Last Updated : 02 Jun, 2017 09:56 AM

 

Published : 02 Jun 2017 09:56 AM
Last Updated : 02 Jun 2017 09:56 AM

காமிக்ஸ் தில்லுமுல்லுகள் 09: ஓவிய மேதையை அவமானப்படுத்தலாமா?

நீதிபதி குருசாமி: அமைதி! அமைதி! அமைதி!. இப்போது பிரபலமான ஐரோப்பிய காமிக்ஸ் கதாபாத்திரமான கேப்டன் பிரின்ஸ் பெயரைத் தவறாகப் பயன்படுத்தியதாக சிவகாசி நிறுவனத்துக்கு எதிராகத் தமிழ் காமிக்ஸ் தொடுத்துள்ள வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. இரண்டு வழக்குகள் தொடுக்கப்பட்டிருந்தாலும், இப்போதைக்கு முதல் வழக்கை எடுத்துக்கொள்வோம். சிவகாசி காமிக்ஸ் சார்பாக பாரிஸ்டர் ரஜினிகாந்த்தும், தமிழ் காமிக்ஸ் சார்பாக வக்கீல் கண்ணனும் வாதாடுவார்கள். வாதம் தொடங்கட்டும்.

பாரிஸ்டர் ரஜினிகாந்த் : கனம் கோர்ட்டார் அவர்களே, இதுவரையில் இந்தியாவிலேயே வராத, ஆங்கிலத்திலேயே மொழிபெயர்க்கப்படாத பல பிராங்கோ-பெல்ஜிய காமிக்ஸ் தொடர்களைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தி பெருமை சேர்த்தவர் என் கட்சிக்காரர்.

கண்ணன்: அப்ஜெக்ஷன், யுவர் ஆனர். அவர் தரப்பு வக்கீல் சொல்வது உண்மைதான் என்றாலும், அது இந்த வழக்குக்குத் தேவையில்லாத விஷயம். பிரபலமான கதாபாத்திரங்களின் பெயர்களைப் பயன்படுத்தி உரிமம் பெறாமல் புத்தகம் வெளியிடுவது பற்றியதுதான் வழக்கே.

பாரிஸ்டர் ரஜினிகாந்த்: பழைய கதையெல்லாம் இப்போ வேண்டாம், யங் மேன். இதெல்லாம் 20-25 ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த விஷயங்கள். பழையவற்றை ஏன் இப்போது கிளற வேண்டும்?

கண்ணன்: கனம் கோர்ட்டார் அவர்களே, சட்டம் படித்தவரே இப்படிக் கேட்பது நகைப்புக்குரியது. நீங்கள் 20 ஆண்டுகளுக்கு முன்பாகத் திருடியதை இப்போது ஆதாரத்துடன் நிரூபித்தால், அது பழைய விஷயம் என்று கோர்ட்டும் சட்டமும் ஒதுக்கிவிடுமா என்ன? பால் டெம்பிள் கதைகளைத் தமிழில் ரோஜர் மூர் என்றே அந்நிறுவனம் தொடர்ந்து வெளியிட்டு வந்ததே?

நீதிபதி குருசாமி: அமைதி! அமைதி. கேப்டன் பிரின்ஸ் பற்றிய இந்த வழக்குக்குத் தேவையானவற்றைப் பற்றி மட்டும் நேரடியாக விவாதிக்கவும்.

கண்ணன்: யுவர் ஆனர், அமெரிக்காவில் சக் டிக்ஸன் என்றொரு எழுத்தாளர் இருக்கிறார். பேட்மேன் தொடரில் வரும் பேன் என்ற கதாபாத்திரத்தை உருவாக்கியவரே அவர்தான். அவர் சமீபகாலமாக டெக்ஸ் வில்லர் என்ற இத்தாலிய கௌ-பாய் காமிக்ஸ் தொடருக்கு கதை எழுதிவருகிறார்.

பாரிஸ்டர் ரஜினிகாந்த்: அதற்கும் இந்த வழக்குக்கும் என்ன தொடர்பு?

