்காது. சூடான காலநிலை, நெரிசலான ட்ராஃபிக், பரபரப்பாக ஓடும் மக்கள் என்பதுதான் சென்னை என இருந்தாலும் இந்த ஜூன், ஜூலை மாதங்கள் வந்த பின்னர் காலையில் அடிக்கும் வெயில் மாலையில் பெய்யும் மழை என அடிக்கடி நிறம் மாறும் நம்ம சென்னையைப் பார்த்தால், மகிழ்ச்சிதான்.

புரிந்துகொள்ள முடியாதது நம்ம சென்னை கெத்து. மழை பொழியும் பொழுது சென்னையின் அழகைச் சொல்ல முடியாது. ஃபீல் பண்ணிதான் பார்க்க வேண்டும்.

சென்னையில் சுற்றிப் பார்க்க நிறைய இடங்கள் இருந்தாலும் மெரினா கடற்கரை எப்போதும் அனைவரின் முதல் விருப்பமாக உள்ளது. ஆனால் ஒடிசாவில் இருந்து வந்து சென்னையில் படிக்கும் மாணவன் ஆஷிஷ் ஜானுக்கோ கன்னிமாரா என்றால் உயிர். “எனக்குப் பிடித்த இடங்களில் ஒன்று கன்னிமாரா நூலகம்.

சென்னையில் அப்படி ஒரு அமைதி வேறு எங்கே கிடைக்கும்? புத்தகங்களுடன் நிம்மதியாக பொழுதை உபயோகமாகக் கழிக்கலாம்” என்று கூறிய அவருக்கு சாந்தோம் தேவாலயம் பார்க்க வேண்டிய ஒன்றாக உள்ளது.

மாணவிகளின் ஓட்டு என்னவோ ஷாப்பிங் மால்களுக்குத்தான். நகரத்தில் இருக்கும் மால்களுக்கு நண்பர்களுடன் சென்று விண்டோ ஷாப்பிங் செய்து லைட்டாகச் சாப்பிட்டு செல்ஃபிகள் எடுத்து ஃபேஸ்புக்கில் போடுவதுதான் ஹேப்பி மொமெண்ட் என்று தெம்பாகக் கூறுகின்றனர்.

தூத்துக்குடியிலிருந்து வந்து நுங்கம்பாக்கம் எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரியில் படிக்கும் மாணவி ஸ்ரீ ரஞ்சனிக்குச் சென்னை சொந்த வீடு போல் இருக்கிறது. அதனால்தான் அவர், “இந்தியாவில் பல நகரங்களில் பெண்களுக்கான பாதுகாப்பு இல்லாதபோது சென்னையில் அந்தப் பயம் இல்லை என்பது நல்ல விஷயம்.

பெங்களூர் டெல்லி போன்ற மெட்ரோக்களைக் காட்டிலும் சென்னை நகரம் அனைவருக்கும் வீடு போல உள்ளது. நடுத்தர வர்க்க மக்கள், கல்வி பயில வரும் மாணவர்கள் ஆகிய எல்லோராலும் இங்கே சமாளிக்க முடியும். மொத்தத்தில் சென்னை வாய்ப்புகளின் கூடம்” என்கிறார்.

சென்னை நகரத்தை முழுமையாக ஒரு ரவுண்டு போக வேண்டும் என்பது நகரத்தில் இருக்கும் டீன்-களின் ஒருமித்த விருப்பமாக உள்ளது. ‘‘நகரத்தினுள் வண்டி ஓட்டுவதுதான் த்ரில்லான அனுபவம், அதை மிஸ் பண்ணாதீங்க’’ என்று கூறும் கிருஷ்திகா பன்னீர்செல்வம் ஸ்ரீலங்காவிலிருந்து வந்திருக்கிறார். ‘ஓ.எம்.ஆர்., ஈ.சி.ஆரில் வண்டி ஓட்டுவதும் குடும்பத்துடன் ஒரு நாள் பயணமாக மாமல்லபுரம் செல்வதும் அவ்வளவு அழகாக இருக்கும்’ என்று குதூகலிக்கிறார் அவர். ‘‘நெரிசலான ட்ராபிஃக்கில் மெரினா கடற்கரை ஓரம் உள்ள சாலைகளில் வண்டி ஓட்டுவதற்கு தில் வேணும்’’ என்று சொல்லும் அவர் சென்னையை வண்டியில் சுற்றிவந்ததுதான் தன்னுடைய பெஸ்ட் மொமெண்ட் என்றும் சொல்கிறார்.

“சென்னையைப் பார்த்தவுடன் பிடித்துப் போவது இல்லை. ஆனால் பழகப் பழக தான் பிடிக்கும்” என்று பஞ்ச் அடிக்கிறார் திருச்சியில் இருந்து வந்திருக்கும் மாணவி ஹரிணி. “என்னதான் நான் தமிழ்நாட்டிலேயே இருந்தாலும், சென்னை தமிழ் தனி ஸ்டைல். இங்க வந்து நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டேன். எலக்ட்ரிக் ட்ரெயின் டிராவல் ரொம்ப ஸ்பெஷல். மெட்ரோ எப்பொழுது வரும் என்று வெயிட் பண்றோம்” என்று ஆர்வத்துடன் சொல்கிறார்.

வேறு ஊர்களில் இருந்து வந்திருந்தாலும் சென்னை நகரத்துடனான பாசம் என்றும் குறையாது என்பதே இவர்கள் உணர்வு. சென்னையில் இருப்பதே கெத்துதான் என்று கூறி கோரஸாக ஹாப்பி பர்த்டே பாடினர் நம்ம சென்னை இளசுகள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x