Last Updated : 28 Oct, 2016 11:04 AM

 

Published : 28 Oct 2016 11:04 AM
Last Updated : 28 Oct 2016 11:04 AM

அலையோடு விளையாடு! 06: அலைக்கழித்த கடலும் எதிரே வந்த முதலையும்

இலங்கை மது கங்காவில் என்னுடைய இரண்டாம் நாள் பயணத்துக்காக மோட்டார் படகு ஒன்றை வாடகைக்கு எடுத்தேன். அதில் நான்கு பேர் எனக்குப் பாதுகாப்பாக வந்தார்கள். பேட்லிங் பலகையுடன் நான் துடுப்பு போட ஆரம்பித்தேன். அன்றைக்கு 20 கிலோ மீட்டர் சென்று திரும்ப வேண்டும் என்பது என் இலக்கு. அன்றைக்கு 20 கிலோ மீட்டரைக் கடந்து திரும்பிவிட முடியும் என்று நான் நம்பியதற்குக் காரணம், தண்ணீர் அலை இல்லாமல் குளம் போல் இருந்ததுதான்.

இப்படி நினைத்துக்கொண்டிருந்த போதே தலைக்கு மேலே மழை மேகம் குடையைப் போலக் கவிய ஆரம்பித்தது, அந்த மேகங்களில் இடைவெளியைக் கண்டுபிடித்த சூரிய ஒளிக்கற்றைகள் ஊடுருவி வெளியே வந்து கதகதப்பான வெளிச்சத்தை உமிழ்ந்தன. பெரிய மழை பெய்ய வாய்ப்பில்லை என்ற நம்பிக்கை இருந்ததால், உற்சாகம் கரைபுரள பேட்லிங் செய்ய ஆரம்பித்தேன்.

எதிரே கண்ணுக்கெட்டிய தொலைவுவரை தண்ணீர், கொஞ்சம் தூரம் பயணித்த பிறகு எனக்கு எதிரே இருட்டான குகை போன்ற தோற்றம் வந்தது. அது பாறைக் குகை அல்ல, அடர்ந்த காடுதான் குகை போலத் தோன்றியது. இது எனக்குப் புதுசு. ஆனால், எதைப் பற்றியும் யோசிக்காமல் கைகள் துடுப்பை வலித்துக்கொண்டிருந்தன.

அவரவர் பாதையில்...

என் கவனத்தைத் திருப்பும் வகையில், படகில் வந்தவர்கள் திடீரென்று சத்தம் போட்டு எச்சரிக்கை செய்தார்கள். என் முன்னே 10 மீட்டர் தொலைவில் 10-12 அடி நீளமுள்ள முதலை ஒன்று மெதுவாக நீச்சல் பழகிக் கொண்டிருந்தது.

அதைப் பார்த்துப் படகில் வந்தவர்கள் கொஞ்சம் பயந்தார்கள். நான் பதற்றமடையாமல் இருந்தேன். இயற்கையை நாம் தொந்தரவு செய்யாதவரை, அது எந்த எதிர்பாராத எதிர்வினையையும் ஆற்றுவதில்லை. அன்றைக்கும் அதுதான் நடந்தது. முதலை தன் வழியே நீந்திச் சென்றது, நான் என் வழியே துடுப்பைப் போட்டுக்கொண்டிருந்தேன்.

எப்போதுமே இயற்கையைக் கண்டு தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை. முன்னெச்சரிக்கை மட்டும் போதும். அவசரப்பட்டு எதையும் செய்வதற்குப் பதிலாக, நடப்பதை நிதானமாகக் கவனித்துச் செயல்பட்டாலே, பிரச்சினை என்று நாம் நினைக்கும் பல இயற்கைக் கூறுகளிலி ருந்து சாதாரணமாக விலகிவிடலாம்.

ஏலக்காய் தீவு

இருட்டுக் குகை போலிருந்த காடு விலகி, மறுபடியும் வெட்ட வெளி தெரிந்து, கொஞ்ச தூரத்திலேயே மறுபடியும் மரங்களின் கவிகைக் குகை என 20 கிலோமீட்டர் தொலைவை நிறைவு செய்து ஏலக்காய் தீவைச் சென்றடைந்தேன்.

அங்கு ‘கோதுநுவ்வா' புத்தர் பெருமானைப் பார்த்துவிட்டு, ‘வெடிக்கூர் மினிடாம்' அனுபவத்தையும் பெற்றேன். பிறகு என் பாதுகாப்புக்காகப் படகில் வந்த நண்பர்களுக்கு பேட்லிங் பயிற்சி அளித்தேன்.

மது கங்கா கடலில் கலக்கும் பகுதியில் நீச்சலடிக்க அனுமதி இல்லை. கடலில் ஆறு கலக்கும் இடம் என்பதால் கடல் அலைகளும் நீரும் அதிகம் உள்ளே வரும் என்பதால்தான் அப்படி. என் இரண்டாம் நாள் பயணம் முடிந்தது. அது இனிதே நிறைவடையப் படகின் சொந்தக்காரர் சமராவின் ஒத்துழைப்பு மிகவும் பக்கபலமாக இருந்ததை மறக்க முடியாது.

அலைக்கழித்த கடல்

மூன்றாவது நாள் விடிந்தது. படகில் என் பாதுகாப்புக்கு வரும் சஞ்சிவாவிடம் ‘இன்றைக்கு நான் தனியாகவே பேட்லிங் செய்து முன்னே போகிறேன். ஐந்து கிலோமீட்டர் தொலைவு சென்றதும், அதாவது 30 நிமிடங்களில் கைபேசி மூலம் நான் அழைத்தாலும் அழைக்காவிட்டாலும் நீங்கள் வந்துவிடுங்கள்' என்று சொல்லிவிட்டுப் பயணத்தை ஆரம்பித்தேன்.

