Published : 28 Apr 2017 10:08 AM
Last Updated : 28 Apr 2017 10:08 AM

ஷா ரா: "ஸ்பீல்பெர்க்கே படம் எடுத்தாலும் கெட்ட வார்த்தையில் திட்டுவார்கள்"

‘விமர்சகர்களை எல்லாம் இப்படிக் கிழிக்கிறீர்களே. அவ்வளவு பெரிய ஆளா நீங்கள்’ என்று போனில் கிண்டல் செய்தபோது, ‘அப்படித் தான் செய்வேன்’ என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டார். மறுபடியும் தொலைபேசியில் பிடித்து “என்ன சார்.. இப்படிக் கோபப்படுகிறீர்கள். உங்களுடைய பேட்டி வேண்டும்” என்று ஷா ராவைச் சமாதானப்படுத்திவிட்டுப் பேசியதிலிருந்து...

நடிகர், யூடியூப் வீடியோ எனப் பல வேலைகளைச் செய்கிறீர்கள். சென்னைக்கு ஏன் வந்தீர்கள்?

திரைப்பட இயக்குநராகும் ஆசையில் வந்தேன். விஸ்காம் படித்துள்ளேன். எஃப்.எம்மில் ஆர்ஜேவாகப் பணிபுரிந்தேன். ஒரு கட்டத்தில் ‘என்னடா பேசிக்கிட்டே இருக்கணும்னு சொல்றாங்க’ என்று வேலையை விட்டுவிட்டேன். நாளைய இயக்குநருக்கு முன்பே நானும் நண்பன் விஜய்யும் தனித்தனியாகப் படம் இயக்கினோம். அதில் சம்பாதித்த காசு முழுவதையும் விட்டுவிட்டேன். அதற்குப் பிறகு அப்பாவின் நிறுவனத்தில் சில வருடங்கள் பணிபுரிந்தேன். அதுவும் போர் அடித்தது. துபாய்க்குச் சென்று ஆர்ஜேவாகப் பணிபுரிந்தேன். அதுவும் போரடித்தவுடன் யூடியூப் வீடியோக்கள் உருவாக்குவதில் ஈடுபட்டேன்.

நீங்கள் இயக்கியதில் முதலில் ‘அன்பே என் புஷ்பா’ வீடியோதான் வைரலா?

இப்போதுதான் அது வைரல். அப்போது அப்லோட் செய்துவிட்டு 1000 பேர் பார்ப்பதற்கு 6 மாதங்கள் ஆனது. தினமும் ஒவ்வொருவர் பார்த்திருப்பார்கள். முதலில் ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ என்று ஒரு படம் எழுதிவிட்டு, அதற்கு ட்ரெய்லராக வீடியோ ஒன்று செய்தோம். அதுதான் எங்களுடைய முதல் வைரல். அப்போதே 60 ஆயிரம் பேர் பார்த்தார்கள். அது பெரிய விஷயம்.

இனிமேல் நடிப்பா, இயக்கமா?

இயக்கம்தான். ஏதாவது நடிக்கலாம் என்றபோது, என்னை நம்பி யாரும் வாய்ப்பு கொடுக்கவில்லை. அதனால் நானும், விஜய்யுமே நடித்து வீடியோ செய்தோம். நான் நடிக்கும் போது அவனும், அவன் நடிக்கும்போது நானும் ஒளிப்பதிவு செய்தோம். எங்களுடைய புகைப்படங்களைக்கூட வெளியே கொடுக்கவில்லை. ஏனென்றால், எங்கள் இருவருக்குமே அசிங்கமாக இருக்கிறோம் என்ற தாழ்வு மனப்பான்மை இருந்தது. சில வீடியோக்கள் வழியே நடிக்க வாய்ப்பு வந்தது. தற்போது அனைவருமே நடிக்கத்தான் கேட்கிறார்கள். ஆனால் கதை எழுதிவிட்டு, இயக்குவதற்குத் தான் வாய்ப்பு தேடிக் கொண்டிருக்கிறேன்.

உங்களுடைய ‘காற்று வெளியிடை என்றால் என்ன’ வீடியோவுக்கு நிறைய வாழ்த்துகள் வந்ததாமே...

அந்த வீடியோ மற்றும் ஃப்ரைடே ஃபேக்ட்ஸ் வீடியோக்கள் பற்றி சிவகார்த்திகேயன் தொலைபேசியில் நீண்ட நேரம் பேசினார். சூரி சார் பேசினார். சி.விகுமார் சார் ஃப்ரைடே ஃபேக்ட்ஸ் வீடியோக்கள் சரியாக இருப்பதாகச் சொன்னார். ‘காற்று வெளியிடை’ தயாரிப்பு தரப்பிலிருந்து பலர் போன் செய்தார்கள். படத்தைவிட நீங்கள் செய்திருக்கும் வீடியோ நன்றாகவுள்ளது என்றார்கள் சிலர்.

