Last Updated : 12 May, 2017 08:35 AM

 

Published : 12 May 2017 08:35 AM
Last Updated : 12 May 2017 08:35 AM

வேலையற்றவனின் டைரி 28 - தீராக்காதல்

கடந்த மாதம், இளையராஜா குறித்த எனது கட்டுரை இந்தத் தொடரில், வெளிவந்தபோது, பலரும் என்னைத் தொடர்புகொண்டு பேசினர். அதில் ஒருவருக்கு 56 வயது. வெளிநாட்டில் தன் மகனோடு இருக்கிறார். ஐந்து நிமிட சம்பிரதாய உரையாடலுக்குப் பிறகு, சட்டென்று ஒரு கணத்தில், தனது நினைவு அடுக்குகளின் அடித்தட்டுகளில் புதைந்துபோன, ஒரு தீராக்காதல் கதையை அவர் சொல்ல ஆரம்பித்தார்.

“காலேஜ் போறப்ப தினம் அவள பஸ்ல பாப்பேன். அவளும் பாப்பா. பஸ்ஸுல போடுற இளையராஜா பாட்டுதான், எங்களுக்கு பேக்க்ரௌண்ட் மியூசிக். ‘ஆயிரம் தாமரை மொட்டுகளே…’ பாட்டு ஆரம்பத்துல, ஒரு தபேலா மியூசிக் வரும். அந்த தபேலா மியூசிக்ல ஒரு காதல் தவிப்பு இருக்கும். அதே மாதிரி அவ பாக்குறப்பல்லாம் தவிச்சுப் போயிடுவேன். தினம் பாப்பா. சிரிப்பா. அவ்வளவுதான். நெருங்கிச் சொல்றதுக்குத் தைரியம் இல்ல. கடைசி வரையிலும் வெறும் பார்வையிலேயே செத்துப்போயிட்ட காதல் அது” என்றவர் சில வினாடிகள் மவுனமாக இருந்தார்.

தொடர்ந்து அவர், “அப்புறம் எனக்கு கல்யாணமாயி, ரெண்டு பசங்க. ஒய்ஃப் இறந்துட்டாங்க. இப்ப என் பெரிய பையன்கூட இங்க இருக்கேன். போன மாசம் அவனுக்குப் பெண் குழந்தை பிறந்துச்சு. என்ன பேரு வைக்கிறதுன்னு என் மகனுக்கும், மருமகளுக்கும் ஆர்க்யூமென்ட். கடைசில மூணு பேர ஷார்ட் லிஸ்ட் பண்ணி அதை ஒரு பேப்பர்ல எழுதி என்கிட்ட கொடுத்து, என்னையே செலக்ட் பண்ணச் சொன்னாங்க. லிஸ்ட்டப் பாத்த எனக்கு அப்படியே சிலிர்த்துடுச்சு. அந்த மூணு பேருல ஒண்ணு, என் காதலி பேரு. அந்தப் பேரையே செலக்ட் பண்ணலாம்ன்னு நினைச்சேன். அப்புறம் திடீர்னு ஒரு யோசனை. கடவுள் என்ன நினைக்கிறார்ன்னு பாப்போம்ன்னு. “நம்ம சீட்டு குலுக்கி போட்டு பேர செலக்ட் பண்ணுவோம்’ன்னு சீட்டு குலுக்கிப் போட்டோம். அவ பேருதான் வந்துச்சு” என்றவரின் குரலில், அந்த 56 வயதிலும் தெரிந்த காதலை என்னால் துல்லியமாக உணர முடிந்தது.

சொல்லாத காதலை, மனதில் சுமந்துகொண்டே திரியும் அவரை மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்க்கிறேன். ஜெயித்த காதல் திருமணத்தோடு முடிந்துவிடுகிறது. சொல்லாத காதல், முடியவே முடியாத ஒரு கனவுபோல், விடியவே விடியாத ஒரு இரவுபோல் வாழ்நாள் முழுவதும் நீடித்துக்கொண்டேயிருக்கிறது.

