Published : 20 Nov 2015 12:16 PM
Last Updated : 20 Nov 2015 12:16 PM

பாரிஸுக்கு ஐ.எஸ். பொறுப்பு... ஐ.எஸ்.ஸுக்கு..?

ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக தீவிரவாத தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது பாரிஸ் நகரம். முதல் முறை சார்லி ஹெப்தோ கேலிச் சித்திரம் தொடர்பாக. சமீபத்தில் சாந்த் தெனி பகுதியில் நடந்திருக்கும் தாக்குதல் இரண்டாவது முறை. முந்தைய தாக்குதலுக்கு ஐ.எஸ்.தான் காரணம் என்று அரசல் புரசலாகப் பேசப்பட, இந்த முறை நடந்த தாக்குதலுக்கு 'நாங்கள்தான் செய்தோம்' என்று வெளிப்படையாகப் பொறுப்பேற்றுள்ளது ஐ.எஸ்.!

இன்றைய உலகின் மிக முக்கியப் பிரச்சினைகளுள் ஒன்றாக ஐ.எஸ். அமைப்பின் செயல்பாடுகள் இருந்து வருகின்றன. ஒரு பக்கம் சிரியா மற்றும் இராக்கில் உள்நாட்டிலேயே பல்வேறு இன, மதக் குழுக்களிடையே கலவரம் ஏற்பட, இன்னொரு பக்கம் தீவிரவாதத்தை ஒடுக்குகிறேன் என்ற பெயரில் அந்நாடுகளின் அரசுகள் சொந்த குடிமக்களையே துன்புறுத்த, இந்தப் பக்கம் 'ஜிகாதிகள்' என்று ஊடகங்கள் அலற, மேற்சொன்ன காரணங்களால் மேற்கத்திய நாடுகள் பலவும் இன்று 'இஸ்லாமோஃபோயியா'வுக்கு ஆளாகி வருகின்றன.

அத்தனைக்கும் மூலக்காரணமாக ஐ.எஸ்.அமைப்புதான் சுட்டிக் காட்டப்படுகிறது. 'ஆனால் ஐ.எஸ். அமைப்பை அப்படி மேலோட்டமாகப் புரிந்துகொள்ளக் கூடாது. இந்தளவுக்கு ஐ.எஸ். வளர்ந்திருக்கிறதென்றால், அதற்கு மேற்கத்திய நாடுகளே காரணம்' என்று வாதிடுகிறார் நிக்கோலா ஹெனின், தனது 'ஜிகாத் அகாடெமி' புத்தகத்தில்.

ஃபிரான்ஸ் நாட்டில் உள்ள 'லு புவான்', 'ஆர்த் தெலிவிஸ்யோன்' மற்றும் 'ரேடியோ ஃபிரான்ஸ்' உள்ளிட்ட ஊடகங்களுக்கு சுதந்திரப் பத்திரிகையாளராகப் பணியாற்றுபவர் நிக்கோலா ஹெனின். 2013ம் ஆண்டு சிரியாவில் செய்தி சேகரித்துக் கொண்டிருந்தபோது, ஐ.எஸ். அமைப்பினரால் கடத்தப்பட்டு, 2014ம் ஆண்டு விடுவிக்கப்பட்டார்.

இந்த ஆண்டு மே மாதம் 'ஜிகாத் அகாடெமி' புத்தகம் வெளியானது. பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்ட இந்தப் புத்தகத்தை மார்டின் மாகின்சன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். இந்தப் படைப்புக்கு 'ப்ரி து லீவ்ர் ஜியோபொலிடிக்' விருது கிடைத்துள்ளது. 'தான் கடத்தப்பட்ட அனுபவங்களைத்தான் புத்தகமாக எழுதியிருப்பார்' என்று நினைத்து புத்தகம் வாங்கியவர்களுக்கு ஓர் ஆச்சரியம். அந்த அனுபவங்கள் குறித்து எதுவுமே இல்லை.

"என் அனுபவங்களை எழுதுவதை விட, ஐ.எஸ். அமைப்பை நாம் எவ்வாறு புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறேன்" என்று தனது முன்னுரையில் குறிப்பிடுகிறார் ஆசிரியர்.

மிகச் சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் 2003ம் ஆண்டு அமெரிக்கா இராக்கிற்குள் நுழைந்த அன்றுதான் ஐ.எஸ். அமைப்பு பிறந்தது. அதற்கு முன்பு அங்கு ஜிகாதி தீவிரவாதம் இருக்கவில்லை. அமெரிக்காவின் நுழைவுக்குப் பிறகு அங்கு ஜிகாதிகளின் எண்ணிக்கை அதிகமானது. 'ஜிகாதி ஹைவே' என்று அமெரிக்கா தானாக‌ ஒரு வரைபடத்தை வடிவமைத்தது. என்ன ஆச்சர்யம்... அதே இடங்களில்தான் இன்று ஐ.எஸ். ஆதிக்கம் செலுத்தி வருகிறது என்கிறார் ஹெனின்.

