Published : 08 Nov 2013 12:00 AM
Last Updated : 08 Nov 2013 12:00 AM

12 வருடத்தில் பத்தாயிரம் பேருக்கு சேவை - தெய்வக் குழந்தைகளை தேடி ஓடும் தெய்வராஜ்

காலை நேரம். திருப்பூர் - கோவை சாலையில் கடிகாரத்தையும் போக்குவரத்து சிக்னலையும் கவனித்தபடி வாகனத்தை முறுக்கிப் பறக்கிறார்கள் மக்கள். தனது சலூன் கடையை திறக்கவந்த தெய்வராஜ் மட்டும் சாலையில் சுருண்டு கிடக்கும் பெரியவரைப் பார்த்துவிட்டு பதறிப்போய் தூக்குகிறார்.

அவரை அள்ளி எடுத்து முகம் கழுவிவிட்டுக் கொண்டே மனைவி சிவகாமியை அலைபேசியில் அழைக்கிறார். சற்று நேரத்தில் ஆடைகள், உணவு சகிதம் அங்கே வருகிறார் சிவகாமி. இருவரும் பெரியவருக்கு உடை மாற்றி, சாப்பிடவைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார்கள்.

அந்தப் பெரியவருக்கும் தெய்வராஜுக்கும் என்ன உறவு? கண்கள் பார்த்தும் இதயம் இரங்காமலும் கடந்து சென்றவர்கள் பலர் இருக்க.. இவருக்கு மட்டும் ஏன் அக்கறை? அவரையே கேட்கலாம்..

‘‘நாங்க கரூர் மாவட்டத்திலிருந்து திருப்பூருக்கு பிழைக்க வந்தவங்க. வந்த புதுசுல, முடிதிருத்தும் தொழிலில் சராசரியா தினம் முப்பது ரூபாய் சம்பாதிப்பேன். இப்ப சொந்தமா கடை வைக்கிற அளவுக்கு வளர்ந்துட்டேன். எனக்கு தொழில் பகுதி நேரம்தான். வறுமையின் வலி எனக்கும் தெரியும். அதனால, வறுமைப்பட்ட சனங்களுக்கு நம்மாள முடிஞ்ச ஏதாச்சும் செய்யணும்னு நினைச்சேன்.

பெரிய அளவுல யாருக்கும் உதவமுடியாது. அதனால, இந்த சமூகத்தால் கசக்கி வீசப்பட்ட மனநலம் பாதித்த ஜீவன்களை தேடிப்போய் சேவை செய்ய ஆரம்பிச்சேன். ஊர் ஊராகச் சென்று மனநலம் பாதித்தவர்களை தேடிப்பிடித்து அவங்களுக்கு முடிதிருத்தம் செய்து விடுவேன். அந்த நேரத்தில கையில் இருக்கிற காசைப் பொருத்து அவங்களுக்கு ஏதாச்சும் சாப்பிட வாங்கிக் குடுத்துட்டு கெளம்பிருவேன்.

திருப்பூர் ஏரியாவுல, அரசு விடுதிகளில் தங்கிப்படிக்கும் மாணவர்களுக்கு நாப்பது நாளைக்கு ஒருமுறை இலவசமா முடிதிருத்தம் செய்துவிடுறேன். இடையில, இதுமாதிரி ஆதரவற்ற ஜீவன்கள் ரோட்டோரம் விழுந்து கிடந்தா அவங்களயும் தூக்கி எடுத்து ஆஸ்பத்திரியில கொண்டுபோய் சேர்த்துட்டு வருவேன். என்னால முடிஞ்ச இந்த சின்ன சேவைய கடந்த 12 வருஷமா செய்துட்டு வரேன்..’’ அடக்கமாக சொன்னார் தெய்வராஜ்.

கோவை, திருச்சி, திண்டுக்கல், ஈரோடு பல மாவட்டங்களைச் சுற்றி வந்திருக்கும் தெய்வராஜ், இதுவரை இப்படி பத்தாயிரம் தெய்வக் குழந்தைகளுக்கு முடிதிருத்தம் செய்திருக்கிறாராம் - இலவச சேவையாக!

‘‘சமூகத்தால் கைவிடப்பட்ட குழந்தைகள், மனநலம் பாதிக்கப்பட்டவங்க மேல எப்பவும் தனி கவனம் செலுத்துவேன். இவங்கதான் உறவுகள் இருந்தும் இல்லாமல் இருப்பவர்கள். மாசத்தில் நான்கு நாள் ஒதுக்கி ஒவ்வொரு மாவட்டமா கிளம்பிப் போய் மனநலம் பாதித்தவங்கள கண்டுபிடிச்சு முடிதிருத்தம் பண்றேன். என் சேவையை பார்த்துட்டு நண்பர்கள் 15 பேர் என்கூட கைகோத்துட்டாங்க.

சிலருக்கு இது சாதாரணமா தெரியலாம். கத்தரிக்கோல் உள்ளிட்ட சாமான்களை வைச்சுக்கிட்டு, மனநலம் பாத்தித்தவங்கள அத்தனை சுலபமா நெருங்க முடியாது. அவங்கள தாஜாபண்ணி வேலையை முடிக்கிறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிரும். பல இடங்கள்ல அடிகூட வாங்கிருக்கோம்.

மாவட்டவாரியா ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம், முதியோர் இல்லங்களில் உள்ளவர்களுக்கும் அரசு மருத்துவமனைகளில் உள்ள ஆதரவற்ற தொழுநோயாளிகளுக்கும் அவ்வப்போது முடிதிருத்தம் செஞ்சு விடுவோம். இந்தச் சேவைக்காக யாரிடமும் நாங்க கைநீட்டி காசு வாங்குவதில்லை. எங்க சம்பளத்துல ஒரு பகுதியைத்தான் செலவு செய்கிறோம்’’ என்கிறார் தெய்வராஜ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x