இப்போதெல்லாம் காதல் வருவது போல் இருக்கும்போதே, ஃபேஸ்புக்கில், ‘இன் எ ரிலேஷன்ஷிப்’ என்று போட்டுவிட்டு, வாட்ஸ்அப்பில், ‘ஐ லவ் யூ” என்று மெசேஜ் தட்டிவிடுகிறார்கள். ஆனால் இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் கல்லூரியிலோ பேருந்துகளிலோ ரயில்களிலோ டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட்களிலோ, ட்யூஷன் சென்டர்களிலோ கடைசி வரையிலும், வெறும் பார்வையால் மட்டுமே வளர்ந்து, செழித்து இறந்த காதல்கள் இங்கு ஏராளம்.

ஆனால், அந்த ஒற்றைப் பார்வையிலேயே, ஆயிரம் ஜாலங்களை நிகழ்த்தும் அபூர்வ சக்தியுடன் ஆண்டவன் பெண்களைப் படைத்திருக்கிறான். காதலனைக் காணும்போது, “வந்துட்டியா?” என்பது போல் ஒரு பார்வை. அவன் புதிய ஆடைகள் அணிந்து வரும்போது, “புது ட்ரெஸ் நல்லாருக்கு” என்பதற்கு விழிகளை உயர்த்தி ஒரு பார்வை. உடல்நலமில்லாமல் இருக்கும்போது, “இப்ப பரவாயில்லையா?” என்று கேட்பதற்கு தலையைச் சாய்த்து ஒரு பார்வை. கிளம்பும்போது, “வரட்டுமா?” என்பது போல் ஒரு பார்வை. இப்படியெல்லாம் பார்க்கிறார்களே என்று அருகில் சென்று காதலைச் சொன்னால், “காட் ப்ராமிஸ் அந்த மாதிரி நான் பாக்கவே இல்ல” என்று தலையில் அடித்து சத்தியம் செய்துவிட்டுக் காணாமல் போய்விடுவார்கள் (இதைத்தான் பசங்க, ‘‘ஏத்தி விட்டு கவுத்துருவாங்க” என்பார்கள்).

பார்வைப் படலம் முடிவுற்றவுடன், புன்னகைப் படலம் ஆரம்பிக்கும். பெண்கள் காதலர்களுக்கு ஒரு புன்னகை, மற்றவர்களுக்கு ஒரு புன்னகை என்று தெளிவாகப் பிரித்து வைத்திருக்கிறார்கள். நெஞ்சில் புத்தகத்தை அணைத்தபடி, உங்கள் அருகில் வரும்வரை, ஒரு சீரான இடைவெளியுடன் கூடிய கொலுசு சத்தத்துடன் வருவார்கள். உங்கள் அருகில் நெருங்கியவுடன் கொலுசு சத்தத்தின் வேகம் சற்றே குறைந்து, உங்களைக் கடக்கும் துல்லிய வினாடியில், உங்களுக்காக ஒரு பிரத்யேகப் புன்னகையைச் சிந்துவார்கள். இந்தப் புன்னகையின் மிகப்பெரிய அதிசயம் என்னவென்றால், அந்தப் புன்னகை உங்களை நோக்கி இருக்காது, அந்தப் புன்னகை நெஞ்சில் இருக்கும் புத்தகங்கள் மீது எய்யப்பட்டிருந்தாலும், அது உங்களுக்கான புன்னகைதான்.