கண்ணன்: இருக்கிறது யுவர் ஆனர். நீங்கள் எழுதும் முதல் கௌ-பாய் காமிக்ஸ் இதுதானே என்று (வேண்டுமென்றே) சக் டிக்ஸனிடம் கேட்டேன். அதற்கு அவர், இல்லை, 1994-ம் ஆண்டே பிரபல மார்வல் காமிக்ஸ் கதாபாத்திரமான பனிஷர் என்ற தொடரை வைத்து கௌ-பாய் கதையை எழுதி இருக்கிறேன் என்று ஒரு புத்தகத்தை அனுப்பினார். இந்த பனிஷர் மிகவும் பிரபலமான காமிக்ஸ் கதாபாத்திரம். இதை வைத்து ஹாலிவுட் திரைப்படங்களும் தொலைக்காட்சித் தொடர்களும் வந்துள்ளன.

பாரிஸ்டர் ரஜினிகாந்த்: அவர் பனிஷர் தொடருக்குக் கதையை எழுதுவது எவ்வகையில் நம் வழக்குக்குச் சம்பந்தம்?

கண்ணன்: இருக்கிறது, யுவர் ஆனர். சக் டிக்ஸன் எழுதிய பனிஷர் கதையை நமது சிவகாசி காமிக்ஸ் நிறுவனம் 1995-ம் ஆண்டே தமிழில் வெளியிட்டிருக்கிறது.

பாரிஸ்டர் ரஜினிகாந்த்: இது நல்ல விஷயம்தானே? பிரபலமான ஒரு எழுத்தாளரின் கதையை அமெரிக்காவில் வந்த உடனே வெளியிடுவது நமக்கெல்லாம் பெருமைதானே?

கண்ணன்: நம்ம சிவகாசி காமிக்ஸ் நிறுவனம் என்ன செய்தது தெரியுமா? பிரபலமாக இருந்த கேப்டன் பிரின்ஸ் கதையின் ஓவியர் என்று ஓவிய மேதை ஹெர்மானின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி விளம்பரம் செய்து, அப்போது அறிமுகமே இல்லாத ஒரு கதையை தமிழில் வெளியிட்டனர். அதில் நகைமுரண் என்னவென்றால், அப்படி அவர்கள் வெளியிட்டது பிரபல மார்வல் காமிக்ஸ்சின் பனிஷர் கதையை”.

பாரிஸ்டர் ரஜினிகாந்த்: சரி. அதற்கெல்லாம் என்ன இப்போ?

கண்ணன்: கேப்டன் பிரின்ஸ் கதைத் தொடரின் ஓவியர் என்று ஹெர்மானின் பெயரைப் பயன்படுத்தி விளம்பரம் செய்து, ஆதாயம் தேடியது முதல் குற்றம். மார்வல் காமிக்ஸ் கதையை அவர்களுக்கே தெரியாமல், உரிமம் பெறாமல் வெளியிட்டது இரண்டாவது குற்றம். இந்திய காப்பிரைட் சட்டப்படி இவையெல்லாம் தண்டிக்கப்பட வேண்டிய குற்றங்கள். சரி, அது இருக்கட்டும். கேப்டன் பிரின்ஸ் கதைகளைத் தமிழில் வெளியிட்டது தொடர்பான காப்பிரைட் விஷயத்தில் இன்னொன்று இருக்கிறது, தெரியுமா?

நீதிபதி குருசாமி: ஆர்டர், ஆர்டர். அந்த வழக்கை அடுத்து விசாரிக்கலாம். ஆனால், இப்போதைக்கு கோர்ட் இடைவேளைக்காக ஒத்தி வைக்கப்படுகிறது.

தி பனிஷர் – அமெரிக்காவைச் சேர்ந்த மார்வெல் காமிக்ஸின் பிரபலமான கதாபாத்திரம். இந்தக் குறிப்பிட்ட கதையை வரைந்தவர், காலம் சென்ற ஓவியரான ஜான் புஷ்கேமா.



பெர்னார்ட் பிரின்ஸ் ஐரோப்பாவைச் சேர்ந்த பிரபல ஓவிய மேதை ஹெர்மான் உருவாக்கிய பிரபலமான காமிக்ஸ் தொடர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x