ஃப்ரைடே ஃபேக்ட்ஸ் வீடியோக்களாலும் படங்களைக் கலாய்ப்பதாலும் எதிர்ப்புகள் வருமே. எப்படிச் சமாளிக்கிறீர்கள்?

நீங்கள் போன் செய்யும் போதுகூட, முதலில் கட் பண்ணினேனே, அப்படித்தான் சமாளிக்கிறேன். ஜியோ வந்ததிலிருந்து ஸ்பீல்பெர்க்கே படம் எடுத்தாலும், அதைக் கெட்ட வார்த்தையில் திட்டுவதற்கு ஒரு கும்பல் உருவாகியுள்ளது. கமெண்ட்டில் வந்து திட்டும்போது, “இஷ்டமிருந்தால் பாருங்கள். இல்லாவிட்டால் போங்கள்” என்று பதில் தருவது என் வழக்கம்.

அரசியல் கலாய்ப்பு வீடியோக்களை அதிகமாக உருவாக்கவில்லையே ஏன்?

அரசியல் சார்ந்த வீடியோக்கள் செய்யும்போது, கட்சி சார்ந்து மிரட்டல்கள் வரும். நாம் கட்சி சார்ந்து ஒரு வீடியோ வெளியிட்டால், சிலர் வீடியோக்கள் செய்தவர்களை நாயகன் மாதிரி எண்ணிக் கொள்கிறார்கள். அடுத்த நாளே வேறு ஒரு பாணியில் வீடியோ வெளியிட்டால் “நீ எப்படி இப்படிச் செய்யலாம்” எனச் சண்டைக்கு வருகிறார்கள். நல்லது பேசினால் நல்லது மட்டுமே பேச வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். ‘முட்டா புன்னகை’ என்ற யூடியூப் சேனலில் சில கிண்டல் வீடியோக்களை வெளியிட்டுவருகிறேன்.

உங்களுடைய நடிப்பை மற்றவர்கள் பாராட்டும்போது என்ன நினைப்பீர்கள்?

நன்றாக நடிக்கிறேன் என்ற நம்பிக்கை எனக்கு வந்ததில்லை. இயக்குநர்கள் சொல்கிறார்கள், செய்கிறேன். அவ்வளவுதான். சூப்பராக நடித்துள்ளீர்கள் என்று சொல்லும்போது, “இதெல்லாம் நல்லதுக்கா கெட்டதுக்கா? என்ன நடிப்பைப் பார்த்துவிட்டார்கள் இப்படிப் பேசுகிறார்கள்” என்று சிரிப்பு வரும். அந்த அளவுக்கு எல்லாம் நடிப்பில் இன்னும் வளரவில்லை நான் என்பது எனக்குத் தெரியும்.

இன்னும் நமக்குச் சரியாக வாய்ப்பு அமையவில்லையே என்ற வருத்தம் உள்ளதா?

கண்டிப்பாக இருக்கிறது. எம்.ஜி.ஆர். சார், கமல் சார், சிம்பு சார் மாதிரியெல்லாம் நடிப்பது வீடியோக்களுக்கு வேண்டுமானால் பொருத்தமாக இருக்கும். ஒரு படம் என்றால் அதற்கு வேறு மாதிரி இருக்க வேண்டும். ஆனால், கமல் சார் மாதிரி இமிட்டேட் செய்து நடிக்கக் கேட்கிறார்கள். அதெல்லாம் எனக்குப் பிடிக்கவில்லை. அனைத்துப் படங்களிலும் வேறு ஒருவர் மாதிரி நடிக்க வேண்டும் என்றால் எனது திறமை என்னவாகும்? அந்த மாதிரி வரும் வாய்ப்புகளைத் தவிர்த்துவிடுகிறேன். நல்ல கதாபாத்திரங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறேன்.

யூடியூப் வீடியோக்கள் பற்றிக் குடும்பத்தினர் என்ன சொல்கிறார்கள்? வருமானம் வருகிறதா?

எங்க வீட்டில் 4 வருடங்கள் கழித்துத் தான் வீடியோவில் ஏதோ செய்து கொண்டிருக்கிறான் என்று தெரியும். இப்போதுதான் வீடியோவை இவ்வளவு பேர் பார்க்கிறார்கள், பாராட்டு கிடைக்கிறது என்று தெரியவந்துள்ளது. அதன் மூலமாகப் பட வாய்ப்பு கிடைக்கிறது என்று தெரிந்துகொண்டார்கள். யூடியூப்பில் ரொம்ப குறைவாகவே சம்பாதிக்கிறேன். யூடியூப்பில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வீடியோக்கள் செய்யவில்லை. விளம்பர நிறுவனங்கள் வந்து நிறைய வீடியோக்கள் செய்யுங்கள் என்ற கேட்டபோதுகூட செய்யவில்லை. படத்தில் நடிப்பது, மற்றவர்களின் சேனல்களுக்கு நடிப்பதன் மூலமாகக் குடும்பத்தை நிர்வகிக்கும் அளவுக்கு வருமானம் வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x