மறுநாளும் நீங்கள் அதே புன்னகையை எதிர்பார்த்தால் அவுட். மறுநாள் அவர்கள் ஜடையை முன்னால் தூக்கிப்போட்டு, நுனிக்கூந்தலை ஒரு முறை பிரித்துப் பின்னிவிட்டு, மீண்டும் ஜடையைப் பின்னால் தூக்கிப்போடுவார்கள். அப்போது அந்த ஜடை பறந்தபடி அவர்கள் தோளைக் கடக்கும்போது, மின்னல் மின்னி மறைவது போல் ஒரு புன்னகை மலரும். இதையெல்லாம்விட ஒரு அற்புதமான புன்னகை இருக்கிறது. உங்களுக்குத் தெரியாமல், அவர்கள் உங்களைப் பார்த்துக்கொண்டிருப்பார்கள். யதார்த்தமாகத் திரும்பி நீங்கள் அதைப் பார்த்துவிடுவீர்கள். இதைப் பார்த்தவுடன் சட்டென்று தடுமாறிப்போய், கண்கள் அலைக்கழிந்து, சரேலென்று கன்னத்தில் பாய்ந்த வெட்கத்துடன், வேகமாகத் தலையைத் திருப்பி, வானத்தைப் பார்த்து சிக்ஸர் அடிப்பது போல் ஒரு புன்னகையை அடிப்பார்கள் பாருங்கள். அட… அட.. அடா…

மேற்கண்ட இந்த பார்வை + புன்னகை ப்ராசஸில், பார்வை மட்டுமே ஒரு ஆறு மாதங்கள் ஓடும். அப்புறம் புன்னகை ஒரு ஆறு மாதத்துக்கு ஓடும். அப்புறம்தான் பேசுவதற் கான முயற்சிகள் ஆரம்பிக்கும். அவர்கள் கல்லூரியில் படிப்பவர்களாக இருந்தால், “நீங்க அசைன்மென்ட் சப்மிட் பண்ணீட்டீங்களா?” என்று அவன் கேட்பதற்குள், நாக்கு உலர்ந்து, தொண்டை வழியே இதயம் வெளியே வரப் பார்க்கும். அதற்கு அவர்கள் ஆறுமாதம் கழித்து, “சப்மிட் பண்ணிட்டேன்” என்று சொல்வார்கள். பதிலுக்கு இவன், “எந்த புக்க ரெஃபர் பண்ணினீங்க?” என்று கேட்பதற்கு ஆறு மாதமாகும். இதற்கிடையே பெண்ணின் அம்மாக்கள், “வர வர உங்க பொண்ணு நடவடிக்கையே சரியில்ல. தனியா உக்காந்து அவ பாட்டுக்குச் சிரிச்சுகிட்டேயிருக்கா” என்றவுடன் அப்பாக்கள் உஷாராகி, மாப்பிள்ளை தேட ஆரம்பிப்பார்கள். பசங்களுக்கு ஒரு மாதிரி தைரியம் வந்து, காதலைச் சொல்லலாம் என்று அருகில் நெருங்கும்போது, பொண்ணு கல்யாணப் பத்திரிகையை நீட்டிவிடுவார்.

ஆனால், இந்தச் சொல்லாத காதலுக்கு, எப்போதும் மனதில் பிரத்யேக இடம் உண்டு. சொல்லப்பட்ட காதலில் பேசி, சிரித்து, சண்டை போட்டு, அழுது, திருமணம் செய்து, பரஸ்பர பலவீனங்கள் தெரிந்து, வீட்டுச் சண்டைகள்… சொந்த வீடு… பிள்ளைகள் படிப்பு… போன்ற விஷயங்களில் தீவிரமாகி, ஏதோ ஒரு கணத்தில், எங்கோ ஒரு இடத்தில் தங்கள் காதலைத் தவற விட்டுவிடுகிறார்கள். ஆனால், சொல்லாத காதல், ஒரு பூஜைக்காகப் பறிக்கப்பட்ட பிரார்த்தனை மலர்கள் போல் பரிசுத்தமானவை. அந்த மலர்கள் வாடுவதற்கு, அவர்கள் ஒருபோதும் அனுமதிப்பதே இல்லை. அந்த வாடாமலர்களைப் பறித்தபோதிருந்த அதே வாசனையுடன், அதே ஈரத்துடன், தங்கள் வாழ்நாள் முழுவதும் சுமந்துகொண்டே அலைகிறார்கள். அதுவே சொல்லாத காதலுக்கு, என்றும் அழியாத ஒரு காவியத்தன்மையை அளிக்கிறது.

- கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: grsnath71@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x