சதாம் உசேனை கைது செய்தவுடன் தனது வேலை முடிந்துவிட்டது என்று வெளியேறியது அமெரிக்கா. வெளியுலகத்துக்கும் அப்படித்தான். ஆனால் இராக்கிற்கு அப்படியல்ல. சன்னி, ஷியா பிரிவினருக்கிடையே மோதல்கள் அதிகளவில் ஏற்பட ஆரம்பித்தன. இது சிரியாவுக்கு பரவியது. அங்கு குர்துக்கள், கிறிஸ்துவர்கள், ஷியா, சன்னி, யூதர்கள் என ஒவ்வொரு இனக் குழுவும், மதக் குழுவும் ஒன்றுக்கொன்று மோதலில் ஈடுபட்டன. இறுதியில் சன்னி பிரிவினரின் கையே ஓங்கி, அது ஐ.எஸ். அமைப்பாக உருவெடுக்கிறது.

சிரியாவில் 'அதுக்கும் மேல' என்கிற பாணியில் தீவிரவாதத்தை ஒடுக்குகிறேன் என்ற பெயரில் அரசே மக்களைக் கொன்றது. ஐ.எஸ். அமைப்பு செய்த கொலைகளின் எண்ணிக்கையை விடவும், சிரியா அரசு செய்த கொலைகளின் எண்ணிக்கை அதிகம் என்று புள்ளிவிவரம் தருகிறார் ஹெனின். 'போர் என்பது அங்கு கொள்ளையடிப்பதற்கான ஒரு வழி'யாகவே பார்க்கப்பட்டது என்று அவர் பதிவு செய்கிறார்.

தீவிரவாதிகள், அரசுகள் ஆகியோரிடமிருந்து மக்களைக் காப்பாற்றும் கிளர்ச்சியாளர்கள் என்று அறிவித்துக்கொண்ட அமைப்புகளும் மக்களை கொலை செய்து வந்தன. இதன் காரணமாக சிரியா மக்களுக்கு எந்த அமைப்புகள் மீதும் நம்பிக்கை ஏற்படவில்லை. அதனால்தான் 'கொபேன்' போர் நடைபெற்றபோது மேற்கத்திய நாடுகள் 'தீமைக்கும் நன்மைக்கும் இடையே நடைபெறும் போர்' என்று கூற, சிரியா மக்களோ 'இது இரண்டு தீவிரவாத குழுக்களுக்கு இடையே நிகழும் மோதல்' என்று வெறுமனே கடந்து போனார்கள்.

'மேற்கத்திய தன்மை கொண்டவன்/ள்' என்ற இழிபேச்சுக்கு ஆளாகிவிடக்கூடாது என்பதில் சிரியா கிளர்ச்சியாளர்கள் தெளிவாக உள்ளனர். காரணம் மேற்கத்திய நாடுகள் மீதுள்ள கோபத்தால் அல்ல. மாறாக, மக்களுக்குத் தங்களிடம் உள்ள நம்பிக்கையை இழந்துவிடுவோமோ என்கிற பயம்தான்.

இந்தப் போர்களில் வெற்றி கொள்வதன் மூலம் 'கிலாஃபத்' உலகில் தோன்றிவிட்டது என்று அறிவிக்கும் முயற்சியில் ஐ.எஸ். மிகத் தீவிரமாகப் பணியாற்றி வருகிறது. அந்தப் பணிகளில் ஒன்று இந்த அமைப்புக்கு இளைஞர்களை ஈர்ப்பது. ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமாக இளைஞர்களை ஈர்க்க ஆரம்பித்துள்ளது ஐ.எஸ். இந்தியாவில் இருந்து மட்டும் இப்போது வரை சுமார் 50 இளைஞர்கள் ஐ.எஸ். அமைப்பில் இணைந்துள்ளதாக வரும் தகவல் நம்மை அதிர வைக்கிறது.

ஆனால் இந்த அமைப்பில் சேரும் இளைஞர்கள் யார் என்று பார்த்தால், அவர்களில் பெரும்பாலானோருக்கு சரியான குடும்பம் அமையாதது, உறவுகளால் வாழ்வில் ஏற்பட்ட கசப்பு, தான் ஒரு தவறான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள்தான் என்கிறார் ஹெனின்.

டைகிரிஸ் மற்றும் யூஃப்ரடிஸ் பள்ளத்தாக்குகளில்தான் எழுத்தும், இலக்கியமும், கணிதமும், சட்டமும், வணிகமும் தோன்றின. மருத்துவம், தத்துவம் ஆகிய துறைகளுக்கான அடித்தளமும் இங்குதான் அமைக்கப்பட்டன. இங்குதான் அரசும், அரசாங்கமும் தோன்றின. இராக் மற்றும் சிரியா நாடுகள் மனித குல நாகரிகத்தின் தொட்டில்கள்.

"அத்தகைய பெருமைகளுக்குரிய நாடுகளில்தான் இன்று தீவிரவாதம் தலைதூக்கியுள்ளது. இனியும் வேடிக்கை பார்க்காமல் மேற்கத்திய நாடுகள் தலையிட்டு, தீர்வுகளைக் கண்டறி வேண்டும். நமது வேர்களும் அங்கு நடைபெறும் போர்களில் அழிந்துபோகின்றன. அந்த நாடுகள் அழிந்தால் நாமும் அழிந்துபோவோம்" என்கிற ஹெனின் வார்த்தையில் உண்மையிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x