Last Updated : 11 Aug, 2017 12:05 PM

 

Published : 11 Aug 2017 12:05 PM
Last Updated : 11 Aug 2017 12:05 PM

புதிய முகம்: நான் சைக்கிளுக்கு மாறிட்டேன்!

ரண்டு தெரு தள்ளிச் செல்ல வேண்டும் என்றால்கூட பைக் வேண்டும். வேலைக்குச் சென்று கை நிறைய சம்பளம் வாங்கினால், காரும் வாங்கிவிட வேண்டும். இதுதான் இன்றைய இளைஞர்களின் கனவு. ஆனால், சென்னையில் பெரிய ஐ.டி. நிறுவனத்தில் சீனியர் மேலாளராகப் பணியாற்றும் தங்கபிரகாஷ் என்ற 24 வயது இளைஞர் வேலைக்கு மட்டுமல்ல; சென்னையில் எங்கே போக வேண்டுமென்றாலும் சைக்கிளில்தான் சென்றுவருகிறார். இது என்ன பெரிய விஷயம் என்று நீங்கள் கேட்கலாம். கை நிறைய சம்பாதித்தாலும், சுற்றுச்சுழலைக் காக்க பிற வாகனங்களைத் தவிர்த்து சைக்கிளில் சென்றுவருகிறார் இந்த இளைஞர்.

சென்னை நகரில் சைக்கிளில் சென்றாலே வித்தியாசமாகப் பார்க்கும் காலம் இது. அந்த அளவுக்குச் சாலைகளில் பைக், கார்களின் எண்ணிக்கைப் பெருகிக்கொண்டே போகிறது. சாலையில் ஒரு காரில் ஒருவர் மட்டுமே செல்லும் போக்கும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், எரிபொருள் தேவை, சுற்றுச்சூழல் மாசுபாடு அதிகரிப்பதைப் பற்றி யாரும் கண்டுகொள்வதாக இல்லை. இதுபோன்ற ஒரு சூழ்நிலைக்கு மத்தியில் தனக்குக் கீழ் பணியாற்றுவோர் பைக்கில் வேலைக்கு வந்து சென்றுகொண்டிருந்தாலும் ஹாயாக சைக்கிளில் வேலைக்கு வந்துசெல்கிறார் தங்கபிரகாஷ். சைக்கிளில் சென்றுவருவதை ‘ஹாபி’யாக வைத்திருக்கிறீர்களா என்று கேட்டால், உடனே மறுக்கிறார்.

சைக்கிள் மோகம்

“தஞ்சாவூரில் பள்ளிக்கூடம் படித்த காலத்திலேயே சைக்கிளில்தான் சென்று வந்தேன். அத்லெடிக் வீரன் நான். எனவே, உடலை ஃபிட்டாக வைத்துகொள்ள ஜிம்முக்கும் போயிருக்கிறேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உடல்பருமனைக் குறைக்க சைக்கிள் ஓட்ட ஆரம்பித்தேன். தினமும் காலை சூளைமேட்டில் உள்ள வீட்டிலிருந்து மெரினா வரை சைக்கிளில் சென்று வர ஆரம்பித்தேன். பிறகுதான் அலுவலகத்துக்கும் சைக்கிளில் சென்று வரலாமே என்று தோன்றியது.

இரண்டு ஆண்டுகளாக வீட்டுக்கும் நுங்கம்பாக்கம் அலுவலகத்துக்கும் சைக்கிளில் செல்ல ஆரம்பித்தேன். இப்போதும் அது தொடர்கிறது. டிராபிக்கில் வண்டிகள் அணிவகுத்து நின்றால்கூட சிறிய சந்துபொந்தில்கூடப் புகுந்து சென்றுவிடுவேன். இதனால் எனக்கு நேரம் மிச்சமாகிறது.

நான் சைக்கிளில் வருவதைப் பார்த்த நண்பர்கள் பலரும் பாராட்டினார்கள். சைக்கிள் சுற்றுச்சூழலுக்கு எப்படியெல்லாம் உகந்தது என்பது தெரிந்ததும், இனி எங்கு சென்றாலும் சைக்கிள்தான் என்கிற முடிவுக்கு வந்தேன். சூழலைக் காக்க நம்மால் முடிந்த சிறு உதவி” என்கிறார் தங்கபிரகாஷ்.

இளைஞர்களுக்கு விழிப்புணர்வு

தங்கபிரகாஷ் சைக்கிளில் சென்று வருவதைப் பார்த்த அவருடைய தந்தையும் தற்போது சைக்கிள் கேட்டு வருகிறார்.

அதோடு அவருடைய நண்பர்கள், அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் என யாரைப் பார்த்தாலும் சைக்கிளைப் பயன்படுத்தும்படி வலியுறுத்தி வருகிறார். இதற்காக ஃபேஸ்புக்கில் ‘Cycling Buddies Chennai - CBC’ என்ற பக்கத்தைத் தொடங்கி விழிப்புணர்வும் ஏற்படுத்தத் தொடங்கியிருக்கிறார் தங்கபிரகாஷ்.

“மேலை நாட்டு கலாச்சாரத்தை இன்றைய இளைஞர்கள் அதிகம் பின்பற்றுகிறார்கள். மேலை நாட்டில் சைக்கிள் ஓட்டும் கலாச்சாரம் அதிகம். ஆனால், அதைப் பின்பற்ற இளைஞர்கள் முன்வருவதில்லை. பள்ளியில் படிப்பவர்கள்கூட சைக்கிளில் செல்வதைப் பார்க்க முடிகிறது. ஆனால், கல்லூரியில் படிக்கும் இளைஞர்கள் சைக்கிளை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. ஜிம்முக்குச் செல்ல நிறைய இளைஞர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.

ஜிம்மில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு உறுப்புக்குத்தான் பயிற்சியைச் சொல்லித் தருவார்கள். ஆனால், சைக்கிள் ஓட்டினால் உடல் முழுவதற்கும் ஒருசேரப் பயிற்சி கிடைக்கிறது. சைக்கிள் ஓட்டினால் உடலுக்குப் புத்துணர்ச்சி கிடைக்கிறது. சைக்கிள் ஓட்டுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றிக் கல்லூரி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த என் நண்பர் சிவாவுடன் சேர்ந்து திட்டமிட்டுவருகிறேன்” என்று பொதுநலன் சார்ந்தும் பேசுகிறார் தங்கபிரகாஷ்.

நீங்க எப்ப மாறப் போறீங்க?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x