நான் நினைத்தது போலப் பயணம் அவ்வளவு எளிதாக அமையவில்லை. அன்றைக்கு நான் தேர்ந்தெடுத்த இடம், கடலில் ஆறு கலக்கும் கழிமுகம் இருந்த பகுதி. சீறி வரும் கடலலைகள் என்னை ஆட்டுவிக்க ஆரம்பித்தன. மன வைராக்கியத்தைச் சற்றும் இழந்துவிடாமல், தொடர்ந்து துடுப்பைப் போட்டபடி இருந்தேன். பேட்லிங் பலகை மீது நின்று கொண்டிருக்கும் என் கைகளைத் தொடும் அளவுக்கு அலைகள் மேலே வந்து மோதின. மற்றொரு பக்கத்திலோ அலையாத்திக் காடு. அதில் போய்ச் சிக்கிக்கொண்டால் என்ன செய்வது?

என்னதான் சாகச அனுபவம் என்றாலும், அலையாத்திக் காட்டுக்கு எதிர்த் திசையில் போகாமல் அதன் பக்கமாகவே திசை மாறிப் போகும் ஆபத்து இருந்தது! அந்த நேரத்தில் பாதுகாப்புப் படகு சரியான நேரத்தில் அந்த இடத்துக்கு வந்தது நிம்மதியைத் தந்தது.

இதிலிருந்து நான் உணர்ந்து கொண்டது இதுதான்: எத்தனையோ முறை பேட்லிங் பயணங்களை வெற்றிகரமாக முடித்திருக்கலாம். ஆனால், எங்கே பேட்லிங் செய்தாலும் அங்கு உள்ள நீரின் தன்மை, நிலத்தின் தன்மை, அங்குள்ள உயிரினங்கள், தாவரங்கள் என்று அந்தச் சூழலைப் பற்றி முதலில் அறிந்து வைத்திருக்க வேண்டும். அதற்கு மேலாக அந்தந்த மண்ணின் மைந்தர்களிடம் பழகி, அவர்களுடைய அனுபவ அறிவைக் கேட்டுப் புரிந்துகொண்டு, அவர்களுடைய துணையுடன் செல்வது மிக முக்கியம்.



கேஞ்சஸ் எஸ்.யு.பி. எனப்படும் பேட்லிங் சாகசப் பயணத்தில், ஒவ்வொரு நாள் காலையிலும் வரைபடத்தில்தான் விழிக்கிறோம்.

கடந்த வாரம் ரிஷிகேஷ்வரை பேட்லிங் செய்து வந்திருந்தோம். இந்த வாரம் உத்தரப்பிரதேசத்துக்குள் கங்கை நுழையும் இடத்துக்கு வந்திருக்கிறோம். இந்த மாநிலத்தில்தான் கங்கை நதி மிக அதிகத் தொலைவுக்குப் பாய்கிறது.

நான் ஒரு தொழில்முறை மண்ணியியலாளர் (geologist) என்பதால் கேஞ்சஸ் எஸ்.யு.பி. குழுவுக்கு நானே வழிகாட்டி செல்கிறேன். காட்டாறு போல ஓடும் கங்கையில் வழிகாட்டுவது சாதாரண விஷயமில்லை. அது மட்டுமில்லாமல் கூகுள் எர்த்தில் இருக்கும் கங்கை வரைபடம், கோடைக் காலத்தில் பதிவானது. இப்போது தலைகீழாக மாறியிருக்கிறது. நீரோட்டத்தின் திசை, வேகம், சூழலைக் கணித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய கஷ்டப்படுகிறோம்.

எங்களுக்கு உதவியாகப் பொருட்களைச் சுமந்துவரும் ஜீப்பைப் பின்தொடரச் செய்வதிலும் நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன. செல்போன் சிக்னல் கிடைக்காது. பல இடங்களில் நதியைக் கடக்கப் பாலம் இருக்காது. நதிக்குள்தான் வண்டியை ஓட்டிவர வேண்டும். இப்படி ஒருமுறை ஜீப் மாட்டிக்கொண்டு மூழ்கும் நிலைக்குச் சென்றுவிட்டது. உள்ளூர் ரவுடிகளும் வண்டியைச் சூழ்ந்து மிரட்டினார்கள். இதனால் எங்கள் பயணம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாகத்தான் எல்லோரும் நினைத்தோம். நல்லவேளையாக, எங்கள் வண்டி காப்பாற்றப்பட்டது.

யானை, கரடி, புலி போன்ற உயிரினங்களைக் கொண்ட ராஜாஜி தேசியப் பூங்கா எனப்படும் காட்டுயிர் சரணாலயத்தைக் கடந்திருக்கிறோம். அதேபோல, கங்கை நதி ஓங்கில்கள் (நதியிலும் ஓங்கில்-டால்பின் உண்டு), ஆற்று ஆமைகளைப் பார்த்தது சுவாரசியமான விஷயம்.

கங்கை நதியின் மொத்தத் தொலைவு 2,500 கி.மீ. இதுவரை 190 கி.மீ. கடந்திருக்கிறோம். சவால் நிறைந்த மலைப் பகுதியில் இருந்து கீழிறங்கிச் சமவெளியில் கங்கை பாயும் பகுதியைத் தொட்டிருக்கிறோம்.

காட்டாற்று வெள்ளத்தில் வழியைத் தேடி

(அடுத்த வாரம்: கொந்தளிக்கும் காஷ்மீரில் சந்தித்த எதிர்ப்பு)
தொடர்புக்கு: wellsitekumaran@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x